புது இரும்பு தோசைக்கல் ஒட்டுதா? முதல் நாளே ஒட்டாமல் முறுகலா வர இத செஞ்சு பாருங்க!

அரிசி கஞ்சி தண்ணீரும் வெங்காயமும் கொண்டு புதிய தோசைக்கல்லை எளிதாகப் பழக்கும் எளிய வழிமுறைகள்
இரும்பு தோசைக்கல்
இரும்பு தோசைக்கல்Gemini image
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on: 

அந்தக் காலத்தில் அனைவரது வீடுகளிலும் தோசைகல் என்பது இன்றியமையாததாக இருந்தது. அதிலும் இரும்பினால் செய்த தோசைக்கல் அதிக வீடுகளில் இடம் பிடித்தது. காரணம் இரும்பு தோசை கல்லால் நமது உடல் நலம் கெடாமல் இரும்பு சத்தும் கிடைக்கும் என்ற நம்பிக்கை. அது மட்டும் இல்லாமல் தோசை முறுகலாக வரும் ருசியாகவும் இருக்கும் என்ற காரணங்களும் உண்டு.

அதன் பின்னான காலங்களில் நவீனமாக நான் ஸ்டிக், இன்டேலியம் என்று தோசைக்கல் விதவிதமான வடிவங்களில் கிடைத்தாலும் அனைவரது சாய்ஸும் இரும்பு தோசைக்கல்லாக தான் இப்போதும் இருக்கிறது. ஆனால் இதில் ஒரே ஒரு விஷயம். இரும்பு தோசைக்கல் வாங்கியதும் அதை பழக்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் என்பதால் பெரும்பாலோர் அதை தவிர்த்து நான் ஸ்டிக் தோசை கல்லை உபயோகிக்கிறார்கள். ஆனால் ஆரோக்கியத்துக்கு உகந்த இரும்பு தோசைக்கல்லை ஒரு முறை பழக்கி விட்டால் போதும். காலத்துக்கும் நாம் அதில் சுவையான தோசையை சாப்பிடலாம் என்பதுதான் உண்மை.

இரும்பு தோசைக்கல்லில் தோசை ஒட்டிப் பிடிப்பதற்கு முக்கிய காரணம் கல்லை சரியாக பழக்கவில்லை அல்லது வெப்பநிலை அளவு மற்றும் எண்ணெய் சரியாக இல்லாதது தான் எனலாம்.

தோசை கல்லில் ஒட்டுவதற்கான 7 முக்கிய காரணங்களாக இவைகள் கூறப்படுகிறது.

1. புதிய கல் என்பதால் இரும்புக் கல்லின் மேற்பரப்பில் இயற்கையான நான் ஸ்டிக் (non-stick ) படலம் இன்னும் உருவாகாமல் இருக்கும்.

2. கல் தேவைக்கு மேல் அதிக சூடாகிவிட்ட போது மாவை ஊற்றியவுடன் அடிப்பகுதி உடனே காய்ந்து ஒட்டலாம்.

3.அதேபோல் கல் குறைவான சூட்டில் இருக்கும் போது தோசை ஊற்றினால் மாவு கல்லில் ஒட்டிக்கொண்டு சரியாகப் பிரியாது.

4. எண்ணெய் சரியாக தடவவில்லை எனில் தோசை வராது. குறிப்பாக புதிய கல்லில் இது முக்கியம்.

5. கல்லை சோப்பு/டிஷ்வாஷ் லிக்விட் கொண்டு தேய்த்துக் தேய்த்துக் கழுவுவதால் கல்லில் ஏற்கனவே உருவாகியிருந்த சுவையூட்டி (seasoning) படலம் அகன்று மீண்டும் ஒட்டலாம்.

6. மாவு மிகவும் நீரோடு நீர்த்து இருப்பதாலும் ஒட்டும் தன்மையை அதிகரிக்கலாம்.

7. அடிப்பகுதி நன்றாக வெந்த பிறகே தோசை எளிதாக வரும். ஆனால் அவசரத்தில் தோசையை சீக்கிரம் திருப்ப முயற்சிப்பதாலும் தோசை வராது.

