

கல்யாணம் என்றால் பந்திக்கு முந்துபவர்கள் அநேகர். காரணம் இன்றாவது நல்ல ருசியான உணவு உண்ணலாம் எனும் எண்ணமே. என்னதான் நாம் பார்த்துப் பார்த்து சமைத்தாலும் கல்யாண சமையல் ருசி நமக்கு கிடைக்காது. அப்படி ஒரு தனிச்சுவை எப்போதும் திருமண விருந்தில் இருப்பது காலம் காலமாக இருக்கும் உண்மை. அப்படி என்னதான் ரகசியங்கள் அந்த சமையலில் மட்டும்?
பொதுவாக ஒரு திருமணத்திற்குச் சென்றால் வாழை இலையில் பரிமாறப்படும் சாதாரண சாம்பார், ரசம், உருளைக்கிழங்கு வறுவல், கூட்டு, அவியல் என ஒவ்வொரு உணவுக்கும் தனி ருசி இருக்கும்.
அதே உணவை வீட்டில் சமைத்தாலும், ஏதோ ஒரு குறை இருப்பதுபோல் தோன்றும். இதற்குப் பின்னால் சமையல் முறைகள் முதல் உணவின் அளவு வரை பல காரணங்கள் உள்ளன. இந்த கல்யாண உணவின் ருசி வீட்டில் கிடைக்காததற்கு 6 காரணங்கள் சொல்லப்படுகிறது. அவைகள் பற்றி இங்கே காண்போம்.
1. மசாலா மற்றும் தாளிப்பின் சரியான அளவை கல்யாணச் சமையலில் சேர்ப்பார்கள். குறிப்பாக சீரகம், மிளகு, சோம்பு, பட்டை, கிராம்பு போன்ற மசாலாப் பொருட்களை உணவுக்கு ஏற்ற அளவில் பயன்படுத்துவார்கள். குறிப்பாக தனித்த ருசிக்காக மசாலாப் பொருட்களைச் சரியான பதத்தில் வறுத்து அரைப்பது அவற்றின் மணத்தையும் சுவையையும் அதிகரிக்கும். அதிலும் சாம்பார் பொடி, ரசப்பொடி போன்றவற்றின் தயாரிப்பு முறையும் ருசியில் மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகளாகும்.
2. வெங்காயம், தக்காளியைச் சரியான பதத்தில் வதக்குவது ருசிக்கான முக்கியமான பங்கு வகிக்கிறது. வீடுகளில் அவசரமாக வதக்குவது போல் இல்லாமல் வெங்காயம், தக்காளியை சரியான முறையில் நறுக்கி நிதானமாக அவற்றின் பச்சை வாசனை நீங்கி, இயல்பான இனிப்புச் சுவை வெளிப்படும் வரை வதக்குவது முக்கியம். வெங்காயம் பொன்னிறமாக வதங்குவதும், தக்காளி நன்றாகக் குழைவதும் குழம்புக்கு நல்ல சுவையையும் மணத்தையும் கொடுக்கும்.
3. தாராளமான எண்ணெய் மற்றும் நெய் பயன்பாடு சமையலுக்கு தனி சுவை தரும். திருமண விருந்துகளில் சில உணவுகளில் வீட்டில் பயன்படுத்துவதைவிட அதிகமாக தரமான எண்ணெய் அல்லது நெய் சேர்க்கப்படலாம். எண்ணெயில் உள்ள கொழுப்புச் சத்து மசாலாப் பொருட்களின் மணத்தை உணர உதவுகிறது. நெய் சேர்த்த பருப்பு, பொங்கல், சில வகைக் குழம்புகள் ஆகியவை இதனால் தனித்துவமான சுவையைப் பெறுகின்றன. ஆனால் அதிக எண்ணெய், நெய் சேர்ப்பதுதான் நல்ல ருசிக்கான ஒரே வழி அல்ல. அளவோடு பயன்படுத்தினாலும் சுவையான உணவைத் தயாரிக்கலாம் என்பதையும் கவனிக்கவேண்டும்.
