

தினசரி அலுவலகத்திற்கோ அல்லது குழந்தைகளுக்கோ லஞ்ச் பாக்ஸ் கட்ட என்ன சமைப்பது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். அதிக காய்கறிகள் நறுக்க வேண்டிய அவசியம் இல்லாமல், மிகக் குறைந்த நேரத்தில் ருசியாக ஒரு உணவு செய்ய வேண்டும் என்றால் அதற்குச் சரியானது தக்காளி சாதம்தான்.
அதிலும் கடாயில் வதக்கிச் சாதத்தைப் பிசைவதை விட, பிரஷர் குக்கரில் நேரடியாகத் தாளித்துச் செய்தால் நேரம் மிச்சமாவதோடு, மசாலாக்கள் அரிசியோடு ஊறி சுவை அமோகமாக இருக்கும். சமையலே பெரிதாகத் தெரியாதவர்கள் கூட வெறும் 10 நிமிடங்களில் உதிரி உதிரியான, கமகமக்கும் தக்காளி சாதத்தை குக்கரில் எப்படிச் செய்வது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி அல்லது சாப்பாட்டு அரிசி - 1 கப்
நன்கு பழுத்த தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு - தலா 1
சமையல் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி மற்றும் புதினா - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை!
முதலில் அரிசியை நன்றாகக் கழுவி 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு பிரஷர் குக்கரை வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றுங்கள். நெய் சேர்ப்பது தக்காளி சாதத்திற்கு பிரியாணி போன்ற ஒரு அருமையான மணத்தைக் கொடுக்கும்.
எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு சேர்த்துத் தாளிக்க வேண்டும். சோம்பு பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் புதினா இலைகளைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு வாசனை வந்தவுடன், பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளிப் பழங்களைச் சேர்க்க வேண்டும். தக்காளி சாதத்திற்கு தக்காளி நன்றாகக் குழைந்து வர வேண்டியது அவசியம். எனவே, தக்காளி சீக்கிரம் வதங்க அதோடு சிறிதளவு உப்பைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தக்காளி நன்றாக மசிந்து தொக்கு பதத்திற்கு வந்தவுடன், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாகக் கிளறி, மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் மிதமான தீயில் வதக்குங்கள்.
மசாலா நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும்போது, ஊறவைத்துள்ள அரிசியைத் தண்ணீர் இல்லாமல் வடித்து இதில் சேர்த்துக் கிளறுங்கள். சாதாரண பச்சரிசி அல்லது சாப்பாட்டு அரிசி என்றால் 1 கப் அரிசிக்கு சரியாக 2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். தேவையான அளவு உப்பைச் சரிபார்த்துவிட்டு, குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் விட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள்.
விசில் முழுமையாக அடங்கியதும் குக்கரைத் திறந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி, சாதம் உடையாமல் கரண்டியின் காம்பால் மெதுவாகக் கிளறி விடுங்கள். சுடச்சுட, உதிரி உதிரியான '10 நிமிட குக்கர் தக்காளி சாதம்' தயார்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here