ஹோட்டலை மிஞ்சும் சுவையில் அசத்தல் லேயர் பரோட்டா!!

குறைந்த பொருள்களுடன் பரோட்டாவை லேயர் லேயராக மிருதுவாக வீட்டில் தயாரிப்பது எப்படி?
பரோட்டா செய்முறை
பரோட்டா செய்முறைAI image
Updated on

பொதுவாக பரோட்டா என்றாலே கடைகளில் தான் வாங்கி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நம்மில் நிறைய பேருக்கு உள்ளது. ஆனால் மிகக் குறைந்த பொருட்களைக் கொண்டு, சற்று பொறுமையுடன் முயற்சித்தால் ஹோட்டல் சுவையை விட மேலான ருசியுடன், சுகாதாரமான பரோட்டாவை வீட்டிலேயே தயார் செய்ய முடியும். ஹோட்டல் சுவையில் மொறு மொறுப்பான, லேயர் பரோட்டா செய்ய மாவு பிசையும் பொழுது கட்டாயம் இந்த 5 ரகசியங்களை பின்பற்றினால் அசத்தலான பரோட்டா வீட்டிலேயே தயார் செய்துவிடலாம்.

1. சரியான மாவு மற்றும் எண்ணெய் அளவு:

1/2 கிலோ மைதா மாவுக்கு 3 முதல் 4 மேஜைக் கரண்டி எண்ணெய் அல்லது நெய் சேர்க்க வேண்டும். இது மாவை மென்மையாக்கி, பரோட்டாவை மொறுமொறுப்பாக (crispy) வைத்திருக்க உதவும்.

2. ரவை மற்றும் சர்க்கரை சேர்க்கவும்:

மாவு பிசையும் போது மாவின் அளவுக்கு ஏற்ப அதாவது 1/2 கிலோ மாவிற்கு 1 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 1 மேஜைக் கரண்டி வறுத்த ரவை சேர்க்கவும். சர்க்கரை பரோட்டாவிற்கு நல்ல பொன் நிறத்தையும் (golden colour), ரவை நீண்ட நேரம் மொறுமொறுப்புத் தன்மையையும் தரும்.

3. வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது பால்:

மாவை சாதாரண தண்ணீருக்குப் பதிலாக வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது காய்ச்சிய பால் ஊற்றி பிசையவும். இது மாவில் உள்ள குளூட்டனைத் (gluten) தூண்டி மாவை நல்ல ஜவ்வு போல் இழுபடும் தன்மைக்குக் கொண்டு வரும்.

 4. குறைந்தது 10 நிமிட அடித்து பிசைதல்:

மாவை கைகளால் நன்றாக அழுத்தி, சப்பாத்தி கல் அல்லது கவுண்டர் டாப்பில் வீசி அடித்து பிசைய வேண்டும். மாவு கைகளில் ஒட்டாமல் தொட்டால் ஸ்பாஞ்ச் போல மிருதுவாக வர வேண்டும்.

பரோட்டா செய்முறை
பரோட்டா செய்முறைAI image

5. நீண்ட நேரம் ஊற வைத்தல்:

இது மிகவும் முக்கியம். பிசைந்த மாவின் மேல் எண்ணெய் தடவி, ஈரத்துணி போட்டு குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். எவ்வளவு அதிக நேரம் ஊறுகிறதோ அவ்வளவு எளிதாக மாவை வீசவோ அல்லது தேய்க்கவோ முடியும். இதனால் லேயர்கள் மிகவும் அருமையாக வரும். நிறைய நேரம் எண்ணெயில் ஊற விடுவது தான் மெல்லிய அடுக்குகள் வருவதற்கான ரகசியம்.

இப்படி மைதாவை நன்றாக நெகிழ்ச்சியாகப் பிசைந்து, இரண்டு மணி நேரம் நல்லெண்ணையில் ஊற வைத்து, மெல்லிய தாள் போலத் தேய்த்து, விசிறி போல மடித்து வட்டமாக சுருட்டி செய்யும் பொழுது மிருதுவாக, லேயர் லேயராக மொறுமொறுப்பான பரோட்டா வீட்டிலேயே கிடைக்கும்.

