இளநீர் வாங்கும்போது இதெல்லாம் கவனிக்காம வாங்காதீங்க!

coconut-buying-guide
coconut-buying-guide
Published on

கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது. காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் காரணமாக வெளியில் செல்வதை தவிர்க்கவும் என்ற அறிவிப்பு வர ஆரம்பித்துவிட்டது. வீட்டிலேயே இருந்தாலும் உடல் சூடு தவிர்க்க முடியாதது. இதனைக் குறைத்து உடலை குளிர்ச்சியாக்க இயற்கையான மிகச்சிறந்த பானமாக இளநீர் உள்ளது. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய இளநீரை வாங்கும்போது கவனிக்க வேண்டியவைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

நன்றாக குலுக்கவும்

கோடை காலத்தில் விலை அதிகமாக கொடுத்து இளநீர் வாங்கினாலும் அதில் தண்ணீர் குறைவாக இருப்பதைக்காண முடிகிறது. இதனை தவிர்க்க நீங்கள் குடிக்க நினைக்கும் இளநீரை எடுத்து முதலில் குலுக்கி பார்க்கவேண்டும். அதில் உள்ளே தண்ணீர் இருக்கும் சத்தம் கேட்டால் அந்த இளநீரில் தண்ணீர் மிகக் குறைவாக உள்ளதை குறிக்கிறது. குலுக்கும்போது தண்ணீர் சத்தம் கேட்காமல் இருந்தால் அந்த இளநீரில் தண்ணீர் அதிகமாக இருப்பதை குறிக்கிறது. ஆகவே இளநீரை முதலில் குலுக்கிப் பார்த்து வாங்க வேண்டும்.

நிறத்தில் கவனம்

இளநீர் வாங்க நினைக்கும்போது முதலில் அதனுடைய வெளிப்புற நிறத்தை கவனிக்கவேண்டும். இளநீரின் வெளிப்புறம் அடர் பழுப்பு நிறங்கள் தென்பட்டால் அது முதிர்ந்த இளநீராக இருக்கும். அதில் தண்ணீரை விட தேங்காய் அதிகம் இருக்கும். இளநீரின் வெளிப்புறம் அடர் பச்சை நிறத்தில் இருந்தால் அது புதிதாகவும் தண்ணீர் அதிகம் உள்ள இளநீராகவும் இருக்கும் என்பதால் அதனைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

அளவைக் கண்டு ஏமாறக்கூடாது

பெரிய அளவு இளநீரில் தண்ணீர் அதிகம் இருக்கும் எனவும் ,சிறிய இளநீரில் தண்ணீர் குறைவாக இருக்கும் எனவும் பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் உண்மையில் பெரிய அளவு இளநீரை விட சிறிய அளவு இளநீரிலேயே தண்ணீர் அதிகம் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
5 நிமிடத்தில் ரெடியாகும் விரத கால தேங்காய் சட்னி... இந்த ஒரு பொருள் சேர்த்தா டேஸ்ட் சும்மா அள்ளும்!
coconut-buying-guide

சுவைக்கு ஏற்ப தேர்ந்தெடுத்தல்

சற்று அதிக இனிப்பாக இருக்கும் இளமையான இளநீரை சிலர் விரும்புவார்கள். இத்தகைய இளநீரில் சில நேரங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். சிலருக்கு சற்று உப்புடன் கூடிய இனிப்பு சுவையுடைய இளநீர் ஏற்றதாக இருக்கும். அத்தகைய இளநீரில் சில நேரங்களில் தண்ணீர் அதிகமாக இருக்கும். ஆகவே நீங்கள் பருக நினைக்கும் சுவையைப் பொறுத்து இளநீரைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது.

இளநீரில் பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், சோடியம், வைட்டமின்கள் நிறைந்துள்ளது. மேலும் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்டுகள் சர்க்கரை மற்றும் புரதம் அதிக அளவு நிரம்பியுள்ளதால் இளநீரை வாங்கியவுடன் விரைவாக பருகிவிட வேண்டும். இல்லையெனில் ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும்.

கோடைகாலத்தில் அன்றாட ஆற்றலை பெறவும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் மேற்கூறிய முறைகளை கவனத்தில் கொண்டு இளநீரை வாங்கி பருகி உடல் ஆரோக்கியத்தை பேணுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com