
பலாமூசு பிரியாணி:
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - ஒரு டம்ளர்
சிறிதாக நறுக்கிய பலாமூஸு துண்டங்கள்- இரண்டு கப்
மெலிதாக அரிந்த பெரிய வெங்காயம் - இரண்டு
பச்சை மிளகாய் - ஐந்து
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிக்க:
சோம்பு - 1 ஸ்பூன்
ஏலக்காய், பிரியாணி இலை தலா-1,
முந்திரி பருப்பு - 5
அன்னாசிப்பூ - 1
புதினா, கொத்தமல்லி நறுக்கியது தலா- ஒரு டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ- ஐந்து இழைகள்
செய்முறை:
பலாமூசு துண்டங்களை சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் தேங்காய் எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்தவுடன் தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பலாமூசு துண்டங்களை சேர்த்து கிளறி பாஸ்மதி அரிசியை அதனுடன் சேர்த்து கலந்து தேவையான அளவு உப்பு போட்டு, ஒன்னே முக்கால் டம்ளர் தண்ணீர் விட்டு அதன் மீது குங்குமப்பூவையும் தூவி வேகவைத்து மூன்று விசில் வந்ததும் எடுத்து விடவும்.
பிறகு ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு முந்திரி பருப்புகளை வறுத்து பிரியாணி மீது தூவி நன்றாக கலந்து பரிமாறவும். குங்குமப்பூ கலருடன், புதினா, தனியா சேர்ந்து அதன் நிறமும் பலாமூசு வாசமும் அசத்தலாக இருக்கும். வெஜிடபிள் பிரியாணி செய்யும் பொழுது பிரட் துண்டங்களை நெய்யில் பொரித்து சேர்ப்போம். பலாமூசு பிரியாணிக்கு அது தேவை இல்லை. இந்தக் காயே அனைத்து விதமான ருசியையும் கொடுத்துவிடும்.
குறுக்கு காலன்
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் துண்டுகள் - அரை கப்
சேனைக்கிழங்கு துண்டுகள் - அரை கப்
புளித்த கெட்டியான தயிர்- இரண்டு கப்
மிளகுத்தூள்- ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் -2 சிட்டிகை
வெல்லம்- சிறு துண்டு
உப்பு - தேவைக்கு ஏற்ப
தேங்காய்த் துருவல்- ஒரு கப்
பச்சை மிளகாய்- ஐந்து
தேங்காய் எண்ணெய், கடுகு, வெந்தயம், காய்ந்த சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை அனைத்தும்- தாளிக்க தேவையான அளவு.
செய்முறை:
நறுக்கிய வாழைக்காயையும், சேனைக்கிழங்கையும் கழுவி ஒரு கடாயில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்த்து வேக விட வேண்டும் .சிறிதளவு கெட்டித் தயிரில் தண்ணீர் சேர்த்து கடைந்து அதை வேக வைத்த காய்கறிகளோடு சேர்த்து மிதமான தீயில் வைத்து கால் பாகம் அளவுக்கு வற்றும் வரை அடுப்பிலேயே வைத்திருக்க வேண்டும்.
தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது தயிர் விட்டு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, இந்தக் கலவையை காய்கறி கலவையில் கொட்டி நன்றாக கலந்து உப்பையும், வெல்லத்தையும் உடன் சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பில் உள்ள காய்கறிகளோடு சேர்த்து மிதமான தீயில் இலேசான கொதிநிலைக்கு வந்ததும் கீழே இறக்கி வைத்து விடவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாகியதும் அதில் கடுகு, வெந்தயம், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து இந்த காய்கறி கலவையில் சேர்த்து காய்கறிகள் உடையாமல் கரண்டியால் கலக்கி விட்டு கேரளத்து விசேஷமான அரிசி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும். குறுக்கு காலன் அமிர்தமாய் ருசிக்கும்.
தயிர் நல்ல புளிப்பாக இருக்க வேண்டும். லேசான புளிப்பாக இருந்தால் சூட்டில் சேர்க்கும்போது தயிர் திரி திரியாக திரிந்துவிடும்.