மணக்க மணக்க கும்பகோணம் ஃபில்டர் காபி: கெட்டியான டிகாஷன் பெற எளிய ரகசியங்கள்!

சரியான அளவு, தூள் தேர்வு மற்றும் சில எளிய குறிப்புகள் மூலம் ஹோட்டல் சுவையில் காபி தயாரிக்கலாம்.
ஃபில்டர் காபி - Coffee Decoction
ஃபில்டர் காபி - Coffee DecoctionAI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

கும்பகோணம் ஃபில்டர் காபி மணமாகவும் கெட்டியாகவும் வர 80% பிளண்டேசன் ஏ, பீபிரி காபி கொட்டைக்கு 20% சிகரி சேர்த்து வறுத்து அரைத்து பயன்படுத்த வேண்டும். காபித்தூள் சிறிது கொரகொரப்பாக இருக்க, காற்று புகாத டப்பாவில் சேமிக்க வேண்டும். ஃபில்டரை அடுப்பில் 10 விநாடி காட்டி, 3–4 ஸ்பூன் பொடி, சிட்டிகை சர்க்கரை, நன்றாகக் கொதித்த தண்ணீர் சேர்த்தால் கெட்டியான டிகாஷன் கிடைக்கும்.

மணக்க மணக்க பில்டர் காபி தயாரிக்க, கெட்டியான மற்றும் மணமான டிகாஷன் பெறுவதற்கு காபித்தூளின் தரம் மற்றும் அதில் சேர்க்கும் தண்ணீரின் அளவு மிகவும் முக்கியம். சிலர் ஃபில்டரில் கொஞ்சமாக காபிப்பொடி போட்டு நிறைய வெந்நீர் விடுவார்கள். இப்படி செய்தால் டிகாஷன் மிகவும் நீர்க்க தண்ணியாக வரும்.

இன்னும் சிலரோ டிகாஷன் கெட்டியாக இறங்குவதற்காக ஃபில்டரில் காபித்தூளை நிறைய அடைத்துப் போட்டு வெந்நீர் விடுவார்கள். இதனால் ஃபில்டரின் துளைகளில் பொடிகள் அடைத்துக்கொண்டு டிகாஷன் இறங்குவதில் சிரமம் ஏற்படும். எதற்கும் ஒரு அளவு உண்டு இல்லையா? வாருங்கள் டிகாஷன் கெட்டியாகவும் மணமாகவும் வருவதற்கு சில குறிப்புகளை இப்பதிவில் காணலாம்.

சரியான அளவு மற்றும் செய்முறை:

கடையில் ரெடிமேடாக காபித்தூள் வாங்குவதை விட காபிக் கொட்டையை மிஷினில் வறுத்து அரைத்து வாங்குவது நல்ல மணதுடன் இருக்கும். இதற்கும் ஒரு அளவு உண்டு. பிளண்டேசன் ஏ காபி கொட்டை 1/4 கிலோ + பீபிரி கொட்டை 1/4 கிலோ வாங்கி (இரண்டும் சமஅளவு இருக்கவேண்டும்) நம் கண்ணெதிரிலேயே வறுத்து அரைத்துத்தருவார்கள். ரொம்ப நேரமெல்லாம் ஆகாது. ஐந்து நிமிடத்தில் வறுத்து அரைத்து தந்துவிடுவார்கள். அதனுடன் கடைசியாக 100 கிராம் சிகரி (Chicory) சேர்த்து நன்கு கலந்து பேக் செய்து தருவார்கள்.

80% காபி தூளுக்கு 20% சிகரி கலந்தால் டிகாஷன் நல்ல நிறத்துடனும், கெட்டியாகவும் இருக்கும். நன்றாக பேக் செய்த காபித்தூளின் வாசனை இரண்டு மாதங்கள் வரை போகாது. நல்ல தரமான மணமான காபித் தூளுக்கு இதுவே சரியான அளவு முறை. கும்பகோணம் டிகிரி காபி வேண்டும் என்றால் சிகரியை தவிர்த்துவிடவும்.

இந்த டிகாஷன் சிறிது நீர்க்க இருந்தாலும், மணத்திலும் சுவையிலும் அடித்துக்கொள்ள முடியாது. கறந்த பசும்பால் கிடைத்தால் இன்னும் அருமை. பாலைப் பொங்க பொங்க காய்ச்சி அதில் டிகாஷனைப் பதமாக சேர்த்து, தேவையான அளவு சர்க்கரை கலந்து பருக ஆஹா என்ன ருசி! அனுபவித்து சுவைக்கலாம்.

