
சமீப காலமாக, சிறப்பான உடல் ஆரோக்கியம் பெற நம்மில் பலரின் பார்வையும் சிறுதானியம் எனப்படும் மில்லட் (millet) வகைகளின் பக்கம் திரும்பியுள்ளது. பல வகையான மில்லட்களில் ஒன்றான ஜோவர் எனப்படும் சோளத்தில் உடல் நலத்தை மேம்படுத்தக் கூடிய ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன உள்ளன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
சோளம் முற்காலத்தில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பயிரிடப்பட்டு வந்தது. தற்போது உலகெங்கும் பிரசித்தி பெற்று எல்லா நாடுகளிலும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சோளத்தில் கோதுமையில் இருப்பதை விட அதிகளவு ப்ரோட்டீன் உள்ளது. கோதுமை, பார்லி, கம்பு போன்ற தானியங்களில் க்ளூடன் என்ற புரதம் உள்ளது. இது செலியாக் நோய் உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. சோளத்தில் க்ளூடன் கிடையாது.
எனவே, அனைவரும் இதை உட்கொள்ளலாம். சோளத்தில் டயட்டரி நார்ச்சத்து அதிகம். இது இரைப்பை குடல் இயக்கங்கள் சிறப்பாக நடைபெற உதவும். வயிற்றுப் போக்கு, வயிறு வீக்கம் மற்றும் மலச் சிக்கல் போன்ற கோளாறுகள் நீங்கவும் உதவி புரியும்.
மேலும், இது அதிக நேரம் வயிற்றில் தங்கி, தொடர்ந்து மெதுவாக கார்போ ஹைட்ரேட்களை இரத்தத்தில் செலுத்திக் கொண்டிருக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமலும், குறையாமலும் சமநிலையில் வைத்துப் பராமரிக்க முடியும். மேலும் சோளம் குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட தானியமாக இருப்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாகிறது.
சோளம் செரிமானமாக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், பசியுணர்வு உண்டாகும் நேரம் தள்ளிப் போடப்படுகிறது. இதனால் உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்து, உடல் எடை குறையவும் வாய்ப்பு உண்டாகும்.
சோளத்தில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளன. இதிலுள்ள கால்சியம் பற்களையும், எலும்புகளையும் பலப்படுத்த உதவும்.
மேலும், கீல் வாதம் மற்றும் ஆஸ்டியோபொரோஸிஸ் (osteoporosis) போன்ற நோய் வரும் அபாயத்தைத் தடுக்கும். இரும்புச் சத்து, இரத்தத்தில் ஹீமோக்ளோபின் அளவை உயரச் செய்து, அனீமியா நோய் வரும் அபாயத்தைத் தடுக்கும். சோளம் சரும ஆரோக்கியம் மேம்படவும், சருமம் பள பளப்புப் பெறவும் உதவும். சோளத்தை பவுடராக்கி அதுனுடன் தயிர் மற்றும் தேன் சேர்த்துப் பேஸ்ட் செய்து, முகத்தில் மாஸ்க்காகப் போட்டு, பதினைந்து நிமிடத்தில் கழுவி விட முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி முகம் மென்மையாகும்.
சோளத்தில் உள்ள பைட்டோ கெமிகல்கள், பினால்ஸ் மற்றும் டேனின் போன்றவை எடை குறைப்பிற்கும், இதய ஆரோக்கியம் மேம்படவும், LDL எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவும். வாத, கப தோஷங்கள் நீங்கவும் சோளம் உதவும் என ஆயுர்வேதம் கூறுகிறது. அஜீரணம், அலர்ஜி போன்ற குறைபாடு உள்ளவர்கள் சோளத்தைத் தவிர்த்துவிடலாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர் ஆலோசனை பெற்ற பின் முடிவெடுக்கலாம்.
100 கிராம் சோளத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின்
விரிவான விளக்கம்:
கலோரி 329
கொழுப்பு 3.5 g
சாச்சுரேட்டட் ஃபேட் 0.6 g
கார்போஹைட்ரேட் 72 g
டயட்டரி நார்ச்சத்து 6.7 g
சர்க்கரை 2.5 g
ப்ரோட்டீன் 11 g
கால்சியம் 13.00 mg
இரும்புச் சத்து 3.36 mg
பொட்டாசியம் 363 mg
சோடியம் 2 mg
தயாமின் 0.35 mg
ரிபோஃபிளவின் 0.14 mg
நியாசின் 2.1 mg
ஃபொலேட் 39.42 mg