மீந்து போன இட்லியை குப்பையில் வீசாதீங்க… 10 நிமிடத்தில் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ரெசிபி பண்ணலாம்! 

மீந்து போன இட்லிகளை குப்பையில் வீசாமல், ஹோட்டல் சுவையில் காரசாரமான கைமா இட்லி வீட்டிலேயே 15 நிமிடங்களில் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
கைமா இட்லி kaima idli recipe
கைமா இட்லி kaima idli recipe
Updated on

kaima idli recipe: காலை அல்லது இரவு நேரங்களில் சமைக்கும் போது, சில சமயங்களில் இட்லி மீந்து விடுவது பல வீடுகளில் வழக்கமான ஒன்றுதான். ஆறிப்போன அந்த இட்லியை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட பலருக்கும் பிடிக்காது. குறிப்பாக குழந்தைகளுக்கு ஆறிய இட்லி என்றால் அறவே பிடிக்காது. மீந்து போன இட்லிகளை வீணாக்காமல், கொஞ்சம் வித்தியாசமாக அட்டகாசமான உணவைத் தயார் செய்ய முடியும். 

அதுதான் உணவகங்களில் அதிக விலை கொடுத்து நாம் வாங்கிச் சாப்பிடும் காரசாரமான கைமா இட்லி. இதைச் செய்வதற்கு எந்தவிதமான சிக்கலான பொருட்களும் தேவையில்லை; நம் வீட்டு சமையலறையில் இருக்கும் வெங்காயம், தக்காளி மற்றும் சில மசாலாப் பொருட்களை வைத்தே வெறும் 15 நிமிடங்களில் செய்துவிடலாம். நாவில் எச்சில் ஊறவைக்கும் இந்த கமகமக்கும் ரெசிபியை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • மீந்து போன இட்லி - 5

  • பெரிய வெங்காயம் - 2

  • தக்காளி - 2

  • பச்சை மிளகாய் - 1

  • இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

  • மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

  • மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்

  • கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

  • தக்காளி கெட்சப் - 1 டேபிள் ஸ்பூன்

  • கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

  • சமையல் எண்ணெய் - பொரிக்க மற்றும் வதக்க

  • உப்பு - தேவையான அளவு

கைமா இட்லி kaima idli recipe
கைமா இட்லி kaima idli recipe

செய்முறை! 

முதலில் மீந்து போன இட்லிகளைச் சிறுசிறு சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இட்லி மிகவும் மென்மையாக இருந்தால், நறுக்குவதற்கு முன்பு ஒரு 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் உதிராமல் பெர்ஃபெக்ட்டாக நறுக்க வரும். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ச்சவும். 

இதையும் படியுங்கள்:
பருப்பு உருண்டை உடையாமல் இருக்க ரகசியம் இதுதான்… அசல் கிராமத்து சமையல்!
கைமா இட்லி kaima idli recipe

எண்ணெய் காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள இட்லித் துண்டுகளைச் சேர்த்து, மிதமான தீயில் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறும் வரை பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள். எண்ணெயில் பொரிக்க விருப்பம் இல்லாதவர்கள், தோசைக் கல்லில் சிறிது நெய் அல்லது எண்ணெய் விட்டு லேசாக வறுத்தும் எடுத்துக்கொள்ளலாம்.

இப்போது மற்றொரு அகலமான கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துப் பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் சுருண்டு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகக் கிளறுங்கள். 

இதையும் படியுங்கள்:
சாதாரண உருளைக்கிழங்கு வறுவலுக்கு குட்பை… ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ரெசிபி இதோ!
கைமா இட்லி kaima idli recipe

அடுத்ததாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தக்காளி குழைந்து தொக்கு பதத்திற்கு வரும் வரை நன்கு வதக்க வேண்டும். மசாலா வாசம் கமகமவென வந்தவுடன், தக்காளி கெட்சப் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இது ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கைமா இட்லி சுவையைக் கொடுக்கும்.

மசாலா தொக்கு பதம் வந்ததும், நாம் ஏற்கனவே மொறுமொறுப்பாகப் பொரித்து வைத்துள்ள இட்லித் துண்டுகளை இதில் சேர்க்க வேண்டும். மசாலா முழுவதும் இட்லியில் நன்றாகப் படியும் படி, அடுப்பை மிதமான தீயில் வைத்து சுமார் இரண்டு நிமிடங்கள் மெதுவாகப் பிரட்டி விடவும். 

கடைசியாகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அடுப்பை அணைத்தால் கொஞ்சம் புளிப்பு, காரம் என நாவிற்கு விருந்தளிக்கும் சுவையான கைமா இட்லி தயார். இன்றே இந்த அருமையான ரெசிபியை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com