உடனடியாக சரிசெய்யும் எளிய முறை

கல் சூடாக இருக்கும் போதே சிறிது எண்ணெய் , நறுக்கிய வெங்காயம் அல்லது உருளைக்கிழங்கு துண்டால் நன்றாகத் தேய்த்து 1–2 நிமிடம் கழித்து மிதமான சூட்டில் மாவை ஊற்றவும். முதல் சில தோசைகள் சரியாக வராமல் இருப்பது சாதாரணம். தொடர்ந்து பயன்படுத்தும்போது எண்ணெய் படலம் உருவாகி, இரும்புக் கல் இயற்கையாகவே (non-stick) ஒட்டாத தன்மை பெறும். இது ஏற்கனவே பழக்கி வைத்த தோசைக்கல்லுக்கு பொருந்தும்.

புதிய இரும்பு தோசைக்கல்லில் (Cast Iron Tawa) முதல் முறை ஊற்றும்போதே தோசை ஒட்டாமல், மொறுமொறுப்பாக வர அதனைச் சரியாகப் பழக்குவது (Seasoning) மிகவும் அவசியம். புதிய இரும்புக் கல்லை தோசை ஒட்டாமல் இருக்க முதல் நாளிலேயே எப்படி பழக்குவது? என்பதுதான் தற்போது பலரது கவலை. அதற்கான வழிமுறைகள் இங்கு.

இரும்பு தோசைக்கல்
இரும்பு தோசைக்கல்Gemini image

1. தோசைக் கல் வாங்கியதும் முதலில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள். புதிய கல்லில் இருக்கும் தேவையில்லாத கெமிக்கல் பூச்சுகள் மற்றும் துருவை நீக்க வேண்டும். இதற்கு, பாத்திரம் துலக்கும் சோப் மற்றும் நார் (Scrubber) கொண்டு கல்லை நன்றாகத் தேய்த்துக் கழுவவும். பின்னர் ஒரு துணியால் ஈரப்பதம் இல்லாதவாறு நன்றாகத் துடைத்து உலர்த்துங்கள்.

2. கல்லின் இரும்பு வாசனையை மாற்றவும், அதில் உள்ள துளைகளை அடைக்கவும் இது உதவும். துடைத்த கல்லில் வடித்த கஞ்சித் தண்ணீர் அல்லது அரிசி கலைந்த நீரை ஊற்றி 2 முதல் 3 நாட்கள் அப்படியே வைக்கவும். தினமும் பழைய தண்ணீரை மாற்றிவிட்டு புது தண்ணீரை ஊற்ற வேண்டும்.

3. இரண்டு நாட்களுக்குப் பிறகு தண்ணீரை ஊற்றிவிட்டுக் கல்லை நன்றாகக் கழுவி, துடைக்கவும். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து, கல்லில் நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் நன்றாகத் தடவவும். மிதமான குறைந்த தீயில் எண்ணெயை 5–10 நிமிடங்கள் சூடாக்கவும். எண்ணெய் லேசாக புகை வரும். அது இயல்பானது. பயப்படாமல் அடுப்பை அணைத்து கல்லை ஆற விடுங்கள்.

4. அதன் பின் அடுப்பில் மிதமான தீயில் 2–3 நிமிடங்கள் வைத்து கல்லை சூடாக்குங்கள். கல் முழுவதும் காய்ந்திருக்க வேண்டும் என்பது முக்கியம். கல் காய்ந்த பிறகு கொஞ்சம் அதிக எண்ணெய் தடவுங்கள். சுமார் ½–1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றுங்கள். அந்த எண்ணெய் துணி கொண்டு கல் முழுவதும் மிக மெல்லிய படலமாக தேய்க்கவும்.

எண்ணெய் மிகவும் அதிகமாக இருக்கக்கூடாது. அதே சமயம் குறைவாகவும் இருக்கக் கூடாது. இதே போல 2–3 முறை செய்யுங்கள். கல் சற்று ஆறியதும் அதிகப்படியான எண்ணெயைத் துடைக்கவும். மீண்டும் மெல்லிய எண்ணெய் படலம் தடவி சூடாக்கவும். இப்படிச் செய்வதால் கல்லில் ஆரம்ப எண்ணெய் படலம் (seasoning) உருவாகும்.

5. வெங்காயம் வதக்குதல் (மிக முக்கியம்)கல் ஆறிய பிறகு, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும். பெரிய வெங்காயத்தை பாதியாக வெட்டி, அதை ஒரு ஸ்பூனில் குத்தி கல்லின் எல்லா இடங்களிலும் நன்றாகத் தேய்க்கவும். அல்லது, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கல்லில் போட்டு கருகும் வரை நன்றாக வதக்கி அதை அப்படியே தூக்கி எறிந்துவிடவும். வெங்காயம் கல்லில் உள்ள நச்சுக்களை உறிஞ்சி, ஒட்டாத தன்மையைக் கொடுக்கும்.

