உளுந்து மாவில் இதை சேர்த்தால் போதும்... 10 நிமிடத்தில் கரகரப்பான மெது வடை ரெடி!

மாவு நீர்த்துப் போகாமல், கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காத கரகரப்பான ஹோட்டல் ஸ்டைல் மெது வடை வீட்டிலேயே 10 நிமிடங்களில் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
medu vada recipe மெது வடை
medu vada recipe மெது வடை
Updated on

வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே பஞ்சு போலவும் இருக்கும் மெது வடை என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொள்ளைப் பிரியம். ஆனால், பல வீடுகளில் வடை செய்யும்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை மாவு அதிக எண்ணெயைக் குடித்துவிடுவதுதான். 

எண்ணெய் அதிகம் குடித்த வடையைச் சாப்பிடுவது திகட்டுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. மாவு அரைக்கும் பக்குவத்தில் செய்யும் சிறு தவறுகள்தான் இதற்கு முக்கியக் காரணம். எந்தவிதமான செயற்கை பொருட்களும் இல்லாமல், கடைகளில் கிடைப்பது போன்றே எண்ணெய் குடிக்காத, கரகரப்பான வடையை நமது வீட்டிலேயே மிக சுலபமாக எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • முழு உளுத்தம் பருப்பு - 1 கப்

  • பச்சரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

  • பெரிய வெங்காயம் - 1 

  • பச்சை மிளகாய் - 2 

  • இஞ்சி - 1 சிறிய துண்டு

  • முழு மிளகு - 1 டீஸ்பூன்

  • சீரகம் - 1 டீஸ்பூன்

  • கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

  • பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

  • ஐஸ் தண்ணீர் - மாவு அரைக்கத் தேவையான அளவு

  • சமையல் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை! 

வடை எண்ணெய் குடிக்காமல் இருப்பதற்கு உளுந்தை ஊறவைக்கும் நேரமும், அரைக்கும் முறையும்தான் மிக முக்கியம். உளுந்தை நன்றாகக் கழுவி, சரியாக ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் மட்டுமே ஊறவைக்க வேண்டும்; அதிக நேரம் ஊறினால் மாவு நீர்த்துப் போய் எண்ணெயைக் குடிக்கும். 

மிக்ஸியிலோ அல்லது கிரைண்டரிலோ மாவை அரைக்கும்போது சாதாரண தண்ணீருக்குப் பதிலாக 'ஐஸ் தண்ணீர்' தெளித்து அரைக்க வேண்டும். மாவு சூடானால் அது அதிக எண்ணெயை உறிஞ்சும்; ஐஸ் தண்ணீர் மாவைச் சூடாகாமல் பாதுகாக்கும். மாவு வெண்ணெய் போல பஞ்சாக, அதேசமயம் கெட்டியாக இருக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
செட் தோசைக்கு ஹோட்டல் ஸ்டைல் வடை கறி வீட்லயே செய்வது இவ்வளவு ஈசியா?
medu vada recipe மெது வடை

அரைத்த மாவில் உப்பு, நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் பெருங்காயத் தூள் சேர்க்கவும். இத்துடன் மாவை இறுக்கமாக்கி கரகரப்பைக் கொடுக்க இரண்டு ஸ்பூன் பச்சரிசி மாவைச் சேர்த்து நன்றாகக் காற்று புகும் படி கைகளால் அடித்துப் பிசைய வேண்டும்.

அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து, தாராளமாக எண்ணெய் ஊற்றிக் காய்ச்சவும். எண்ணெய் சரியான சூட்டில் இருக்கிறதா என்பதை அறிய, ஒரு சிறிய துளி மாவை எண்ணெயில் போட்டால் அது உடனடியாக மேலெழும்பி வர வேண்டும்; இதுதான் சரியான பக்குவம். இப்போது ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு, கைகளை லேசாக நனைத்து, எலுமிச்சை அளவு மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து நடுவில் கட்டை விரலால் ஓட்டை போட்டு, சூடான எண்ணெயில் மெதுவாக விடவும்.

இதையும் படியுங்கள்:
சைட் டிஷ் வேண்டாம்… 10 நிமிடத்தில் சுவையான வெங்காய சப்பாத்தி ரெடி!
medu vada recipe மெது வடை

வடையை எண்ணெயில் போட்டவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ள வேண்டும். அதிக தீயில் வைத்தால் வெளியே சீக்கிரம் சிவந்துவிடும், ஆனால் உள்ளே வேகாது. இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு, பொன்னிறமாகச் சிவந்து மொறுமொறுப்பாக மாறியவுடன் எண்ணெயை வடிகட்டிவிட்டு எடுத்தால், கரகரப்பான ஹோட்டல் ஸ்டைல் மெது வடை தயார். 

இதைச் சுடச்சுட தேங்காய் சட்னி அல்லது சாம்பாரில் முக்கிச் சாப்பிட்டால், அதன் சுவை உங்களை வேறொரு உலகத்திற்கே அழைத்துச் செல்லும். இந்த சீக்ரெட் ட்ரிக்குகளைப் பயன்படுத்தி இன்றே உங்கள் வீட்டில் செய்து குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்துங்கள்.

logo
Kalki Online
kalkionline.com