
கோடைகாலத்தில் வெயில் நேரம் ஏதாவது குளிர்ச்சியாக சாப்பிட வேண்டும் என்று இருக்கும். ஒரு சிலருக்கு பிரிட்ஜில் வைத்த பொருட்கள் ஒத்துக்கொள்ளாது.
காலையில் தோயவைத்த புது தயிர் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு பிஞ்சு வெள்ளரிக்காய்களை கழுவி சுத்தம் செய்து துடைத்துவிட்டு மெல்லிய வில்லைகளாக நறுக்கி தயிரில் போட்டுக் கொண்டு ஸ்பூனில் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். உப்பு காரம் எதுவும் சேர்க்க வேண்டாம். வெயில் நேரத்தில் சாப்பிட உடல் சூட்டை தணிக்க உதவும் சிறந்த உணவாகும்.
கோடையின் சூட்டை தணிப்பதற்கு அடிக்கடி சாலட் வகைகள் செய்து சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். ஃப்ரூட் சாலட் என்றால் விலை அதிகம் உள்ள பழங்கள் தான் வேண்டும் என்று இல்லை. குறைந்த விலையில் எளிதாக கிடைக்கக்கூடிய பழங்களை சுத்தம் செய்து துண்டுகளாக்கி சிறிது தேன் குறைந்த அளவு சர்க்கரையுடன் சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரை, வெல்லம் சேர்த்துக்கொண்டால் சுவை நன்றாக இருப்பதுடன் அதிக அளவில் இரும்பு சத்தும் கிடைக்கும்.
வாரத்தில் ஒரு நாள் இரவு ஃப்ரூட் நைட் என்று கூட வைத்துக் கொள்ளலாம். ஃப்ரூட் சாலட் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் சாப்பிட்டால் தெம்பாக இருக்கும்.
வெஜிடபிள் சாலட் செய்வதற்கு பெரிதாக சிரமப்பட வேண்டாம். கேரட், வெள்ளரி, வெண்டைக்காய், தக்காளி, பெரிய வெங்காயம், கொத்தமல்லி தழை, உப்பு, சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்தால் போதும். காய்களை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எடுத்து உப்பு, காரம் சேர்த்தல் நன்றாக இருக்கும். காய்கறி சாலட்டிலும் சிறிதளவு வெல்லம், ரெண்டு பேரீச்சம்பழமும் பொடியாக்கி சேர்த்துக் கொள்ளலாம், சத்துடன் கூடிய சுவையாக இருக்கும்.
மில்க் ஷேக் செய்யும்போது கடைகளில் இருப்பது போல் இல்லையே என்று வருத்தப்பட வேண்டாம். பாலுடன், மாம்பழம் அல்லது சப்போட்டா என்று ஏதாவது ஒரு பழம் சேர்த்து மிக்ஸியில் அடிக்கும்போது சிறிது ஐஸ் கட்டிகளையும் சேர்த்து அடித்தால் நுரை நுரையாக பொங்கி கொண்டு சுவையான மில்க் ஷேக் கிடைக்கும்.
வாழைத்தண்டை பொடியாக நறுக்கி எலுமிச்சை சாறு, உப்பு போட்டு கடுகு தாளித்து அதன் சூட்டிலேயே மஞ்சள் பொடி போட்டு கலக்க வேண்டும். பச்சை மிளகாய் கீறி போட்டு கலக்க அருமையான சாலட் ரெடியாகிவிடும்.
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி, தக்காளியை நறுக்கி போட்டு எலுமிச்சை சாறு, உப்பு, பச்சை மிளகாய் கீறி போட்டு கலக்க அருமையான சாலட் ரெடியாகிவிடும்.
நீர் மோரில் இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு மிளகு ரச பொடி சேர்த்து அடித்தால் வெகு ஜோராக இருக்கும்.
மாம்பழ மில்க் தயாரிக்கும் போது சில முலாம் பழத் துண்டுகளையும் சேர்த்து தயாரித்தால் வெகு ஜோராக இருக்கும்.
ஸ்குவாஷ் தயாரிக்கும் போது ரோஜா இதழ்கள், புதினா இதழ்கள், ஆரஞ்ச பழம் மற்றும் எலுமிச்சம்பழத் தோலை துருவி ஃப்ரீசரில் வைத்து வெள்ளரி துருவல், கமலா ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி பழம், மாதுளை முத்துக்களை மேலே தூவி பரிமாறினால் பிரஷ்ஷாக தயாரித்தது போல இருக்கும்.
திராட்சை ஸ்குவாஷ் தயாரிக்க சாறு பிழிவதற்கு முன் திராட்சை பழங்களை அடுப்பில் வாணலியில் போட்டு சிறிது புரட்டி விட்டு தயாரித்தால் அதிகமான சாறு கிடைப்பதோடு அதிகமாக காறாமலும் இருக்கும்.
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவி கொள்ள வேண்டும். பின் உப்பு, மிளகு தூள், வினிகர் சேர்த்து கலக்க வேண்டும். பின்பு நறுக்கிய தக்காளியை போட்டு அலங்கரித்து தயாரித்தால் வெள்ளரிக்காய் சாலட் ரெடியாகிவிடும்.
பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சிறிதாக நறுக்க வேண்டும். மல்லி இலையை மிக்ஸியில் போட்டு அடித்து தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின்பு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். கிரீன் சாலட் ரெடியாகிவிடும்.
வெங்காயத்தை நறுக்கி சிறிது சுடுதண்ணீரில் போட்டு ஊறவைத்து பிழிந்து எடுக்க வேண்டும். பின்பு மிக்ஸியில் தயிர் அடித்து அதில் உப்பு அரைத்த இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து கலந்து பின் வெங்காயத்தை சேர்த்து கலந்தால் வெங்காய சாலட் ரெடியாகி விடும்.
இதுபோல் சாலட் வகைகளையும், ஜூஸ் வகைகளையும் மில்க் ஷேக் வகைகளையும் செய்து சாப்பிட்டால் கோடையை சமாளித்து விடலாம்.