

1. இடியாப்பம் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.அரிசி மாவு 2 கப்
2.உப்பு ½ டீஸ்பூன்
3.எண்ணெய் 1 டீஸ்பூன்
4.தண்ணீர் தேவையான அளவு
இடியாப்பம் செய்முறை
அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, எண்ணெய் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவைக்கவும். கொதிக்கும் நீரை கொஞ்சம் கொஞ்சமாக மாவில் ஊற்றி கரண்டிக் காம்பினால் கிளறிக் கொண்டிருக்கவும். மாவு கெட்டிப் பதத்தில் திரண்டு வரும். அப்போது மாவை கைகளால் ஒருசேர பிசைந்து மென்மையாக்கவும். பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக பிய்த்து எடுத்து இடியாப்ப அச்சில் போட்டு, நெய் தடவிய இட்லி தட்டில் பிழிந்து, நீராவியில் 8-10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
2. சொதி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.கெட்டியான தேங்காய்ப் பால் 1 கப்
2.பச்சை மிளகாய் 3
3.சீரகம் ½ டீஸ்பூன்
4.மிளகு ¼ டீஸ்பூன்
5.இஞ்சி ஒரு அங்குல நீளம்
6.நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு கலவை 1 கப்
7.எண்ணெய் 4 டீஸ்பூன்
8.கடுகு ½ டீஸ்பூன்
9.உளுத்தம் பருப்பு ¾ டீஸ்பூன்
10.கறிவேப்பிலை
11.உப்பு தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் ஆக்கிக்கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து, அவை வெடித்ததும் அரைத்து வைத்துள்ள இஞ்சி பச்சை மிளகாய் பேஸ்டை சேர்க்கவும். மிதமான தீயில் வதக்கவும். பின் நறுக்கிய காய்கறி மற்றும் உப்பை அதனுடன் சேர்த்து, காய்கறி வேக தேவையான தண்ணீரையும் ஊற்றி காய்கறிகளை வேகவிடவும்.
பின் தேங்காய்ப் பாலை ஊற்றவும். இடியாப்பத்தை குழைத்து சாப்பிடும் அளவுக்கு தேவைப்படும் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். பின் இறக்கி வைத்து இடியாப்பத்துடன் சேர்த்து பிசைந்து உட்கொள்ளவும்.
3. பூண்டு இட்லிப் பொடி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.கடலைப் பருப்பு 1½ கப்
2.உளுத்தம் பருப்பு 1 கப்
3.பூண்டு 15 பல்
4.சிவப்பு மிளகாய் 10
5.பெருங்காய தூள் ½ டீஸ்பூன்
6.உப்பு தேவையான அளவு
செய்முறை:
ஒரு அடி கனத்த வாணலியில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை சிவக்கும் வரை தனித் தனியாக வறுத்துக்கொள்ளவும்.
பூண்டுப் பற்களை ஈரப் பதம் நீங்கும் வரை தனியாக வறுத்துக் கொள்ளவும். பெருங்காய தூள் மற்றும் உப்பு இரண்டையும், கடைசியாக தீயை அணைத்துவிட்டு வாணலியில் போட்டு அதன் சூட்டில் இரண்டு கிண்டு கிண்டி எடுக்கவும். பின் அனைத்துப் பொருட்களும் ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு சிறிது கொர கொரப்பாக அரைத்தெடுத்து, உலர்ந்த காற்று புகாத கண்ணாடி ஜாடியில் போட்டு இறுக மூடி வைத்துப் பயன்படுத்தவும்.
4. கறிவேப்பிலை இட்லிப் பொடி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.கழுவி நிழலில் உலர்த்தியெடுத்த கறிவேப்பிலை 2 கப்
2.உளுத்தம் பருப்பு ½ கப்
3.சிவப்பு மிளகாய் 10
4.எள் ¼ கப்
5.பெருங்காய தூள் ī½ டீஸ்பூன்
6.உப்பு தேவையான அளவு
செய்முறை:
ஒரு அடி கனத்த வாணலியை சூடாக்கி உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்தெடுக்கவும். பின் அதே வாணலியில் எள்ளை தனியாக போட்டு வெடித்தவுடன் தட்டில் கொட்டவும். சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை தனித்தனியாக, நசுக்கினால் உடையும் அளவுக்கு வறுத்துக்கொள்ளவும்.
பெருங்காய தூள் மற்றும் உப்பு இரண்டையும், கடைசியாக தீயை அணைத்துவிட்டு வாணலியில் போட்டு அதன் சூட்டில் இரண்டு கிண்டு கிண்டி எடுக்கவும். வறுத்த கறிவேப்பிலை மற்றும் சிவப்பு மிளகாய்களை மிக்ஸியில் போட்டு முப்பது வினாடி ஓடவிட்டு, பிறகு அதனுடன் மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்தெடுக்கவும். வீடே மணக்கும் அளவுக்கு சுவையான கறிவேப்பிலை இட்லிப்பொடி தயார்.
ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த இந்த பாரம்பரிய சமையல் முறைகளைக் கற்றுக்கொள்வதன் மூலம், உங்கள் சமையலறையில் புதிய சுவை அனுபவங்களை எளிதாக உருவாக்கலாம்.