பாவ் பாஜி, வடா பாவ் சுவையை மிஞ்சும் குஜராத்தி தபேலி... வீட்டிலேயே செய்வது இவ்வளவு எளிதா?

மாலை நேரப் பசியைத் தீர்க்கும் இனிப்பும் காரமும் கலந்த அசல் குஜராத்தி தபேலி சுலபமாக எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
குஜராத்தி தபேலி gujarati dabeli
குஜராத்தி தபேலி gujarati dabeliGemini Image
Updated on

இந்தியாவின் பிரபலமான தெருவோர உணவுகளில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த உணவுகள் முற்றிலும் வித்தியாசமானவை. குறிப்பாக, கச்சி பகுதியில் தோன்றிய சுவையான ஒரு சிற்றுண்டிதான் இந்த குஜராத்தி தபேலி. வடா பாவ், பாவ் பாஜி போன்று இதுவும் பன் கொண்டு செய்யப்படும் உணவு என்றாலும், இதன் சுவை முற்றிலும் மாறுபட்டது. 

இனிப்பு, காரம், புளிப்பு என அனைத்துச் சுவைகளும் ஒருங்கே அமைந்த இந்த உணவை, மாதுளை முத்துக்கள் மற்றும் வேர்க்கடலை சேர்த்துச் சாப்பிடும்போது சுவை அலாதியாக இருக்கும். கடைகளில் விற்கப்படும் அதே அசல் சுவையில், வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே இதனை எப்படி மிக எளிதாகத் தயார் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • பாவ் பன் - 4

  • வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 கோப்பை

  • தபேலி மசாலா - 3 மேஜைக்கரண்டி

  • புளிச்சட்னி - 3 மேஜைக்கரண்டி

  • பூண்டு காரச் சட்னி - 2 மேஜைக்கரண்டி

  • வறுத்த மசாலா வேர்க்கடலை - 3 மேஜைக்கரண்டி

  • மாதுளை முத்துக்கள் - 1/4 கோப்பை

  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கோப்பை

  • ஓமப்பொடி - 1/4 கோப்பை

  • வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

  • கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

  • சமையல் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

குஜராத்தி தபேலி gujarati dabeli
குஜராத்தி தபேலி gujarati dabeliGemini Image

செய்முறை! 

இந்த உணவின் முழுமையான சுவையும் அதில் சேர்க்கப்படும் உருளைக்கிழங்கு மசாலாவில்தான் அடங்கியுள்ளது. முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிச் சூடாக்க வேண்டும். 

எண்ணெய் காய்ந்ததும், அதில் தபேலி மசாலாவைச் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும். மசாலா கருகிவிடாமல் இருக்க, அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி புளிச்சட்னி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கிளற வேண்டும். 

இதையும் படியுங்கள்:
நாக்கில் எச்சில் ஊறும் அந்தமான் ஸ்டைல் மாங்காய் 'கட்டா மிட்டா'! - சீக்ரெட் ரெசிபி!
குஜராத்தி தபேலி gujarati dabeli

மசாலாவின் பச்சை வாசனை மாறியவுடன், வேகவைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். காரம் மற்றும் இனிப்புச் சுவை உருளைக்கிழங்கில் சீராக இறங்கும் வரை மிதமான தீயில் வைத்து வதக்கி, அடுப்பை அணைத்துவிட வேண்டும். 

இப்போது தயார் செய்யப்பட்ட இந்த மசாலாவை ஒரு தட்டில் தட்டையாகப் பரப்பி, அதன் மீது வறுத்த மசாலா வேர்க்கடலை, மாதுளை முத்துக்கள், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரித்துக் கொள்ளவும். இதுவே அசல் குஜராத்தி தபேலி செய்வதற்கான பிரத்யேக மசாலாவாகும்.

அடுத்ததாக, பாவ் பன்களை எடுத்து, அவற்றை முழுமையாகத் துண்டிக்காமல் நடுவில் மட்டும் மெதுவாக வெட்டிக்கொள்ள வேண்டும். வெட்டிய பன்னின் ஒரு புறம் காரமான பூண்டுச் சட்னியையும், மறுபுறம் இனிப்புப் புளிச்சட்னியையும் தடவ வேண்டும். 

இதையும் படியுங்கள்:
10 நிமிடத்தில் சமையல் முடிக்கும் மேஜிக் இன்ஸ்டன்ட் மசாலா விழுதும் பொடியும்!
குஜராத்தி தபேலி gujarati dabeli

இதன் நடுவில் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவைத் தாராளமாக வைக்க வேண்டும். அத்துடன் சிறிது வெங்காயம், மாதுளை மற்றும் வேர்க்கடலையைச் சேர்த்து பன்னை மூடிக் கொள்ளவும். 

இறுதியாக, அடுப்பில் ஒரு தோசைக் கல்லை வைத்து, அதில் சிறிதளவு வெண்ணெய் தடவிச் சூடாக்க வேண்டும். கல் காய்ந்ததும், தயார் செய்து வைத்துள்ள பன்களை அதன் மீது வைத்து, இரண்டு புறமும் மிதமான தீயில் பொன்னிறமாகச் சுட்டெடுக்க வேண்டும்.

பன்கள் லேசான கரகரப்புடன் வந்தவுடன், அதனை எடுத்து அதன் ஓரங்களில் ஓமப்பொடியை ஒட்டும்படி சுழற்றி எடுத்தால் நாவில் எச்சில் ஊறவைக்கும் அசல் சுவையிலான குஜராத்தி தபேலி சுடச்சுடத் தயார்.

logo
Kalki Online
kalkionline.com