
1. அடைக்கு மாவு அரைக்கும்போது, அரிசி, பருப்பு, இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு இவற்றுடன் வெங்காயத் துண்டுகளையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அடை செய்யும் போது, வட்ட வடிவம் கெடாமலும், மெலிதாகவும் வருவதோடு அடை மொறு மொறு வென்றும் இருக்கும்.
2. அடை செய்யும்போது கடலைப் பருப்புக்கு பதிலாக ஒரு டம்ளர் கொள்ளுப்பயறை ஊறவைத்து அரைத்து அடை வார்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
3. அடைக்கு அரைக்கும்போது அரிசி,பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளைக்கிழங்கைப் போட்டு அரைத்தால் அடை ருசியாக இருக்கும்.
4. அடைக்கு மாவு அரைக்க அரிசி, பருப்பு ஊற வைக்கும்போது, இரண்டு ஸ்பூன் ஜவ்வரிசியையும் தனியாக ஊற வைக்கவும். அடை மாவு அரைத்ததும் ஜவ்வரிசியையும் அரைத்து அடை மாவுடன் சேர்த்து விட்டால், அடை கூடுதல் மொறு மொறுப்புடன் சுவையாக இருக்கும்.
5. சலித்த சப்பாத்திமாவை வீணாக்க வேண்டாம். அடை மாவில் கலந்து சுவையான அடை செய்யலாம்.
6. ஒன்றிரண்டு கரண்டி அடைமாவு மிச்சம் இருக்கிறதா? அதை இட்லி தட்டுக்களில் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள். அவை வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒரு கடாயில் தாளித்து, பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள். இதனுடன் வெந்த அடைகளை உதிர்த்துச் ஒரு நிமிடம் கிளறினால் சுவையான வெங்காய பருப்பு உசிலி தயார்.
7. அடைக்கு அரைக்கும் போது பரங்கிப்பிஞ்சு சேர்த்து அரைத்தால் அடை பஞ்சு போல் மெத்தென்று இருக்கும்.
8. பருப்பு அடைக்கு அரைக்கும் போது, மரவள்ளிக் கிழங்கை சேர்த்து அரைத்து அடை வார்த்தால் மேலும் மொறு மொறுப்பாகவும், சுவை யாகவும் இருக்கும்.
9. கார அடை செய்யும்போது நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து வைத்துக்கொண்டு அடை சுட்டால் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, அனைத்து எண்ணெய்களின் சத்தும் கிடைக்கும்.
10. அடைமாவு நீர்த்து விட்டால், சிறிதளவு கார்ன்ஃப்ளேக்ஸ் தூள் கலந்து வார்த்தால் சுவையான, மிருதுவான அடை ரெடி.
11. அடைக்கு அரைக்கும்போது மரவள்ளிக் கிழங்கை உரித்து சில துண்டுகள் சேர்த்து அரைக்கலாம். உருளைக் கிழங்கையும் துண்டுகளாக்கிப் போட்டு அரைக்கலாம். செய்யும் அடை மொறு மொறு வென்று இருக்கும்.