4. பெரிய பாத்திரங்களில் சமைக்கும் முறையினால் உணவின் பதமும் ருசியும் அதிகரிக்கும். திருமணங்களில் அதிக அளவில் உணவு சமைக்கப்படுவதால், வெப்பம் பரவும் விதம், பொருட்களைக் கலக்கும் முறை, தண்ணீரின் அளவு போன்றவை வீட்டுச் சமையலிலிருந்து மாறுபடலாம். பெரிய அளவில் சமைக்கும்போது பொருட்களின் விகிதத்தைச் சரியாகக் கணக்கிடுவது அவசியம். பெரிய பாத்திரத்தில் சமைப்பதால் மட்டுமே ருசி கூடிவிடாது; சரியான பதமும் , உணவுகளுக்கேற்ற வெப்ப அளவும் முக்கியம்.
5. உணவின் பதமும் சமைக்கும் நேரமும் கல்யாண சமையலில் ருசிக்கு மிக முக்கியமாகிறது. குறிப்பாக காய்கறிகள் அளவுக்கு அதிகமாக வேகாமல் இருப்பது, பருப்பு சரியான பதத்தில் இருப்பது, குழம்பு தேவையான அளவுக்குக் கெட்டியாக இருப்பது ஆகியவை உணவின் ருசியைத் தீர்மானிக்கின்றன. உதாரணமாக பருப்பு சாம்பாரில் பருப்பு, காய்கறி, புளி ஆகியவற்றின் விகிதம் சரியாக இருக்க வேண்டும்.
ரசத்தை நீண்ட நேரம் கொதிக்கவிடாமல், மணம் மாறாதபடி தயாரிக்க வேண்டும்.
பொரியலைச் சரியான வெப்பத்தில் வதக்கினால்தான் அதன் சுவையும் தன்மையும் சிறப்பாக இருக்கும்.
6. இறுதியில் உணவைச் சூடாகப் பரிமாறுவதால் வரும் தனிச்சுவை. திருமண விருந்துகளில் சாம்பார், ரசம், பொரியல் போன்றவை சரியான வெப்பநிலையில் சுடச்சுட பரிமாறப்படுவது சுவை அனுபவத்தை மேம்படுத்துகிறது. சூடான உணவு அதன் மணத்தையும் சுவையை நாம் உணரும் விதத்தையும் பாதிக்கிறது. மேலும், வாழை இலையில் பலவகை உணவுகளை ஒன்றாகச் சாப்பிடும்போது இனிப்பு, காரம், புளிப்பு, உப்பு ஆகிய சுவைகள் இணைந்து தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன.
இவைகள் இருக்கட்டும். வீட்டிலேயே கல்யாணச் சாப்பாட்டு ருசி பெற இந்த 5 எளிய குறிப்புகளையும் பின்பற்றி பாருங்கள்.
சாம்பார் மணக்க பருப்பை நன்றாக வேகவைத்து, வீட்டில் தயாரித்த சாம்பார் பொடியைப் பயன்படுத்துங்கள்.
ரசம் சூப்பராக இருக்கமிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றைத் தேவையான அளவில் இடித்துச் சேருங்கள்.
உருளைக்கிழங்கு வறுவல் சிறக்க கிழங்கில் உள்ள ஈரப்பதத்தைக் குறைத்து, மிதமான தீயில் நன்றாக வறுங்கள்.
கூட்டு, அவியல்: காய்கறிகளை அளவுக்கு அதிகமாக வேகவிடாமல், தேங்காய் அரவையின் அளவைச் சரியாகப் பயன்படுத்துங்கள்.
அனைத்திற்கும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போன்றவற்றைச் சரியான பதத்தில் தாளித்து உணவில் சேருங்கள்.
மேலும் கல்யாணச் சாப்பாட்டின் ருசிக்கு சரியான பொருட்களின் விகிதம், மசாலாவின் மணம், சமைக்கும் பதம், கொழுப்பின் அளவு, பரிமாறும் வெப்பநிலை ஆகியவை ஒன்றாகச் சேர்வதே அதன் தனித்துவத்திற்குக் காரணம்.
நாம் வீட்டில் சமைக்கும்போதும் இந்த முறைகளைக் கடைப்பிடித்தால், குறைந்த எண்ணெயிலும் சுவையான விருந்துச் சாப்பாட்டைத் தயாரிக்க முடியும் என்பது உறுதி. கூடவே நமது சாப்பாடு சாப்பிடுபவர்கள் மனம் நிறையும் வகையில் இருக்க வேண்டும் என்ற அன்பும் இருந்தால் வீட்டு சமையல் ருசி கல்யாண விருந்தையும் மிஞ்சும்.