கெட்டியான டிகாஷன் தேவை எனில் கட்டாயம் சிகரி சேர்க்க வேண்டும். 80% காப்பித்தூள் 20% சிகரி என்ற அளவில் சிகரி சேர்ப்பது நல்ல மணத்தையும் நிறத்தையும் தரும். மணம், நிறம், குணம் நிறைந்த அருமையான காபியை பருகுவதற்கு இதுவே சிறந்த அளவு.

ஃபில்டர் காபி - Coffee Decoction
ஃபில்டர் காபி - Coffee DecoctionAI Image

காபித்தூள் நைசாக இல்லாமல் சிறிது ரவை பதத்திற்கு கொரகொரப்பாக இருப்பது சிறப்பு. காற்று புகாத டப்பாவில் காப்பித்தூளை சேமிப்பது நீண்ட நாட்கள் வாசனையுடன் இருக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
பாட்டி வீட்டுச் சுவை மாறாத தட்டைப்பயறு வடை மற்றும் தயிர் வடை ரெசிபி!
ஃபில்டர் காபி - Coffee Decoction

அடுத்து டிகாஷன் எப்படி இறக்க வேண்டும் என்று பார்க்கலாம்:

ஃபில்டரில் அடைப்பு எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். அப்போதுதான் டிகாஷன் வேகமாக இறங்கும். இதற்கு ஒரு சிறிய டிப்ஸ் - தினமும் காலையில் பொடி போடுவதற்கு முன்பு பில்டரை அடுப்பில் 10 செகண்ட் காட்டிவிட்டு போட அடைப்பு எதுவும் ஏற்படாது. பிறகு காபித்தூள் 3 முதல் 4 பெரிய ஸ்பூன் அளவு எடுத்து பில்டரில் போட்டு ஒரு ஸ்பூன் அல்லது ஃபில்டர் பிரசரால் (Presser) சீராக பரப்பி லேசாக அழுத்திவிடவும்.

பலமாக அழுத்தினால் டிகாஷன் சரியாக இறங்காது. அதன் மேல் ஒரு சிட்டிகை (1/4 ஸ்பூன்) சர்க்கரையைத் தூவிவிடவும். இது டிகாஷனை மேலும் கெட்டியாக்கும். தண்ணீரை 1 கப் அளவு எடுத்து நன்கு தளதளவென்று கொதிக்க விட்டு ஃபில்டரில் விடவேண்டும். அப்பொழுதுதான் கெட்டியான டிகாஷன் கிடைக்கும்.

தரமான காப்பித்தூளை காற்று போகாத டப்பாவில் வைத்து பயன்படுத்த, அதன் மணம் இரண்டு மாதங்கள் வரை நீடிக்கும். முதலில் இறங்கும் முதல் டிகாஷன் மிகவும் கெட்டியாக இருக்கும். பிறகு மேலும் ஒரு அரை கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு இரண்டாம் டிகாஷன் இறக்கலாம்.

இதையும் படியுங்கள்:
Idli batter ratio: இனிமேல் கடையில் இட்லி வாங்கவே மாட்டீங்க... அவ்ளோ சாஃப்ட்டா வீட்லயே செய்யலாம்!
ஃபில்டர் காபி - Coffee Decoction

பாலைப் பொங்க பொங்க காய்ச்சிவிட்டு, ஒரு டம்ளரில் தேவையான அளவு காபி டிகாஷன், வெள்ளை சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து காய்ச்சிய பாலை விட்டு நன்கு நுரை வரும் அளவிற்கு காபியை ஆற்றி சூடாகப் பருக ஆஹா அமிர்தம்தான் போங்க! காபியின் சுவை நம் நாவில் நீண்ட நேரம் அப்படியே இருக்கும். பருகித்தான் பாருங்களேன்! என்ன மணம்! என்ன ருசி!

இந்த எளிய அளவுகள் மற்றும் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம், தினமும் உங்கள் இல்லத்திலேயே கடைகளில் கிடைப்பது போன்ற அடர்த்தியான, மணமிக்க கும்பகோணம் ஃபில்டர் காபியைச் செய்து அசத்த முடியும்.

logo
Kalki Online
kalkionline.com