நீண்ட தூரப் பயணங்கள் செல்லும்போதோ அல்லது அவசரமாக மதிய உணவு தயாரிக்க வேண்டிய நேரங்களிலோ நமது நினைவிற்கு முதலில் வருவது தயிர் சாதம் எலுமிச்சை சாதம் போன்ற உணவு வகைகள் தான். அதிலும் குறிப்பாக, மங்கலகரமான மஞ்சள் நிறத்தில் நறுமணம் வீசும் கல்யாண பந்தி எலுமிச்சை சாதத்தை பலரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
ஆனால், இதை நாம் வீடுகளில் செய்யும்போது சில நேரங்களில் அரிசி குழைந்து பிசுபிசுப்பாக மாறிவிடும்; அல்லது சாற்றில் உள்ள சிறு கசப்புத் தன்மை முழு சுவையையும் குறைத்துவிடும். எந்தவொரு குறையும் இல்லாமல், சரியான பக்குவத்தில் சுவையான எலுமிச்சை சாதம் தயார் செய்வதற்கான முழுமையான செய்முறையை இந்தப் பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி அல்லது சாப்பாட்டு அரிசி - 1 கப்
பெரிய அளவிலான எலுமிச்சைப் பழம் - 1
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 ஸ்பூன்
வேர்க்கடலை - 2 ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 10
காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 சிறிய துண்டு
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை!
சுவையான எலுமிச்சை சாதம் தயார் செய்ய, முதலில் சாதத்தை முக்கால் பதத்திற்கு உதிரியாக வடித்து, ஒரு அகலமான தாம்பாளத் தட்டில் கொட்ட வேண்டும். அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி விசிறியின் காற்றில் நன்றாக ஆறவிட வேண்டும்.
பின்னர், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
அதன்பின் இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். தாளிப்பு முடிந்து அடுப்பை அணைத்த பிறகு, மஞ்சள் தூள் சேர்த்து லேசாகக் கிளறி, சூடு ஆறியதும் பிழிந்து வைத்துள்ள சாற்றை ஊற்றிக் கலக்கவும்.
இந்தக் கலவையை ஆறவைத்துள்ள சாதத்தில் ஊற்றி, தேவையான அளவு கல் உப்பைச் சேர்த்து மெதுவாகக் கிளறினால் அட்டகாசமான எலுமிச்சை சாதம் தயார்.
கசப்பு வராமல் இருக்க பின்பற்ற வேண்டிய குறிப்புகள்:
1. சூடான சாதத்தில் எலுமிச்சைச் சாற்றை ஊற்றினால் அது ஒன்றோடு ஒன்று ஒட்டிப் பிசுபிசுப்பாக மாறிவிடும். எனவே, சாதத்தை நன்றாக ஆறவைத்த பிறகே கலக்க வேண்டும்.
2. சாறு பிழியும் போது பழத்தை அதிக அழுத்தம் கொடுத்துப் பிழியக் கூடாது. தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் கசப்புத் தன்மையைக் கொண்டவை, அவை சாற்றுடன் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. தாளிப்பு முழுவதும் முடிந்து அடுப்பை அணைத்துவிட்டுத்தான் மஞ்சள் தூளைச் சேர்க்க வேண்டும். கொதிக்கும் எண்ணெயில் மஞ்சள் தூள் வறுபட்டால், அது உணவிற்குக் கசப்புத் தன்மையைக் கொடுத்துவிடும்.
4. அடுப்பில் வைத்து நேரடியாகச் சாற்றைக் கொதிக்க வைப்பதோ, அல்லது சாற்றை ஊற்றிய பிறகு அடுப்பை எரிய விடுவதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
இந்த குறிப்புகளை கவனத்தில் கொண்டு தயாரித்தால், உதிரி உதிரியான, துளியும் கசப்பு இல்லாத எலுமிச்சை சாதம் மிகச் சிறப்பாக வரும். இதனுடன் காரமான உருளைக்கிழங்கு வறுவல் அல்லது அப்பளம் வைத்துப் பரிமாறினால் அதன் ருசி உங்கள் நாவில் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
நீங்களும் உங்கள் இல்லத்தில் இதே பக்குவத்தில் சுவையான எலுமிச்சை சாதம் செய்து பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.