பஞ்சு போன்ற மெதுவடை வீட்டிலேயே சுலபமாக செய்ய வேண்டுமா? இந்த 8 டிப்ஸைப் பின்பற்றுங்கள்!

கல்யாண வீட்டு சீக்ரெட்: மொறுமொறு மெதுவடை செய்ய 8 வழிகள்!
மெதுவடை - crispy vadai recipe,
மெதுவடை - crispy vadai recipe,
கல்பனா ராஜகோபால்

கல்பனா ராஜகோபால், பள்ளிப் பருவம் முதலே தமிழ் வாசிப்பிலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது கவிதைக்கு டாக்டர் அப்துல் கலாமிடமிருந்து வாழ்த்துக் கடிதம் பெற்றுள்ளார். மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியான இவரது கவிதை பரிசு வென்றது. பணி ஓய்வுக்குப் பின் கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

கல்யாண வீட்டு சாப்பாட்டில் வாழை இலையில் சூடான மெதுவடை கொண்டு வந்து வைத்தாலே தனி சந்தோஷம்தான்!

வெளியே லேசான மொறுமொறுப்பு, உள்ளே பஞ்சு போல மென்மை, சாப்பிடும்போது எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாத அந்த வடையின் ருசியே அலாதி. வீட்டில் நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் சில நேரங்களில் வடை கடினமாகவோ, அதிக எண்ணெய் குடித்தோ வந்துவிடும். இனி அந்தக் கவலைவேண்டாம். கல்யாண வீட்டு மெது வடை போல வீட்டிலேயே செய்ய எட்டு முக்கியமான குறிப்புகளைப் பார்க்கலாம்.

உளுந்து ஊறவைக்கும் நேரம் முக்கியம்!

மெது வடை செய்வதற்கு நல்ல தரமான முழு உளுந்தைப் பயன்படுத்துவது அவசியம். ஒரு கப் உளுந்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாகக் கழுவி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுமார் 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். உளுந்து நன்றாக ஊறியதும் தண்ணீரை முழுவதுமாக வடித்துவிட வேண்டும். மாவு அரைக்கும் போது தண்ணீரை ஒரே நேரத்தில் ஊற்றாமல், கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து அரைக்கவேண்டும்.

மாவு அரைக்கும் பக்குவம்!

மெது வடை பஞ்சு போல வருவதற்கு மாவு அரைப்பதுதான் மிக முக்கியமான விஷயம். கிரைண்டரில் உளுந்தைப் போட்டு, குறைந்த அளவு தண்ணீர் தெளித்து நன்றாகப் பொங்கி வரும் வரை அரைக்கவேண்டும். மாவு கெட்டியாகவும், அதே நேரத்தில் லேசாகவும் இருக்க வேண்டும். கையில் சிறிது மாவை எடுத்துத் தண்ணீரில் போட்டால் அது மிதக்கவேண்டும். இதுதான் சரியான பதம். மாவு அதிகம் தண்ணீராக இருந்தால் வடை வடிவம் சரியாக வராது; கெட்டியாக இருந்தால் வடை கடினமாகிவிடும்.

மாவைப் பிசையும் விதம்!

அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மிளகு, சீரகம் ஆகியவற்றைச் சேர்க்கலாம். இவற்றைச் சேர்த்த பிறகு மாவை நன்றாகக் கலக்கவேண்டும். மாவை கைகளால் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் நன்றாக அடித்துப் பிசைந்தால் காற்று கலந்து வடை மென்மையாக வரும். மாவில் முடிந்தவரை தண்ணீர் சேர்க்கக் கூடாது.

மெதுவடை - crispy vadai recipe,
மெதுவடை - crispy vadai recipe,

எண்ணெயின் சூடு சரியாக இருக்கட்டும்!

வடை எண்ணெய் குடிக்காமல் வருவதற்கு எண்ணெயின் சூடு மிகவும் முக்கியம். கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் காயவைக்க வேண்டும். சிறிதளவு மாவை எண்ணெயில் போட்டுப் பார்த்தால் அது உடனே மேலே மிதந்து வரவேண்டும்.

