

நம்மில் பலரும் வீட்டில் சாம்பார் வைக்க வேண்டும் என்றால் உடனே கடைக்குச் சென்று, நல்ல பிராண்டு சாம்பார் பொடியைப் பார்த்து வாங்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அதை வாங்கி வைத்திருப்பதே ஒரு வசதியும் பெருமையும் என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மையில், அவசர நேரத்திற்கு கடையில் வாங்கும் சாம்பார் பொடி பயன்படுத்திக் கொள்ளலாம்; அதில் தவறில்லை.
ஆனால், வீட்டிலேயே நமக்குத் தேவையான பொருட்களைத் தரமாகத் தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்து, சரியான பதத்தில் வறுத்து சாம்பார் பொடி தயாரித்து வைத்துக் கொள்வதுதான் சிறந்த பழக்கம். நம் கையால் தயாரித்த பொடியின் சுவையும் மணமும் மட்டுமல்ல, அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும்.
வீட்டில் தயாரிக்கும் சாம்பாருக்கும், கடைகளில் கிடைக்கும் சாம்பாருக்கும் சுவையில் மட்டுமல்ல, பயன்படுத்தப்படும் பொருட்களிலும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
கடைகளில் கிடைக்கும் சாம்பார் பொடிகளில் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கச் சேர்க்கப்படும் பொருட்கள், அதிக உப்பு அல்லது சுவையை அதிகரிக்கச் செய்யப்படும் பொருட்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், வீட்டிலேயே சாம்பார் பொடி தயாரிக்கும்போது நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் பார்த்துத் தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்து, அளவாக வறுத்து அரைத்துப் பயன்படுத்த முடியும். அதனால் சுவையோடு சேர்த்து, தரத்திலும் நமக்கு முழுமையான நம்பிக்கை கிடைக்கிறது.
நம்முடைய சமையலறையில் எப்போதும் தயாராக இருக்கும் வகையில் ஒரு நல்ல சாம்பார் பொடி இருந்துவிட்டால், சாம்பார் வைப்பதும் மிகவும் எளிதாகிவிடும். அதுவும் வீட்டில் வறுத்து அரைத்த பொடியின் மணமும் சுவையும் தனி ருசிதான்!
வீட்டிலேயே எளிதாக இரண்டு விதமான சாம்பார் பொடிகளைத் தயாரித்து வைத்துக்கொள்ளலாம். ஒன்று பாரம்பரிய சாம்பார் பொடி; மற்றொன்று கடை சாம்பாரின் மசாலா மணத்தையும் சுவையையும் தரும் “மசாலா சாம்பார் பொடி”. வாங்க, இந்த இரண்டு வகையான சாம்பார் பொடிகளையும் வீட்டிலேயே எளிமையாகத் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்!
1. பாரம்பரிய சாம்பார் பொடி
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு – இரண்டு கப்
துவரம் பருப்பு – ஒரு கப்
பச்சைக் கடலைப் பருப்பு – இரண்டு கப்
நல்ல காரமுள்ள, காம்பு நீக்கிய காய்ந்த மிளகாய் – கால் கிலோ
சீரகம் – ஒரு கப்
கொத்தமல்லி விதைகள் – ஒன்றரை கப்
மிளகு – ஒரு கப்
கறிவேப்பிலை – ஒரு பெரிய கொத்து
வெந்தயம் – கால் கப்
பெருங்காயம் – ஒரு சிறு துண்டு
கல் உப்பு – இரண்டு ஸ்பூன்
செய்முறை:
முதலில் பருப்புகளைச் சுத்தம் செய்து, கழுவி, தண்ணீரை வடித்து, வெயிலில் நன்றாக உலர்த்தி எடுக்கவும். கறிவேப்பிலையையும் அதேபோல் தண்ணீரில் கழுவி, நன்றாக ஈரம் போகும்வரை நிழலில் உலர்த்தி எடுக்கவும்.
நன்றாக உலர்ந்த பருப்புகளைத் தனித்தனியாக வாணலியில் போட்டு நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும். கருகாமல் சிவக்க வறுப்பதுதான் முக்கியம்.
அதே வாணலியில் சீரகம், மிளகு, கொத்தமல்லி விதைகள் ஆகியவற்றைத் தனித்தனியாகப் போட்டு வறுத்தெடுக்கவும். இறுதியாகப் பெருங்காயத் துண்டைப் போட்டு வறுத்தெடுக்கவும்.
