உடல் எடையைக் குறைக்க உதவும் அருமையான 5 வாழைத்தண்டு ரெசிபிகள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டை வைத்து அசத்தலான 5 சுவையான சமையல் குறிப்புகள்.
வாழைத்தண்டு ரெசிபிகள்
வாழைத்தண்டு ரெசிபிகள்AI image
Updated on

உடல் எடையைக் குறைக்கும் வாழைத்தண்டு ரெசிபிகள் தயாரிப்பு

1. வாழைத்தண்டு வடை

தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு – 1 கப் (நார்களை நீக்கி நறுக்கியது)

கடலை பருப்பு – 1 கப்

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – 1 சிறு துண்டு

சீரகம் – 1 தேக்கரண்டி

சோம்பு – ½ தேக்கரண்டி

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு (அளவாக)

செய்முறை:

வாழைத்தண்டை நறுக்கியதும் மோர் கலந்த நீரில் போட்டு நார்களை முழுவதும் நீக்கி கழுவி வடிக்கவும். கடலை பருப்பை மூன்று நான்கு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடிக்கவும். ஊறியதும் பருப்பை கொரகொரப்பாக அரைக்கவும்.

பின்னர் அதில் வாழைத்தண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், சோம்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலக்கவும். இந்தக் கலவையை சிறு வடை வடிவில் செய்து மிதமான தீயில் எண்ணெயில் மெதுவாக பொரிக்கவும். சுவையான வாழைத்தண்டு வடை ரெடி.

2. வாழைத்தண்டு பாயசம்

தேவையான பொருட்கள்:

நறுக்கிய வாழைத்தண்டு (நார் நீக்கவும்) - ஒரு கப்,

சர்க்கரை அல்லது வெல்லம் - 100 கிராம்,

பசும் பால் - அரை கப்,

தேங்காய்ப்பால் - ஒரு கப்,

நெய் - 100 கிராம்,

முந்திரி, திராட்சை (சேர்த்து) - 50 கிராம்,

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

வாழைத்தண்டு ரெசிபிகள்
வாழைத்தண்டு ரெசிபிகள்AI image

செய்முறை:

வாழைத்தண்டை அரைத்துக் கொள்ளவும். முந்திரி, திராட்சையை சிறிதளவு நெய்யில் வறுக்கவும். மீதமுள்ள நெய்யை வாணலியில் விட்டு அரைத்த விழுதை சேர்த்து, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கிளறவும். பிறகு, பால் விட்டுக் கிளறி கொதித்து வரும்போது, தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து, வறுத்த முந்திரி, திராட்சையையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். வித்தியாசமான சுவையில் வாழைத்தண்டு பாயாசம் தயார்.

3. வாழைத்தண்டு கோசம்பரி

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு அரை கப்

பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, குடமிளகாய், கொத்தமல்லி – தலா கால் கப்

தேங்காய்த் துருவல் கால் கப்

வேக வைத்த சென்னா (அ) ஸ்வீட் கார்ன் – அரை கப்

எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்

சர்க்கரை 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் 1 டீஸ்பூன்

மாதுளை முத்துக்கள் – கால் கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

நறுக்கிய வாழைத்தண்டை 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். நன்கு ஆறியதும், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, குடமிளகாய், கொத்தமல்லி, தேங்காய்த் துருவல்,வேக வைத்த சென்னா (அ) ஸ்வீட் கார்ன், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, மிளகுத்தூள், மாதுளை முத்துக்கள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும். அல்டிமேட் சுவையில் எளிதாக செய்யக் கூடிய வாழைத்தண்டு கோசம்பரி தயார்.

4. வாழைத்தண்டு தோசை

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி – 1 கப்

புழுங்கல் அரிசி – 1 கப்

முழு கறுப்பு உளுந்து – ¼ கப்

நறுக்கிய வாழைத்தண்டு – 2 கப்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
நாவில் நீர் ஊறும் மோர்வடைக் குழம்பு & சௌ-சௌ சிப்ஸ்: ஞாயிறு மதிய உணவு இனி சொர்க்கம் தான்!
வாழைத்தண்டு ரெசிபிகள்

செய்முறை:

அரிசி, கறுப்பு உளுந்து, வெந்தயம் இவற்றை நன்கு அலம்பி மூன்று மணி நேரம் ஊற விடவும். பின்னர் தேவையான உப்பு சேர்த்து நறுக்கிய வாழைத் தண்டுகளைச் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த மாவில் சீரகம் சேர்த்து ஏழு, எட்டு மணி நேரம் புளிக்க விடவும். பின்னர் சூடான தோசைக்கல்லில் மாவை ஊற்றி தோசைகளை பொன்னிறமாக வார்த்து எடுக்கவும். சுவையான வாழைத்தண்டு தோசை ரெடி.

5, வாழைத்தண்டு புளிக் குழம்பு

தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு - அரை கப் (சற்று பெரிய துண்டுகளாக நறுக்கியது)

சின்ன வெங்காயம் - 1/4 கிலோ

தக்காளி - 2

காய்ந்த மிளகாய் - 6

கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

தனியா - 2 டேபிள் ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்

புளி - நெல்லிக்காய் அளவு

கடுகு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

வெல்லம் - சுண்டைக்காய் அளவு

செய்முறை:

முதலில் வாழைத்தண்டின் தோலை சீவி விட்டு, மெல்லிய வட்டமாக நறுக்கி, அதை இரண்டாகவோ அல்லது நான்காகவோ நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். அடுத்து தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, சீரகம் மற்றும் தனியா ஆகியவற்றை சேர்த்து வறுத்து, அதனுடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து லேசாக வதக்கி ஆறவிடவும்.

இவை ஆறியதும் அதனுடன் தேங்காய்த் துருவலை சேர்த்து மிக்ஸியில் போட்டு, நைசாக அரைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு வாழைத்தண்டை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு போட்டு தாளித்து, அதனுடன் வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, அதனுடன் வாழைத் தண்டை சேர்த்து வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
பொட்டுக்கடலையில் இவ்வளவு சுவையான உணவுகளா? மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!
வாழைத்தண்டு ரெசிபிகள்

வாழைத்தண்டு லேசாக வதங்கியதும், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். ஓரளவு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்ததும், வெல்லம் சேர்த்து இறக்கவும். சுவையான வாழைத்தண்டு புளிக்குழம்பு தயார்.

உடல் நலனை மேம்படுத்தி, நச்சுக்களை நீக்கி உடலை சீராக வைத்துக் கொள்ள உதவும் இந்த ஆரோக்கியமான வாழைத்தண்டு சமையல் குறிப்புகள் மூலம், உங்கள் வீட்டின் சமையலறையை மேலும் சிறப்பானதாக மாற்றலாம்.

logo
Kalki Online
kalkionline.com