தென்னிந்தியாவின் தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையின் பெருமைகளில் ஒன்று, அங்கு கிடைக்கும் புகழ்பெற்ற குளிர் பானம். வெயிலின் தாக்கத்தைத் தணித்து, உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி தரும் பானங்களில் மதுரை ஜிகர்தண்டா முதலிடம் வகிக்கிறது. கடைகளில் மட்டுமே கிடைக்கும் அந்த பிரத்யேக சுவையை, நாம் வீட்டிலேயே மிக எளிதாகத் தயார் செய்ய முடியும்.
இதிலுள்ள பாதாம் பிசின், நன்னாரி சர்பத் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகின்றன. எந்தவிதமான செயற்கை ரசாயனங்களும் இன்றி, ஆரோக்கியமான முறையில் இந்த பாரம்பரிய பானத்தை நம் வீட்டிலேயே எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க. இந்த பதிவை முழுமையாக படித்து பின்னர் உங்கள் வீட்டில் அப்படியே முயற்சித்துப் பாருங்கள். நிச்சயமாக ஒரிஜினல் மதுரை ஜிகர்தண்டா சுவை உங்கள் நாக்கில் நடனமாடும்.
தேவையான பொருட்கள்:
முழு கொழுப்புள்ள பால் - 1 லிட்டர்
பாதாம் பிசின் - 2 டேபிள் ஸ்பூன்
நன்னாரி சர்பத் - 4 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
மில்க் மெய்ட் கண்டன்ஸ்டு மில்க் - 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணிலா அல்லது ஜிகர்தண்டா ஐஸ்கிரீம் - தேவையான அளவு
செய்முறை!
இந்த பானத்தின் மிக முக்கியமான மூலப்பொருள் பாதாம் பிசின் ஆகும். நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும் இந்தப் பிசினை, முதல் நாள் இரவே ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் அது ஜெல்லி போல நன்றாக உப்பி வந்திருக்கும்.
அடுத்ததாக, பாலைக் காய்ச்சுவது மிக முக்கியமாகும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் முழு கொழுப்புள்ள பாலைச் சேர்த்து, மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். பால் கொதித்து, அதன் அளவு பாதியாகக் குறையும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பால் பாதியாகச் சுண்டியதும், அதில் சர்க்கரை மற்றும் மில்க் மெய்ட் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். கலவை சற்று கெட்டியானதும், அடுப்பை அணைத்துவிட்டு, இந்தப் பாலை நன்றாக ஆறவைத்து, சிறிது நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வது அசல் மதுரை ஜிகர்தண்டா சுவையை நமக்குத் தரும்.
இப்போது அனைத்துப் பொருட்களும் தயாராக உள்ளன. பரிமாறுவதற்கு ஒரு உயரமான கண்ணாடிப் கிளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் அதன் அடியில் இரண்டு ஸ்பூன் ஊறவைத்த பாதாம் பிசினைப் போட வேண்டும். அதன் மேல் இரண்டு ஸ்பூன் நன்னாரி சர்பத்தை ஊற்ற வேண்டும். பின்னர், நாம் காய்ச்சி குளிரவைத்துள்ள கெட்டியான பாலை முக்கால் குவளைக்கு ஊற்றிக் கலக்க வேண்டும்.
இறுதியில், இதன் மேல் குளிர்ந்த வெண்ணிலா ஐஸ்கிரீம் அல்லது கடைகளில் கிடைக்கும் ஏதாவது ஐஸ்கிரீமை வைத்துப் பரிமாறினால், சுவை அருமையாக இருக்கும். விருப்பப்பட்டால், இதன் மேல் சிறிது செர்ரி பழங்கள், பாதாம் துண்டுகளைத் தூவி அலங்கரிக்கலாம்.
இந்த வார இறுதியில் குடும்பத்தினருடன் அமர்ந்து, வீட்டிலேயே ஆரோக்கியமாகத் தயார் செய்த இந்த மதுரை ஜிகர்தண்டா பானத்தைப் பருகி மகிழுங்கள்.