இறுதியாக, அதே வாணலியில் சிறு தீயில் கறிவேப்பிலையை நிறம் மாறாமல், நன்கு மணம் வரும் வரை வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அந்த வாணலியின் சூட்டிலேயே கல் உப்பைப் போட்டு வறுத்தெடுத்து, மற்ற பொருட்களுடன் சேர்த்து கலந்துவைக்கவும்.
கறிவேப்பிலையை கையில் எடுத்துப் பொடித்தால் பொடியாகும் வகையில் நன்கு வறுத்தெடுத்து வைக்கவும். வறுத்த பொருட்களை நன்றாக ஆறவிடவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து நன்றாகப் பொடித்துக்கொள்ளவும். வறுத்த பொடியை நன்றாகச் சலித்து, சூடு ஆறிய பின் காற்றுப்புகாத ஜாரில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.
இந்தப் பொடியில் உப்பு சேர்த்து இருப்பதால், சாம்பாருக்கு உபயோகிக்கும்போது கொஞ்சம் குறைவாகச் சேர்ப்பது நலம்.
2. மசாலா சாம்பார் பொடி
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு – ஒரு கப்
துவரம் பருப்பு – ஒரு கப்
பச்சைக் கடலைப் பருப்பு – ஒரு கப்
நல்ல காரமுள்ள, காம்பு நீக்கிய காய்ந்த மிளகாய் – 50 எண்ணிக்கை
சீரகம் – ½ கப்
கொத்தமல்லி விதைகள் – 1 கப்
மிளகு – ½ கப்
கறிவேப்பிலை – ஒரு பெரிய கொத்து
வெந்தயம் – 1 ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிறு துண்டு
கல் உப்பு – இரண்டு ஸ்பூன்
பட்டை – 10
கிராம்பு – 10
ஏலக்காய் – 10
சோம்பு – ½ கப்
கசகசா – ¼ கப்
மேற்கூறிய பொருட்களைச் சுத்தம் செய்து, தனித்தனியாகச் சிறு தீயில் சிவக்க வறுத்தெடுக்கவும்.
மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாகப் பொடித்து வைத்துக் கொள்ளலாம்.
அரைத்துவிட்டுச் சாம்பார் செய்யும்போது, தேங்காயுடன் இந்தப் பொடியையும் சேர்த்து அரைத்து, பருப்புடன் சேர்த்துச் சாம்பார் வைத்தால் வீடே மணக்கும்.
இந்தப் பொடியை உருளைக்கிழங்கு கட்லெட், பொடிமாஸ் மற்றும் பொரியல்களுக்கும் கூடத் தூவிக்கொள்ளலாம்.
சிறு குறிப்பு:
சாம்பார் பொடிக்குத் தேவையான பருப்பு, மசாலா பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாகச் சிறு தீயில் பொன்னிறமாகவும் நன்றாக மணம் வரும் வகையிலும் வறுப்பது மிகவும் முக்கியம். இப்படி சரியான பதத்தில் வறுப்பதால்தான் பொருட்களின் இயற்கையான மணமும் சுவையும் நன்றாக வெளிப்பட்டு, பொடியும் நீண்ட நாட்கள் நல்ல மணத்துடன் இருக்கும். ஆனால் அதிகமாக வறுத்து கருகிவிட்டால், பொடியின் சுவையும் மணமும் மாறிவிடும். எனவே “கருகாமல் சிவக்க வறுப்பதே” நல்ல சாம்பார் பொடியின் ரகசியம்.
சேமிப்பு ரகசியம்
சாம்பார் பொடியை அரைத்த பிறகு முழுமையாக ஆறவிட்டு, ஈரம் இல்லாத காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். எப்போதும் ஈரம் இல்லாத, சுத்தமான உலர் ஸ்பூனைப் பயன்படுத்தி எடுத்தால் பொடி நீண்ட நாட்கள் நல்ல மணத்துடனும் சுவையுடனும் இருக்கும். இவ்வாறு முறையாகச் சேமித்தால் சுமார் 3 மாதங்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.
இந்தச் சேமிப்பு மற்றும் வறுக்கும் முறைகளைக் கையாள்வதன் மூலம், பொடியின் மணமும் சுவையும் 3 மாதங்கள் வரை மாறாமல் அப்படியே இருக்கும்; அவசர நேரங்களிலும் சமையல் வேலை மிக எளிதாகும்.