

தக்காளி என்றாலே சட்னி, தொக்கு, ரசம் அல்லது குழம்பு தான் செய்ய முடியும் என நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், அதே தக்காளியை வைத்து நாவில் நீர் ஊறவைக்கும் ஒரு தித்திப்பான இனிப்பு செய்ய முடியும் என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம், அதுதான் 'தக்காளி பாயாசம்'. இந்தத் தக்காளி பாயாசம், சுவையில் மற்ற எல்லா பாயாசங்களையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும்.
தக்காளியின் லேசான புளிப்பும், வெல்லத்தின் இனிப்பும், தேங்காய்ப்பாலின் மணமும் சேர்ந்து ஒரு தேவாமிர்தமான சுவையைத் தரும். எந்தவிதமான செயற்கை பொருட்களும் இல்லாமல், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த வித்தியாசமான தக்காளி பாயாசத்தை எப்படிச் செய்வது என்று இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த தக்காளி - 3
வெல்லம் அல்லது சர்க்கரை - 3/4 கப்
கெட்டியான தேங்காய்ப்பால் - 1 கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி, உலர் திராட்சை - தலா 10
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிறிய சிட்டிகை
செய்முறை!
பாயாசம் செய்வதற்கு தக்காளி நல்ல சிவப்பு நிறத்தில், கனிந்து இருக்க வேண்டியது அவசியம். நாட்டுத் தக்காளியில் புளிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், பெங்களூர் தக்காளியைப் பயன்படுத்துவது நல்லது. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதில் தக்காளியைப் போட்டு 5 நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க வையுங்கள்.
தக்காளியின் தோல் வெடித்து வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிடவும். ஆறியதும் தக்காளியின் தோலை உரித்துவிட்டு, விதைகளை முடிந்தவரை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு நைஸான விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரம் அல்லது கடாயை வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றுங்கள். நெய் சூடானதும் முந்திரி மற்றும் உலர் திராட்சையைப் பொன்னிறமாக வறுத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதே கடாயில் மேலும் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு, நாம் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும். தக்காளியின் பச்சை வாசனை முழுமையாகப் போய், நெய்யோடு அது சுருண்டு வரும் வரை சுமார் 5 நிமிடங்கள் பொறுமையாக வதக்குவது மிகவும் முக்கியம். இதுதான் பாயாசத்திற்கு அசல் சுவையைக் கொடுக்கும்.
தக்காளி விழுது கெட்டியானதும், எடுத்து வைத்துள்ள வெல்லம் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கிளறுங்கள். வெல்லம் உருகித் தக்காளியோடு ஒன்றிணைந்து அல்வா பதத்திற்கு வரும். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட்டு, கெட்டியான தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்து விடுங்கள்.
தேங்காய்ப்பாலுக்குப் பதிலாகக் காய்ச்சி ஆறவைத்த பசும்பாலையும் பயன்படுத்தலாம். பால் சேர்த்த பிறகு பாயாசம் அதிகமாக கொதிக்கக் கூடாது. லேசாக நுரைத்துக் கொண்டு வரும்போதே ஏலக்காய்த் தூளைச் சேர்த்து அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
இறுதியாக, நாம் ஏற்கனவே நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சையைப் பாயாசத்தில் கொட்டி அலங்கரித்தால், ஆவி பறக்கும் சுவையான 'தக்காளி பாயாசம்' தயார்.