மாவு பிசையும் ரகசியம்:

மைதா மாவு -2 கப்

உப்பு - 1 சிறிய ஸ்பூன்(தேவையான அளவு)

சர்க்கரை - 1/2 ஸ்பூன்

ரவை 1 ஸ்பூன்

எண்ணெய் (அ) வெண்ணெய் (அ) நெய் - 2 ஸ்பூன்

தண்ணீர் - மிதமான சூடுள்ள தண்ணீர்

பிசையும் முறை:

சுத்தமான மைதா மாவை எடுத்து நன்கு சலித்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை நல்ல நிறத்தைத் தரும். 2 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது உருக்கிய வெண்ணையை சேர்த்து, மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் அல்லது பால் சேர்த்து நன்கு பிசையவும்.

சப்பாத்தி மாவை விட மிக மென்மையாக பிசைய வேண்டும். குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் கைகளால் நன்கு அடித்து பிசையவும்.

இதையும் படியுங்கள்:
நாவில் கரையும் தித்திப்பு அடை: பலாப்பழம் மற்றும் ராகி அடை ஸ்பெஷல்!
பரோட்டா செய்முறை

பரோட்டா செய்முறை மற்றும் ஊற வைக்கும் முறை:

பிசைந்த மாவை சமமான சிறிய உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை ஒரு அகலமான பாத்திரத்தில் வைத்து, மேலே முழுமையாக எண்ணெய் ஊற்றவும். மாவு குறைந்தது 2 மணி நேரமாவது எண்ணெயில் ஊறுவது அவசியம். அப்போதுதான் பரோட்டா லேயர் லேயராக வரும். மாவை எண்ணெயில் ஊற வைப்பது லேயர்களைத் தரும் என்பதால் இந்த முறையை அவசியம் கடைபிடிக்க வேண்டும். பிறகு மாவை மெலிதாகத் தேய்த்து அல்லது கைகளால் பரப்பி வீச வேண்டும்.

இப்பொழுது அடுப்பில் தோசைக் கல்லை வைத்து நன்கு சூடானதும் அடுப்பை நடுத்தர தீயில் வைத்து ஒவ்வொன்றாகப் போட்டு சுட்டு எடுக்கவும். நெய் அல்லது எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை வைத்து எடுக்க மிகவும் ருசியான மொறு மொறு பரோட்டா வீட்டிலேயே செய்து அசத்தலாம். பரோட்டா சூடாக இருக்கும் பொழுதே அதன் ஓரங்களில் கைகளால் தட்டி (அடித்து) எடுத்தால் லேயர்கள் தனித்தனியாக பிரிந்து அழகாக வரும். இதனை சால்னாவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கல் போன்ற இட்லி இனி வேண்டாம்: பஞ்சு போல் மாவு அரைப்பது எப்படி?
பரோட்டா செய்முறை

பரோட்டாவிலேயே விதவிதமாக பன் பரோட்டா, நூல் பரோட்டா, மலாய் பரோட்டா, சிலோன் பரோட்டா, பொரிச்ச பரோட்டா என்று செய்து அசத்தலாம். மைதா வேண்டாம் என்று நினைப்பவர்கள் கோதுமை மாவிலும் பரோட்டா செய்யலாம். கலர் தான் சிறிது மாறுமே தவிர சுவை அசத்தலாக இருக்கும். செய்துதான் பாருங்களேன்!

விடுமுறை நாட்களிலோ அல்லது விசேஷ நேரங்களிலோ ஹோட்டல் சென்றடையாமல், மிகக் குறைந்த செலவில் உங்களது கைமணத்தில் சுவையான பரோட்டாவை வழங்கி அனைவரையும் மகிழ்விக்கவும்.

logo
Kalki Online
kalkionline.com