பஞ்சாபி உணவகங்களைக் கடந்து செல்லும் போது, கார்லிக் நாண் வாங்கி சாப்பிடாதவர்கள் இருக்கவே முடியாது. தந்தூர் அடுப்பில் சுடப்படும் அந்த மென்மையான உணவை நாமும் வீட்டில் செய்ய முடியுமா என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கும்.
ஆனால், தந்தூர் அடுப்பு இல்லாமல், நமது சமையலறையில் இருக்கும் இரும்பு தோசைக்கல்லைப் பயன்படுத்தியே, பஞ்சு போன்ற பூண்டு நாண் தயார் செய்ய முடியும். இதற்காக ஈஸ்ட் பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. சரி வாங்க இந்த ரெசிபி எப்படி எளிதாகச் செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 2 கப்
கெட்டித் தயிர் - 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
சர்க்கரை மற்றும் கல் உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - 2 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - 3 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
உருக்கிய வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். அதன்பின், கெட்டித் தயிர் மற்றும் சமையல் எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றிச் சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாகப் பிசைய வேண்டும்.
பிசைந்த மாவின் மீது லேசாக எண்ணெய் தடவி, ஈரத்துணியால் மூடி குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். மாவு நன்றாக ஊறிய பின்பு, அதிலிருந்து சிறிய உருண்டைகளை எடுத்து, நீள்வட்ட வடிவில் மெல்லியதாகத் தேய்த்துக்கொள்ள வேண்டும்.
தேய்த்த மாவின் ஒரு புறத்தில் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் கொத்தமல்லி இலைகளைத் தூவி, அவை மாவில் ஒட்டுவதற்காக ஒரு முறை உருளையால் லேசாக அழுத்தித் தேய்க்க வேண்டும்.
இப்போது மாவின் மறுபுறத்தை திருப்பி, அந்தப் பகுதி முழுவதும் தண்ணீரை நன்றாகத் தடவிக்கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு இரும்புத் தோசைக்கல்லை வைத்து அதிக தீயில் சூடாக்க வேண்டும். கல் காய்ந்ததும், தண்ணீர் தடவிய பகுதியை நேரடியாகக் கல்லில் படும்படி வைக்க வேண்டும்.
இரும்புக்கல் என்பதால் மாவு உடனடியாகக் கல்லோடு ஒட்டிக்கொள்ளும். மாவின் மேற்பரப்பில் சிறிய குமிழிகள் வரத் தொடங்கியவுடன், தோசைக்கல்லை அப்படியே தலைகீழாகத் திருப்பி, நேரடியாக நெருப்பில் படும்படி காட்ட வேண்டும். இவ்வாறு செய்யும்போது அசல் தந்தூர் அடுப்பில் வெந்தது போலவே, மேற்புறம் நெருப்பில் வெந்து லேசான கருகிய நிறத்துடன் அழகாக உப்பி வரும்.
நாண் முழுமையாக வெந்தவுடன், ஒரு கரண்டியைப் பயன்படுத்தித் தோசைக்கல்லில் இருந்து அதனை மெதுவாக எடுக்க வேண்டும். சுடச்சுட இருக்கும்போதே, அதன் மீது தாராளமாக உருக்கிய வெண்ணெயைத் தடவினால், அசல் சுவையுடன் கூடிய பூண்டு நாண் தயாராகிவிடும்.
இதனைப் பனீர் பட்டர் மசாலாவுடன் சேர்த்துப் பரிமாறினால், உணவகங்களுக்குச் செல்வதை அனைவரும் தவிர்த்து விடுவார்கள். மிகவும் ஆரோக்கியமான முறையில் தயார் செய்யப்பட்ட இந்த பூண்டு நாண் ரெசிபியை உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.