இனிப்பு, காரம், மொறுமொறுப்பு என அனைத்தும் கலந்த ஒரு பலகாரம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முதலில் தோன்றுவது மிக்சர் தான். பலர் இதை வீடுகளில் செய்ய நினைத்தாலும், கடைகளில் விற்கப்படும் அதே பக்குவம் வருவதில்லை என்பதுதான் பெரும் குறையாக இருக்கும்.
குறிப்பாக, மாவு எண்ணெயைக் குடித்து, கைகளில் பிசுபிசுப்பை ஏற்படுத்தும். இந்த சிக்கலைத் தவிர்த்து, தரமான கடை மிக்சர் சுவையை நமது சமையலறையிலேயே எப்படித் தயார் செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
வேர்க்கடலை - அரை கப்
பொட்டுக்கடலை - அரை கப்
பூண்டு - 10 பற்கள்
கறிவேப்பிலை - 3 கொத்து
மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.
செய்முறை:
முதலில், ஒரு பாத்திரத்தில் இரண்டு பங்கு கடலை மாவுடன் ஒரு பங்கு அரிசி மாவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு மென்மையாகப் பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு அகலமான வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு, எண்ணெயில் வட்டமாகப் பிழிந்து எடுக்கவும். பொன்னிறமாக வெந்ததும், அதை வெளியே எடுத்துத் தனியாக வைக்க வேண்டும்.
அதேபோல், காராபூந்தி செய்வதற்காகக் கடலை மாவு மற்றும் அரிசி மாவை தோசை மாவு பதத்திற்குத் தண்ணீரில் கரைத்து, பூந்தி கரண்டியின் மூலம் எண்ணெயில் முத்து முத்தாகப் பொரித்து எடுக்க வேண்டும். அடுத்ததாக, அதே எண்ணெயில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, தோலுடன் தட்டிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாகப் பொரித்து எடுக்க வேண்டும்.
இவை அனைத்தையும் ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி, பொரித்த ஓமப்பொடியை லேசாக கைகளால் நொறுக்கி விட வேண்டும். பின்னர் அதனுடன் காராபூந்தி, வேர்க்கடலை, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து, தேவையான அளவு மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் குலுக்கினால் சுவையான மிக்சர் தயார்.
எண்ணெய் குடிக்காமல் இருக்க சில டிப்ஸ்:
இந்த உணவை தயாரிக்கும்போது, துளி கூட எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் அசல் கடை மிக்சர் பக்குவத்தைப் பெற கீழ்க்காணும் நான்கு குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.
மாவு பிசையும்போது, இரண்டு ஸ்பூன் நன்கு சூடான எண்ணெயை மாவின் மீது ஊற்றிப் பிசைந்தால், பலகாரம் மிருதுவாகவும் எண்ணெய் குடிக்காமலும் வரும்.
மாவை எண்ணெயில் பிழியும் போது அடுப்பு சரியான மிதமான தீயில் இருக்க வேண்டும். தீ குறைவாக இருந்தால் பலகாரம் அதிக எண்ணெயை உறிஞ்சிவிடும்.
பொரித்தெடுத்த பொருட்களை நேரடியாகப் பாத்திரத்தில் கொட்டாமல், எண்ணெய் உறிஞ்சும் டிஷ்யூ பேப்பர் மீது பரப்பினால், அதிலுள்ள மிஞ்சிய எண்ணெயும் முழுமையாக நீக்கப்படும்.
பூண்டு மற்றும் கறிவேப்பிலையில் சிறிதும் ஈரப்பதம் இல்லாமல் எண்ணெயில் சேர்க்க வேண்டும்; ஈரப்பதம் இருந்தால் பலகாரம் விரைவில் நமத்துப் போய்விடும்.
இந்த விஷயங்களை கவனமாகக் கையாண்டால், இனிமேல் பேக்கரிகளில் சென்று மிக்சர் வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. சுகாதாரமான முறையில், வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த மிக்சர் செம டேஸ்டாக இருக்கும். நன்கு சூடு ஆறிய பின், காற்றுப் புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் வைத்து சாப்பிடலாம்.
இந்த தீபாவளிக்கு இதை நீங்கள் உங்கள் வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.