ஆவணி மாதம் வந்தாலே விரதங்களும் விசேஷங்களும் வந்துவிடும். நீங்கள் விரதம் இருக்கும்போது, உடலுக்கு உடனடியாக எனர்ஜி தரக்கூடிய, அதேசமயம் சுவையான ஒரு ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு தோன்றும். அப்படிப்பட்ட நேரங்களில் கடையிலிருந்து அதிக விலை கொடுத்து ஸ்வீட் வாங்குவதைத் தவிர்த்துவிட்டு, உங்கள் வீட்டிலேயே மிக சுலபமாகச் செய்யக்கூடிய ஒரு அருமையான ரெசிபி தான் இந்த தேங்காய் அல்வா.
இதை செய்வதற்கு கோதுமை மாவோ, ரவையோ, மைதாவோ தேவையில்லை. வெறும் 20 நிமிடங்களில், வீட்டில் இருக்கும் தேங்காயை வைத்து நாவில் வைத்ததும் கரையும் இந்த அற்புதமான ஸ்வீட்டை நீயே தயார் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 2 கப்
காய்ச்சிய திக்கான பால் - 1 கப்
நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் - 1 கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
முந்திரி, பாதாம் - ஒரு கைப்பிடி அளவு
செய்முறை!
முதலில் ஒரு அடிகனமான கடாயை அடுப்பில் வைத்து, அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சூடாக்கவும். நெய் உருகியதும், துருவி வைத்துள்ள தேங்காயை அதில் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்கவும். தேங்காயில் உள்ள ஈரப்பதம் முழுமையாகச் சென்று, அது லேசான பொன்னிறமாக மாறும் வரை சுமார் 5 நிமிடங்கள் வதக்குவது மிக முக்கியம்.
இப்படி நெய்யில் வறுக்கும்போதே ஒரு கமகமக்கும் வாசம் வரும். தேங்காய் வறுபட்டதும், அதில் காய்ச்சி வைத்துள்ள பாலை ஊற்றி, தேங்காய் அந்த பாலை முழுமையாக உறிஞ்சி மென்மையாகும் வரை நன்கு வேகவைக்கவும்.
பால் முழுவதுமாக வற்றியதும், எடுத்து வைத்துள்ள நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தை அதில் சேர்த்துக் கலந்துவிடவும். வெல்லம் சேர்த்தவுடன் கலவை மீண்டும் சற்று இளகி தண்ணீராவது போல வரும். இந்த நேரத்தில் அடுப்பை மிதமான தீயில் வைத்து, அடிபிடிக்காமல் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
வெல்லம் நன்றாகக் கரைந்து, கலவை சுருண்டு வரும்போது மீதமுள்ள நெய்யைச் சிறுகச் சிறுக ஊற்றிக் கிளற வேண்டும். இப்போது ஏலக்காய்த் தூள் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி, பாதாமை இதனுடன் சேர்த்து நன்றாகக் கலந்துவிட்டு, நெய் பிரிந்து கடாயில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும்போது அடுப்பை அணைத்துவிடவும்.
இந்த அல்வாவின் சுவையை இன்னும் பிரமாதமாக மாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தால், பாலுக்குப் பதிலாக கெட்டியான தேங்காய் பால் சேர்த்தால் இதன் சுவை இன்னும் அபாரமாக இருக்கும். வெறும் 20 நிமிடங்களில் வீடே மணக்கும் கமகமக்கும் தேங்காய் அல்வா ரெடி.
இதை ஒரு தட்டில் மாற்றி, சுடச்சுடச் சாப்பிட்டால் நெய் மணத்தோடு தொண்டையில் அப்படியே வழுக்கிக்கொண்டு போகும். விரத நாட்களில் சோர்வாக உணரும்போது, இந்த ஸ்வீட்டை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் உடனே இன்ஸ்டன்ட் எனர்ஜி கிடைக்கும். ஆரோக்கியமான இந்த தேங்காய் அல்வா ரெசிபியை இன்றே வீட்டில் செய்து அசத்துங்கள்.