உடல் எடையைக் குறைக்கும் 'கொள்ளு மசியல்' - தஞ்சாவூர் ஸ்பெஷல் 'டாங்கர் பச்சடி'! செய்வது எப்படி?

'Kollu Masiyal' for weight loss
'Kollu Masiyal' for weight loss
Published on

கொள்ளு மசியல் மிகவும் சுவையான ஆரோக்கியமான அபாரமான ஒரு துணை உணவாகும். கொள்ளு ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதை மசியல், ரசம், துவையல் என பலவிதமாக சமைத்து சாப்பிடலாம்.

கொள்ளுவில் உள்ள நார்சத்து மற்றும் புரதச்சத்து பசியைக் கட்டுப்படுத்தி உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எரித்து நம் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொள்ளுக்கு உண்டு. இதன் காரணமாக சளி, இருமல் மற்றும் காய்ச்சலை முதலான பிரச்னைகளைத் தீர்க்க இது உதவுகிறது. இது உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும் இயல்பு கொண்டதால் கோடைக்காலத்தில் சற்று குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது நாம் கொள்ளை நம் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளப் பழகவேண்டும்.

கொள்ளு மசியல் செய்யத் தேவையான பொருட்கள்:

கொள்ளு – ஒரு கப்

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி

தக்காளி - ஒன்று

பச்சை மிளகாய் – மூன்று

பூண்டு – 5 பல் எண்ணிக்கை

கடுகு – சிறிதளவு

சீரகம் – சிறிதளவு

மஞ்சள் தூள்

உப்பு - சிறிதளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

ஒரு கப் கொள்ளை நன்றாகக் கழுவிய பின்னர் அதை இரவு முழுவதும் ஊற வைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் அதை மூன்று கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் சிறிது மஞ்சத்துளைப் போட்டு ஆறு விசில் வரும்வரை வேக வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் கடுகு, சீரகம், பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் தக்காளியை நறுக்கி அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
கிராமத்து கை மணத்தில் காரசாரமான மிளகாய்த்தூள்: அந்த 'நெய் புகை' ரகசியம் தெரியுமா?
'Kollu Masiyal' for weight loss

வெந்த கொள்ளை எடுத்து அப்படியே கடாயில் போட்டு சிறிது உப்பு சேர்த்து மத்தைக் கொண்டு நன்றாக குழைய மசிக்கவும்.

பின்னர் கடாயை சிறுதீயில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி பத்து நிமிடங்கள் கழித்து கறிவேப்பிலையைத் தூவி இறக்கவும்.

கொள்ளு மசியலை சூடான சாதத்தில் போட்டு சிறிது நெய்யை ஊற்றிப் பிசைந்த சாப்பிட்டால் அபாரமாக இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் சிறந்த காம்பினேஷனாகும்.

தஞ்சை என்றாலே நம் நினைவிற்கு வருவது சுவையான விருந்து. தஞ்சாவூர் கல்யாண விருந்தில் வாழைக்காய் கறி, பயத்தம்பருப்பு காரசக்கோசுமல்லி, பிட்ளை, ரசவாங்கி, பொரிச்ச குழும்பு, கத்தரிப்பிஞ்சு ரசம் முதலானவை நம்மை அசத்தும் சில உணவு வகைகள். தஞ்சாவூர் விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கும் ஒரு துணை உணவு டாங்கர் பச்சடி. இது இல்லாமல் விருந்து இல்லை எனும் அளவிற்கு இதற்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

தஞ்சாவூர் டாங்கர் பச்சடியைச் செய்வது மிகவும் எளிது. ஆனால் சுவையோ பிரமாதமாக இருக்கும். இனி நாம் டாங்கர் பச்சடியை எப்படிச் செய்வது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுவோம்.

தஞ்சாவூர் டாங்கர் பச்சடி செய்யத் தேவையான பொருட்கள்:

தயிர் – 200 மில்லி

அரைக்க:

உளுத்தம்பருப்பு – 25 கிராம்

தாளிக்க:

கடுகு – சிறிதளவு

பச்சைமிளகாய் – இரண்ட நறுக்கியது

இஞ்சி – ஒரு துண்டு

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – ஒரு சிறு கொத்து

கொத்துமல்லி - சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் - சிறிதளவு

இதையும் படியுங்கள்:
சப்பாத்தி, நானுக்கு இதைவிட சிறந்த சைட் டிஷ் இல்லை! வீடே மணக்கும் வெஜ் திவானி ஹண்டி!
'Kollu Masiyal' for weight loss

செய்முறை:

முதலில் கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் அதில் உளுத்தம்பருப்பைப் போட்டு நன்றாக பொன்னிறமாக சிவக்கும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தயிரை விட்டு அதில் சிறிதளவு உப்பைப் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளுங்கள்.

வறுத்த உறுத்தம்பருப்பை மிக்சியில் போட்டு கொரகொரப்பாகவும் இல்லாமல் நைசாகவும் இல்லாமல் பதமாக அரைத்துத் தயிரோடு சேர்த்துக்கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் கடாயில் சிறிது எண்ணெயை விட்டு கடுகு, நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை முதலானவற்றைப் போட்டு நன்றாக தாளித்து தயிர்கலவையில் கொட்டிக் கலந்து கொள்ளுங்கள். பின்னர் நறுக்கிய கொத்துமல்லி இலையை பச்சடியின் மீதுத் தூவுங்கள். இப்போது தஞ்சாவூர் டாங்கர் பச்சடி ரெடி.

இதை பருப்புப்பொடி சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். அல்லது ரைத்தாவாகவும் பயன்படுத்தலாம். உங்களுக்கு எப்படி விருப்பமோ அப்படி இதைச் சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com