

கல்யாணத்திற்கு போனாலே நமக்கு பசியில்லை என்றாலும் வாழை இலையில் பரிமாற தொடங்கியதும் பசி தானாகவே வந்துவிடும். இலையை விரித்தவுடன் பாயசம், பச்சடி, உருளைக் கிழங்கு பொறியல், கூட்டு, அவியல், கேரட் பீன்ஸ் கலந்த பொறியல் என இப்படி பல வகையான உணவுகளை பரிமாறுவர்கள்.
இதில் நம்ம எல்லோருக்குமே பிடித்த அயிட்டம் எதுவென்றால் அவியல்தான். கல்யாண வீட்டில் சாப்பிடுகிற மாதிரி வீட்டில் வரவில்லை என பல பேர் நினைப்பார்கள். இதில் ஒன்றும் சிரமமே இல்லைங்க... கரெக்டான காய்கறிகளை செலெக்ட் பண்ணி சரியான விதத்தில் நறுக்கி பக்குவமாக வேகவைத்து பண்ணினால் சுவை சூப்பராக இருக்கும். கல்யாண வீட்டு அவியல் செய்முறையை பார்க்கலாமா..?
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 1 முருங்கைக் காய் - 1 உருளைக் கிழங்கு - 1 பீன்ஸ் – 150g கேரட் - 1 வெள்ளை பூசணிக்காய் - 150கிராம் வாழைக்காய் – 1
சேனைக்கிழங்கு – 150g துருவிய தேங்காய் – 1 கப்
பச்சை மிளகாய் – 4 அல்லது 5 சீரகம் - 1 ஸ்பூன் தயிர் – 1 கப் கடுகு - 1 ஸ்பூன் பெருங்காயத்தூள் - சிறிதளவு
முதலில் எல்லா காய்கறிகளையும் நீள வாக்கில் ஒரே அளவிற்கு வெட்டிக்கொள்ளவும். இந்த அவியலின் சிறப்பே காய்கறிகளை நீளவாக்கில் வெட்டுவதாகும். அதிக பருமனாகவும் இல்லாமலும் மெல்லியதாகவும் இல்லாமலும் மீடியமானதாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். அவியலுக்கு குறிப்பிட்ட காய்கறிகளை போட்டால் மடடுமே சுவை வரும்.
நறுக்கிய காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவிக்கொள்ளவும். முருங்கைக்காயை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு, கழுவிக்கொள்ளவும். இப்போது ஒரு வாணலியில் முருங்கைக் காயை போட்டு ஒரு சிட்டிகை உப்பை போட்டு வேகவைத்துக் கொள்ளவும்.
பிறகு குக்கரில் மற்ற காய்கறிகளை எல்லாம் போட்டு தேவையான அளவு உப்பை போடவும் மஞ்சள் தூளை சேர்க்க வேண்டாம். அவியல் பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்க வேண்டும். பிறகு தண்ணீரை ஊற்றவும்.
சிறிதளவு தண்ணீர் ஊற்றினால் போதும் அதிகமாக தண்ணீரை சேர்க்காதீர்கள் அதிக அளவு தண்ணீர் சேர்த்தால் அவியல் ருசியாக இருக்காது மிதமான தீயில் அடுப்பை வைத்து, 1 விசில் விட்டு இறக்கிக்கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் துருவிய தேங்காய், சீரகம்,பச்சை மிளகாய் மற்றும் தண்ணீரை சேர்த்து நன்றாக மென்மையாக அரைத்துக்கொள்ள வேண்டும். மென்மையாக அரைத்தால் தான் சுவை அதிகமாக இருக்கும்.
அடுப்பில் ஒரு கடாயை மிதமான தீயில் வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி அதில் அரைத்த விழுதை சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு வேகவைத்துள்ள காய்கறிகளை உடையாமல் மெதுவாக சேர்த்து கொதிக்கவிட வேண்டும். மறக்காமல் வேக வைத்த முருங்கைக் காயையும் போட்டு கொள்ளவும். அதிகமாக காய்கறிகளை கிளறவேண்டாம்
கலவை கொஞ்சம் சிறிது கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும். ஒரு இலுப்பை கரண்டியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் போட்டு தாளித்து கலவையில் சேர்த்து கிளறி விடவேண்டும்.
சிறிது ஆறிய பிறகு ஒரு கப் தயிரை சேர்த்து மெதுவாக கிளறவேண்டும். தயிர் அதிகமாக புளிக்காமல் லேசான புளிப்போடும் கட்டியாகவும் இருக்க வேண்டும். அவ்வளவுதாங்க... சிம்பிள்... சுவையான கல்யாண வீட்டு அவியல் தயார்!
செய்து பாருங்கள்.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் அதே பிரத்யேக மணத்துடனும், காய்கறிகள் குழையாத சுவையுடனும் நாவூறும் அவியலை உங்கள் வீட்டிலேயே மிக எளிதாகச் செய்து அசத்த முடியும்.