

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவமான உணவுப் பாரம்பரியம் உண்டு. அதில் மேற்கு வங்காளத்தின் துர்கா பூஜை கொண்டாட்டங்களை 'போகர் கிச்சடி' இல்லாமல் முழுமையாகப் பார்க்க முடியாது. தேவிக்குப் பிரசாதமாகப் படைக்கப்படும் இந்த உணவில் வெங்காயம், பூண்டு சேர்க்க மாட்டார்கள்.
சுடச்சுட இந்த கிச்சடியை, வறுத்த கத்திரிக்காயுடன் சேர்த்துச் சாப்பிடுவது ஒரு சொர்க்கமான அனுபவம். அசலான பெங்காலி ஸ்டைல் போகர் கிச்சடியை வீட்டிலேயே எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
கோவிந்தோபோக் அரிசி அல்லது சீரக சம்பா - 1 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
காலிஃப்ளவர் - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
பச்சை பட்டாணி - 1/2 கப்
தக்காளி - 1
இஞ்சி விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 2
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத் தூள், மல்லித் தூள் - தலா 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை!
போகர் கிச்சடியின் முதல் சீக்ரெட்டே பாசிப்பருப்பை வறுப்பதில்தான் இருக்கிறது. அடுப்பில் ஒரு வெறும் கடாயை வைத்து, பாசிப்பருப்பை மிதமான தீயில் வாசம் வரும் வரை லேசாகச் சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த பருப்பை நன்றாகக் கழுவி, அரிசியுடன் சேர்த்துத் தனியாக ஊறவைக்க வேண்டும்.
அடுத்ததாக, ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் காலிஃப்ளவர் துண்டுகளில் லேசாக உப்பு மற்றும் மஞ்சள் தூள் தூவிப் பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள். காய்கறிகளை இப்படி வறுத்துச் சேர்ப்பதால் கிச்சடியில் அவை குழையாமல் முழுமையாக இருக்கும்.
இப்போது ஒரு அகலமான அடிகனமான பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் நெய் ஊற்றுங்கள். நெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்துத் தாளிக்க வேண்டும்.
சீரகம் பொரிந்ததும் இஞ்சி விழுது, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, தக்காளி நன்கு குழையும் வரை வதக்குங்கள். தக்காளி தொக்கு பதத்திற்கு வந்தவுடன், சீரகத் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கி விடுங்கள்.
மசாலா நன்றாக வதங்கியவுடன், நாம் ஏற்கனவே கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் வறுத்த பாசிப்பருப்பைத் தண்ணீரின்றி வடித்து இதில் சேர்த்து, மசாலாவோடு ஒட்டும்படி ஒரு நிமிடம் மெதுவாகப் பிரட்டி விடவும். இப்போது, 1 கப் அரிசி மற்றும் 1 கப் பருப்புக்கு சுமார் 6 கப் சூடான தண்ணீரை ஊற்றுங்கள்.
தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். அரிசியும் பருப்பும் பாதி வெந்த நிலையில், நாம் வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் மற்றும் பச்சை பட்டாணியைச் சேர்த்துக் கிளறுங்கள்.
கிச்சடி கெட்டியாகத் தொடங்கும்போது, அடுப்பை 'சிம்'மில் வைத்துவிட்டு, ஒரு மூடியால் மூடி சுமார் 10 நிமிடங்கள் வரை பொறுமையாக வேக விட வேண்டும்.
அரிசியும் பருப்பும் நன்கு குழைந்து, காய்கறிகள் மிருதுவாக வெந்தவுடன், கிச்சடியில் பெங்காலி சுவையைக் கொண்டு வர ஒரு டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்குங்கள். பெங்காலி உணவுகளில் இந்தச் சர்க்கரை காரத்தையும் சுவையையும் அருமையாக பேலன்ஸ் செய்யும்.
இறுதியாக, மீதமுள்ள 3 ஸ்பூன் தாராளமான நெய் மற்றும் கரம் மசாலாவைத் தூவி, அடுப்பை அணைத்துவிட்டு 5 நிமிடம் மூடி வையுங்கள். வீடு முழுவதும் மணக்கும் தெய்வீகமான 'போகர் கிச்சடி' தயார்.