

தென்னிந்தியர்களின் காலை உணவுப் பட்டியலில் இட்லி, தோசைக்கு அடுத்தபடியாக ஒரு ராஜ மரியாதையுடன் இருப்பது 'காரப் பொங்கல்' தான். குறிப்பாகக் கோவில் பிரசாதமாகத் தரப்படும் பொங்கலுக்கும், கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் பொங்கலுக்கும் ஒரு அலாதியான சுவை இருக்கும்.
ஆனால், அதே பொங்கலை நாம் வீட்டில் செய்யும்போது சில சமயம் உதிரியாகவோ அல்லது ஆறிய பிறகு இறுகிப்போயோ விடுகிறது. இந்தப் பதிவில் பொங்கல் ஆறிய பிறகும் இருகாமல், பஞ்சு போல இருப்பதற்கான சரியான அளவுகளையும், பக்குவத்தையும் பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
தண்ணீர் - 4.5 முதல் 5 கப்
நெய் - 3 முதல் 4 டேபிள் ஸ்பூன்
சமையல் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1.5 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
முந்திரிப் பருப்பு - 15
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை!
பொங்கலின் முதல் சுவையே பாசிப்பருப்பை வறுப்பதில்தான் இருக்கிறது. அடுப்பில் ஒரு வெறும் கடாயை வைத்து, பாசிப்பருப்பைச் சேர்த்து மிதமான தீயில் வாசம் வரும் வரை லேசாக வறுக்க வேண்டும். பருப்பு சிவந்துவிடக் கூடாது. வறுத்த பருப்பையும் பச்சரிசியையும் ஒன்றாகச் சேர்த்து, இரண்டு முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பொங்கல் செய்ய பழைய பச்சரிசி என்றால் இன்னும் சிறப்பாகக் குழைந்து வரும்.
கழுவிய அரிசி மற்றும் பருப்புக் கலவையை ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அரிசி மற்றும் அரை கப் பருப்பிற்கு, பொதுவாக 4.5 முதல் 5 கப் வரை தண்ணீர் ஊற்றினால் பொங்கல் ஆறிய பிறகும் கெட்டியாகாமல் மென்மையாக இருக்கும்.
இதில் தேவையான அளவு உப்பு மற்றும் அரை ஸ்பூன் நெய் விட்டு குக்கரை மூடுங்கள். மிதமான தீயில் குறைந்தது 4 முதல் 5 விசில் வரை விட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள். விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து, சூடாக இருக்கும்போதே ஒரு கரண்டியால் பொங்கலை நன்றாக மசித்து விட வேண்டும்.
பொங்கலின் முழு வாசனையும் நாம் செய்யும் தாளிப்பில்தான் அடங்கியுள்ளது. ஒரு தாளிப்புக் கரண்டியில் 3 ஸ்பூன் நெய் மற்றும் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ச்சுங்கள். எண்ணெய் லேசாகச் சூடானதும் மிளகு, சீரகம் சேர்க்கவும். இவை லேசாகப் பொரிந்ததும் நறுக்கிய இஞ்சி, முந்திரிப் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து முந்திரி பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
அடுப்பை அணைக்கும் முன் பெருங்காயத் தூளைச் சேர்த்து, இந்த வாசனையான தாளிப்பை அப்படியே மசித்து வைத்துள்ள பொங்கலின் மேல் கொட்டிக் கிளறினால் கமகமக்கும் நெய் மணத்துடன், 'காரப் பொங்கல்' தயார்.