பொதுவாகவே சுரைக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சமைத்தால், பலரும் அதனை விரும்பி உண்பதில்லை. உடல் எடையைக் குறைப்பதற்கும், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்குவதற்கும் சுரைக்காய் மிகச் சிறந்த காய்கறி.
இப்படிப்பட்ட சத்தான காய்கறியை, யாரும் கண்டுபிடிக்க முடியாதவாறு சுவையான முறையில் கோதுமை மாவுடன் சேர்த்து சுரைக்காய் பரோட்டா செய்து கொடுத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தட்டு நிறையக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள். தனியாக எந்தவொரு சைட் டிஷ்ஷும் தேவையில்லாத, மிகவும் மென்மையான இந்த உணவை எப்படிச் சுலபமாகச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
இளம் சுரைக்காய் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி விழுது - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
ஓமம் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி
கல் உப்பு - தேவையான அளவு
நெய் அல்லது சமையல் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை!
இந்த ஆரோக்கியமான உணவைத் தயாரிப்பதற்கு, முதலில் ஒரு பிஞ்சு சுரைக்காயைத் தேர்ந்தெடுத்து, அதன் தோலைச் சீவிவிட்டுப் பொடியாகத் துருவிக்கொள்ள வேண்டும். துருவிய சுரைக்காயில் இயற்கையாகவே அதிக நீர்ச்சத்து இருக்கும் என்பதால், அதனை நன்றாகப் பிழிந்து நீரைத் தனியாக ஒரு குவளையில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவைச் சேர்த்து, அதனுடன் பிழிந்து வைத்துள்ள சுரைக்காய்த் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி விழுது, சீரகம், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் ஓமம் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். ஓமம் சேர்ப்பதால் செரிமானம் சீராவதோடு, உணவிற்கு அருமையான வாசனையும் கிடைக்கும்.
அனைத்து பொருட்களையும் சேர்த்த பிறகு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, உங்கள் கைகளால் நன்றாகப் பிசைய வேண்டும். பிசையும்போது மாவு கெட்டியாக இருந்தால் மட்டும், நாம் பிழிந்து வைத்துள்ள சுரைக்காய் நீரைச் சிறுகச் சிறுகச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ள வேண்டும்.
மாவு மிகவும் தளர்வாகிவிடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பிசைந்த மாவில் இருந்து சிறு உருண்டைகளாக எடுத்து, வழக்கம் போல் மெல்லிய வட்டமாகத் தேய்த்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு தோசைக் கல்லை வைத்து மிதமான தீயில் சூடாக்க வேண்டும். கல் காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள மாவை அதன் மீது போட்டு, இருபுறமும் லேசாக வெந்து வரும்போது சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் விட வேண்டும். பொன்னிறப் புள்ளிகள் தோன்றி, சப்பாத்தி நன்றாக வெந்தவுடன் எடுத்தால் மிகவும் மென்மையான மற்றும் சுவையான சுரைக்காய் பரோட்டா தயார்.
இதற்குத் தொட்டுக்கொள்ள காரமான ஊறுகாய், கெட்டித் தயிர் மட்டும் இருந்தாலே போதுமானது. இந்த ரெசிபியை இன்று உங்கள் வீட்டில் முயற்சித்து பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.