

கல்யாண வீட்டு விருந்தில் வாழை இலையில் பரிமாறப்படும் உணவுகளுக்கென்று தனி ருசி உண்டு. குறிப்பாக, பரங்கிக்காயில் செய்யப்படும் கூட்டு, இனிப்பும் காரமும் கலந்து சுவையாக இருக்கும். சாம்பார், ரசம், பொரியல் எனப் பல வகை உணவுகளுக்கு நடுவே பரங்கிக்காய் கூட்டு தனி இடம் பிடிக்கும்.
பாட்டி காலத்தில் வீட்டில் அரைத்த மசாலா, புதிதாகத் துருவிய தேங்காய், பாசிப்பருப்பு என எளிய பொருட்களைக்கொண்டே இந்தக் கூட்டு தயாரிக்கப்பட்டது. அந்தப் பாரம்பரியச் சுவையை இரண்டு விதங்களில் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.
பாட்டி காலத்துக் கல்யாண வீட்டு பரங்கிக்காய் கூட்டு
தேவையான பொருட்கள்:
பரங்கிக்காய் – 2 கப் (துண்டுகளாக்கியது)
பாசிப்பருப்பு – ¼ கப்
துருவிய தேங்காய் – ½ கப்
சீரகம் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – ¼
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைவேக்காடாக வேகவைக்கவும். அதனுடன் பரங்கிக்காய் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.
தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பரங்கிக்காய் நன்றாக வெந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்துக் கலந்து, மிதமான தீயில் சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து கூட்டில் கொட்டவும்.
பாட்டி காலத்துச் சுவையில் தயாரான பரங்கிக்காய் கூட்டு தயார்! இதனைச் சூடான சாதத்துடன் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி.
கல்யாணப் பந்தி ஸ்பெஷல் பரங்கிக்காய் கூட்டு
இந்த வகைக் கூட்டில் தேங்காய், பருப்பு, மசாலா ஆகியவற்றின் சேர்க்கை சுவையை அதிகரிக்கும். கல்யாண வீட்டு விருந்தில் சாம்பார் சாதம், ரசம் சாதம் ஆகியவற்றுடன் பரிமாறுவதற்கு ஏற்றது.
தேவையான பொருட்கள்:
துண்டுகளாக நறுக்கிய பரங்கிக்காய் – 2 கப்
கடலைப்பருப்பு – ¼ கப்
துருவிய தேங்காய் – ½ கப்
காய்ந்த மிளகாய் – 3
தனியா – 1 ஸ்பூன்
சீரகம் – ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
கடலைப்பருப்பைக் கழுவி, அரைவேக்காடாக வேகவைக்கவும். பரங்கிக்காய் துண்டுகளைச் சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு வேகவிடவும்.
தனியா, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை லேசாக வறுத்துக்கொள்ளவும். அவற்றுடன் தேங்காய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.
புளியைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, வேகவைத்த பரங்கிக்காயுடன் சேர்க்கவும். பச்சை வாசனை போனதும் அரைத்த மசாலாவைச் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்கவிடவும். இறுதியில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் கொட்டவும்.
சுவையான கல்யாண வீட்டு பரங்கிக்காய் கூட்டு தயார்!
சுவையைக் கூட்டும் பாட்டி வீட்டு ரகசியங்கள்!
* பரங்கிக்காயை அதிகமாக வேகவைத்தால் குழைந்துவிடும். துண்டுகள் வடிவம் மாறாமல் வேகவைக்க வேண்டும்.
* தேங்காயை அரைக்கும்போது அதிகத் தண்ணீர் சேர்க்காமல் இருப்பது கூட்டின் பதத்தைத் தக்கவைக்கும்.
* புளியை அளவாகச் சேர்க்க வேண்டும். அதிகமாகச் சேர்த்தால் பரங்கிக்காயின் இயல்பான இனிப்புச் சுவை குறைந்துவிடும்.
* கூட்டு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிதளவு வெந்நீர் சேர்த்துக்கலக்கலாம்.
* புதிதாக அரைத்த மசாலாவும், சரியான அளவில் சேர்க்கப்படும் தாளிப்பும் கூட்டின் மணத்தையும் சுவையையும் அதிகரிக்கும்.
இரண்டு வகைக் கூட்டுகளையும் சூடான சாதம், சாம்பார், ரசம், பொரியல் ஆகியவற்றுடன் பரிமாறலாம். பாட்டி காலத்து எளிய சமையலாக இருந்தாலும், கல்யாணப் பந்தியில் பரிமாறப்படும் உணவுகளின் சுவையை நினைவூட்டும் இந்தப் பரங்கிக்காய் கூட்டு, வீட்டுச் சாப்பாட்டையும் விருந்துச் சாப்பாடாக மாற்றிவிடும்!