எண்ணெய் மிகவும் சூடாக இருந்தால் வடை வெளியே மட்டும் சிவந்து உள்ளே வேகாமல் போகும். சூடு குறைவாக இருந்தால் அதிக எண்ணெய் உறிஞ்சிவிடும். எனவே மிதமான சூட்டில் வடைகளைப் பொன்னிறமாகப் பொறித்தெடுக்க வேண்டும்.

அரைத்த மாவை நீண்ட நேரம் வைக்கவேண்டாம்!

மெது வடை மாவை அரைத்ததும் உடனடியாக வடை சுடுவது நல்லது. முன்கூட்டியே மாவு அரைத்து வைத்திருந்தால், அதைச் சரியான முறையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். மாவு புளித்துவிட்டால் வடையின் சுவையும் அமைப்பும் மாறிவிடும்.

இதையும் படியுங்கள்:
அடடா! கல்யாண வீட்டு அவியல் இவ்வளவு சுவையா இருக்க இந்த சின்ன ட்ரிக் தான் காரணமா?
மெதுவடை - crispy vadai recipe,

வெங்காயம் சேர்க்கும் நேரம் கவனம்!

வெங்காயம் சேர்த்தால் மெது வடைக்கு நல்ல மணமும் சுவையும் கிடைக்கும். ஆனால், வெங்காயத்தில் தண்ணீர்ச்சத்து இருப்பதால் மாவில் கலந்ததும் நீர்த்துப்போக வாய்ப்புள்ளது. எனவே வடை சுடுவதற்கு சற்று முன்புதான் வெங்காயம் சேர்க்க வேண்டும். கல்யாண வீட்டு வெள்ளை மெது வடை வேண்டுமென்றால் வெங்காயம் சேர்க்காமல் செய்யலாம்.

வடை தட்டும் அழகான முறை!

வாழை இலை அல்லது சிறிய பிளாஸ்டிக் கவரில் லேசாகத் தண்ணீர் தடவிக்கொள்ள வேண்டும். கையில் சிறிதளவு தண்ணீர் தொட்டுக்கொண்டு மாவை உருட்டி வைத்து, நடுவில் விரலால் சிறிய துளையிட்டு வடை தட்டலாம். மாவை மிகவும் மெல்லியதாகத் தட்டக்கூடாது. மிதமான தடிமனில் தட்டினால்தான் உள்ளே பஞ்சு போல வேகும்.

ஒரே நேரத்தில் அதிக வடைகள் வேண்டாம்!

கடாயில் ஒரே நேரத்தில் நிறைய வடைகளைப் போட்டால் எண்ணெயின் சூடு குறைந்துவிடும். இதனால் வடைகள் அதிக எண்ணெய் குடிக்கக்கூடும். எனவே கடாயின் அளவுக்கு ஏற்ப மூன்று அல்லது நான்கு வடைகளாகப் போட்டுப் பொறிப்பது நல்லது. வடை சுட்டதும் துளையுள்ள கரண்டியால்

எடுத்து, கடாயின் ஓரத்தில் சிறிது நேரம் வைத்திருந்து எண்ணெயை வடித்த பிறகு தட்டில் வைக்கவேண்டும்.

பாட்டி காலத்து ரகசியம்!

அந்தக் காலத்தில் பாட்டிமார்கள் மாவை அரைத்ததும் கைகளால் நன்றாக அடித்துப் பிசைந்து, சரியான பதத்தில் வடை தட்டுவார்கள். மாவில் சோடா உப்பு சேர்க்க வேண்டிய அவசியமில்லை. உளுந்தின் தரமும், அரைக்கும் பக்குவமும், எண்ணெயின் சூடும்தான் மெது வடையின் மென்மைக்குக் காரணம்.

இந்தக் குறிப்புகளைப் பின்பற்றி வடை சுட்டுப் பாருங்கள். வீட்டிலேயே கல்யாண வீட்டு மெது வடை தயார்! தேங்காய் சட்னி, சாம்பாருடன் சூடாகப் பரிமாறினால் சாப்பிடுபவர்கள் இன்னும் ஒன்று கேட்பது நிச்சயம்!

இதையும் படியுங்கள்:
கல்யாண வீட்டு தேன்குழல் சுவை ஞாபகம் இருக்கா? வீட்டிலேயே எளிதாகச் செய்வது எப்படி!
மெதுவடை - crispy vadai recipe,