மதிய உணவிற்கும் காலை சிற்றுண்டிக்கும் ஒரே குழம்பு வைக்க வேண்டும் என்றால், நம் நினைவுக்கு முதலில் வருவது சாம்பார் தான். பொதுவாக முருங்கைக்காய், கத்தரிக்காய், கேரட் பீன்ஸ் போட்டு தான் பல வீடுகளில் சாம்பார் செய்வார்கள். முட்டைகோஸ் என்றாலே அதை பொரியல் அல்லது கூட்டு செய்யவே நாம் பயன்படுத்துவோம். ஆனால், அதே முட்டைகோஸை வைத்து கல்யாண வீட்டு சுவையில் ஒரு அட்டகாசமான சாம்பார் செய்ய முடியும்.
காய்கறிகள் குறைவாக இருக்கும் நேரங்களில், சட்டென்று செய்யக்கூடிய இந்த ரெசிபி, இட்லி, தோசை மற்றும் சுடச்சுட சாதம் என அனைத்திற்கும் அற்புதமான சைட் டிஷ்ஷாக அமையும். முட்டைகோஸின் லேசான இனிப்புச் சுவையும், சாம்பார் பொடியின் காரமும் சேர்ந்து, வீடே மணக்கும் முட்டைகோஸ் சாம்பார் எப்படி சுலபமாகச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் மற்றும் நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை!
முதலில் துவரம் பருப்பை நன்றாகக் கழுவி, அதனுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை குழைய வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பருப்பு வேகும் நேரத்தில், முட்டைகோஸை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
நீளவாக்கில் நறுக்கினால் சாம்பாரில் அது தனியாகத் தெரியும், எனவே பொடியாக நறுக்குவது நல்லது. இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, முழுச் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் லேசாக வதங்கியதும், நறுக்கிய தக்காளி மற்றும் முட்டைகோஸை சேர்த்து மிதமான தீயில் வதக்குங்கள். முட்டைகோஸின் பச்சை வாசனை போகும் வரை சுமார் ஐந்து நிமிடங்கள் வதக்க வேண்டியது அவசியம்.
முட்டைகோஸ் மற்றும் தக்காளி நன்கு சுருண்டு வதங்கியவுடன், அதனுடன் சாம்பார் தூள் சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டி விடவும். பின்னர், கெட்டியாகக் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்க வையுங்கள். புளியின் பச்சை வாசனை முழுமையாகச் சென்ற பிறகு, நாம் ஏற்கனவே குழைய வேகவைத்து மசித்து வைத்துள்ள துவரம் பருப்பை இதனுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
இந்த முட்டைகோஸ் சாம்பார் தளதளவெனக் கொதித்து, பருப்பு மற்றும் காய்கறிகள் ஒன்றிணைந்து ஒரு அருமையான கிரேவி பதத்திற்கு வந்தவுடன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அடுப்பை குறைந்த தீயில் வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக, ஒரு சிறிய தாளிப்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துப் பொன்னிறமாகத் தாளித்துச் சாம்பாரில் கொட்டுங்கள். மணக்க மணக்க ஹோட்டல் சுவையில் முட்டைகோஸ் சாம்பார் தயார்.