6. வெங்காயத்தை வதக்கிய பிறகு கல்லை மீண்டும் கழுவ வேண்டாம். ஒரு துணியால் மட்டும் துடைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து, லேசாகத் தண்ணீர் தெளித்து, எண்ணெய் தடவவும். முதல் தோசையைச் சற்று தடிமனாக ஊத்தப்பம் போல ஊற்றவும். இது கல்லில் உள்ள மீதி எண்ணெயையும் உறிஞ்சிக் கொள்ளும். கழிவுகள் ஒட்டும் இந்த தோசையை சாப்பிட வேண்டாம்.

இதற்கு அடுத்தடுத்து ஊற்றும் தோசைகள் அனைத்தும் ஒட்டாமல் அழகாக எடுக்க வரும்.

இதையும் படியுங்கள்:
வெங்காயம் முளைக்காமல் இருக்க சிம்பிள் ட்ரிக்... இல்லத்தரசிகளுக்கு சூப்பர் டிப்ஸ்!
இரும்பு தோசைக்கல்

தோசை சுடும் முறை

முதல் தோசை ஊற்றும்போது கல்லை மிதமான தீயில் சூடாக்குங்கள். சில துளி தண்ணீர் தெளிக்கவும்.

தண்ணீர் சீராகச் சத்தமிட்டு ஆவியாக வேண்டும்; உடனடியாக கடுமையாக ஆவியாகக்கூடாது. மீண்டும் சிறிது எண்ணெய் தடவி, பின்னர் மாவை ஊற்றுங்கள்.

முதல் தோசையை சற்று மொத்தமாக சிறியதாகப் போட்டு சோதித்துப் பாருங்கள்.

தோசை ஒட்டிவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஒட்டிய தோசையை பலமாகச் சுரண்ட வேண்டாம். தீயைக் குறைக்கவும். மேலும் சில துளி எண்ணெய் விடவும்.

துணி அல்லது வெங்காயத் துண்டால் கல்லைத் துடைக்கவும். 1–2 நிமிடங்கள் மீண்டும் சூடாக்கவும். நீரைத் தெளித்து ஆவியானதும் மீண்டும் சிறிது எண்ணெயை பரவலாகத் தடவி அடுத்த தோசையை போடவும். சில தோசைகள் பிய்ந்து போனால் பதட்டம் வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
முதல் தோசையே கல்லில் ஒட்டுகிறதா? இந்த சின்ன வெங்காய ட்ரிக் செஞ்சு பாருங்க!
இரும்பு தோசைக்கல்

ஒவ்வொரு முறையும் எண்ணெயை அதிகமாகத் தடவுவது நல்லது அல்ல. இயற்கையாக உருவாகும் மெல்லிய எண்ணெய் படலம், சரியான சூடு, தொடர்ந்து பயன்படுத்துவது தான் இரும்புத் தோசைக்கல்லை இயற்கையாக ஒட்டாத கல்லாக மாற்றும்.

தோசைக்கல்லுக்கு தொடர் பராமரிப்பு இருந்தால் காலத்துக்கும் முறுகலான தோசை நிச்சயம். பராமரிப்பு முறைகள் இங்கு.

தோசைக்கல்லைப் பயன்படுத்திய பிறகு, சோப் போட்டு அடிக்கடி கழுவக் கூடாது. வெறும் தண்ணீர் மற்றும் மென்மையான ஸ்பாஞ்ச் கொண்டு கழுவவும். கழுவிய பின் துருப்பிடித்துவிடும் வாய்ப்பு உள்ளதால் ஈரத்தோடு வைக்கக் கூடாது.

துணியால் துடைத்து, லேசாக எண்ணெய் தடவி எடுத்து வைக்கவும். குறிப்பாக எண்ணெய் படலம் முழுவதுமாக அகலும் படி சுத்தமாக சுரண்டி எடுத்தால் அடுத்த முறை தோசை ஊற்றும்போது முன் சொன்ன வழிமுறைகள் உதவும்.

புதிய இரும்பு தோசைக்கல்லை முதல் நாளிலேயே சரியாகப் பழக்கி, உணவகங்களில் தருவது போல முறுகலான, சுவையான தோசைகளை ஆயுட்காலம் முழுவதும் ஒட்டாமல் சுட்டு எடுக்கும் நுட்பத்தை வாசகர்கள் அறிந்துகொள்வார்கள்.

logo
Kalki Online
kalkionline.com