பஞ்சு போன்ற மசாலா பன் தோசை... இந்த சீக்ரெட் தெரிஞ்சா தினமும் இதான் செய்வீங்க!

stuffed-masala-bun-dosa
stuffed-masala-bun-dosa
Updated on

காலை உணவாக இட்லி, மொறுமொறுப்பான தோசை என்று சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு ஒரு சூப்பரான மற்றும் வித்தியாசமான உணவுதான் இந்த 'மசாலா பன் தோசை'. பார்ப்பதற்கு பன் போல உப்பலாகவும், உள்ளே காரசாரமான உருளைக்கிழங்கு மசாலாவோடும் இருக்கும் இந்த தோசையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். 

தோசைக்கல்லில் மெலிதாக ஊற்றாமல், சிறிய ஆப்பச்செட்டி அல்லது கடாயில் தடிமனாக ஊற்றிச் செய்வதுதான் இதன் ஸ்பெஷல். வீட்டில் வழக்கமாக அரைத்து வைத்துள்ள இட்லி மாவு இருந்தாலே போதும், இதை மிக எளிதாகச் செய்துவிடலாம்.

தேவையான பொருட்கள்:

  • தோசை மாவு - 2 கப்

  • உருளைக்கிழங்கு - 2 

  • பெரிய வெங்காயம் - 1 

  • பச்சை மிளகாய் - 2 

  • இஞ்சி - ஒரு சிறிய துண்டு 

  • கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

  • கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

  • சமையல் எண்ணெய் மற்றும் நெய் - தேவையான அளவு

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை! 

முதலில் தோசைக்கு உள்ளே வைப்பதற்கான மசாலாவைத் தயார் செய்ய வேண்டும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்துப் பொன்னிறமாக வதக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
வெங்காயம், பூண்டு கிடையாது... சாமிக்கே படைக்கப்படும் பெங்காலி 'போகர் கிச்சடி'!
stuffed-masala-bun-dosa

வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும். இப்போது வேகவைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை இதில் சேர்த்து, மசாலா எல்லாம் ஒன்றாகக் கலக்கும்படி நன்றாகப் பிரட்டி, கடைசியாகக் கொத்தமல்லி தூவி இறக்கி ஆறவிடவும். ஆறியதும் இந்த மசாலாவைச் சிறிய தட்டையான உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்தத் தோசையைச் செய்ய சிறிய தாளிக்கும் கடாய் அல்லது ஆப்பச் சட்டி சரியாக இருக்கும். கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும். கடாய் சூடானதும், அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொண்டு ஒரு குழிக்கரண்டி கெட்டியான தோசை மாவை நடுவில் ஊற்றவும்.

இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலா உருண்டையை மெதுவாக மாவின் நடுவில் வைத்து, அந்த மசாலா மறையும்படி அதன் மேல் மீண்டும் கொஞ்சமாக மாவை ஊற்ற வேண்டும்.

பின்னர் கடாயை ஒரு மூடியால் மூடி, மிதமான தீயில் 2 நிமிடங்கள் வேகவிடவும். ஒரு பக்கம் நன்கு சிவந்ததும், தோசையை மெதுவாகத் திருப்பிப் போட்டு மறுபக்கமும் வேகவைத்து எடுத்தால் வெளியே பன் போல மிருதுவாகவும், உள்ளே சுவையான மசாலாவுடனும் கமகமக்கும் 'மசாலா பன் தோசை' தயார். 

இதையும் படியுங்கள்:
சுடச்சுட சாதமும் நல்லெண்ணெயும்... அசல் செட்டிநாடு சுவையில் பச்சை மாங்காய் வத்தக்குழம்பு!
stuffed-masala-bun-dosa

இதைச் சுடச்சுட எடுத்து, தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னியோடு தொட்டுச் சாப்பிட்டால் சுவை அள்ளும். வழக்கமான தோசைகளை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும் இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com