
அரை டம்ளர் உளுத்தம் பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து, தோசைக்கு அரைப்பதுபோல் அரைத்துக்கொள்ளுங்கள். இத்துடன் மூன்று டம்ளர் கோதுமை மாவு சேர்த்துக் கரைத்து தோசை சுட்டால் கல் தோசைபோல மிகவும் ருசியாக இருக்கும்.
கோதுமை மாவையும், அரிசி மாவையும் சமஅளவு எடுத்து, அதில் தேவையான உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து சுவையான பஜ்ஜி செய்யலாம்.
கேரட்டைத் தோல் சீவி ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் போட்டு வையுங்கள். பிறகு எடுத்துத் துருவினால் கேரட் மிருதுவாகி எளிதாக துருவ வரும்.
குருமா, கிரேவி வகைகளில் காரம் அதிகமாகிவிட்டால், வாணலியில் ஊற்றி, ஒரு டம்ளர் காய்ச்சின பாலை சேர்க்கவும். பிறகு கரண்டியால் நன்கு கிளறிவிட்டால் காரம் வெகுவாக குறைந்திருக்கும்.
முருங்கைக்காய்களைத் துண்டுகளாக்கியபின் அப்படியே சாம்பாரில் போடாமல், இரண்டாக கீறிவிட்டுப்போட்டால், சாம்பாரின் சுவை கூடுவதுடன் சீக்கிரம் வெந்தும்விடும்.
ஒரு டம்ளர் உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். சட்டென்று தேன்குழல், முறுக்கு போன்ற பட்சணங்கள் செய்ய விரும்பினால், ஒரு டம்ளர் அரிசி மாவுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்தையும், தேவையான உப்பும் கலந்து பத்தே நிமிடங்களில் பட்சணம் தயாரித்துவிடலாம்.
பீன்ஸ், அவரைக்காய் போன்றவை சீக்கிரம் முற்றிவிடாமல் இருக்க,அவற்றின் நாரை நீக்கிவிட்டு பைகளில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
கட்லெட்டை மட்டும்தான் பிரட் தூளில் புரட்டி பொரிக்கவேண்டும் என்பதில்லை. வடைகள் பொரிக்கும்போது பிரட் தூளில் ஒற்றி எடுத்துப் பொரித்தால், நீண்ட நேரம் வடைகள் மொறு மொறுவென்று இருக்கும்.
பூரி உப்பலாகவும், நெடுநேரம் மொறுமொறுவென்றும் இருக்க வேண்டுமா? பூரிக்கு மாவு பிசையும்போது இரண்டு ஸ்பூன் சோளமாவை சேர்த்துப் பிசைந்து கொண்டால் போதும்.
சாம்பார் செய்யும்போது புளியின் அளவைக் குறைத்து தக்காளிப் பழங்களை சேர்த்துக் கொதிக்கவிட்டால், சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும்.
கத்திரிக்காய், வாழைக்காய் போன்ற காய்கள் நறுக்கியதுமே கறுத்துவிடும். இதைத் தவிர்க்க தண்ணீரில் ஒரு கரண்டி பாலை
ஊற்றி, அதில் கறிகாய்த் துண்டுகளைப்போட்டால் காய்கள் சமைக்கும்வரை நிறம் மாறாமல் இருக்கும்.
வேர்கடலை, பொட்டுக்கடலை போன்றவற்றை உருண்டை பிடிக்க, வெல்லப்பாகு காய்ச்சும்போது, வெல்லத்துடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரையையும் சேர்த்துக் காய்ச்சினால், உருண்டைகள் கரகரப்புடனும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமலும் இருக்கும்.