தேவாமிர்தத்தை மிஞ்சும் தித்திப்பான 'முக்கனி பாயாசம்' ரகசியம் இதோ!

mukkani-payasam-recipe
mukkani-payasam-recipe
Published on

பொதுவாகப் பண்டிகை நாட்களில் சேமியா பாயாசம், ஜவ்வரிசி அல்லது பருப்புப் பாயாசம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்போம். ஆனால், தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான மா, பலா, வாழை என்ற முக்கனிகளை வைத்து ஒரு தேவாமிர்தம் போன்ற பாயாசம் செய்ய முடியுமா? 

கண்டிப்பாக முடியும்! சித்திரை மாதத்தில்தான் மாம்பழமும், பலாப்பழமும் சீசனில் அதிக அளவில் கிடைக்கும். இந்த முக்கனிகளின் இனிப்போடு, வெல்லம் மற்றும் தேங்காய்ப்பால் சேர்ந்து உருவாகும் 'முக்கனி பாயாசம்' உங்கள் நாவில் நீண்ட நேரத்திற்குச் சுவையைத் தக்கவைக்கும். 

தேவையான பொருட்கள்:

  • நன்கு கனிந்த மாம்பழம் - 1 

  • பலாச்சுளைகள் - 10 முதல் 12

  • வாழைப்பழம்  - 2

  • அச்சு வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 கப் 

  • கெட்டியான தேங்காய்ப்பால் - 1 கப்

  • தண்ணியான தேங்காய்ப்பால் - 1 கப்

  • நெய் - 3 டேபிள் ஸ்பூன்

  • முந்திரி, உலர் திராட்சை - தலா 15

  • ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன்

  • பச்சை கற்பூரம் - ஒரு சிறிய சிட்டிகை

செய்முறை!

பாயாசத்தின் முதல் படியே பழங்களைத் தயார் செய்வதுதான். மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, சதைப் பகுதியை மட்டும் மிக்ஸியில் போட்டுத் தண்ணீர் ஊற்றாமல் கெட்டியான விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பலாச்சுளைகளின் கொட்டைகளை நீக்கிவிட்டு, அதை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 

வாழைப்பழத்தையும் தோலுரித்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பழங்கள் எந்த அளவுக்குக் கனிந்து இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பாயாசம் இயற்கையான தித்திப்புடன் அமையும்.

அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து, 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றுங்கள். நெய் சூடானதும் நறுக்கி வைத்துள்ள பலா மற்றும் வாழைப்பழத் துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும். பழங்கள் நெய்யில் வதங்கும்போது வீடு முழுவதும் ஒரு அற்புதமான வாசனை பரவும். 

இதையும் படியுங்கள்:
மைக்ரோ கிரீன்ஸ்: சிறிய செடி, பெரிய ஆரோக்கியம்!
mukkani-payasam-recipe

பழங்கள் லேசாகக் குழைந்து வரும்போது, அரைத்து வைத்துள்ள மாம்பழ விழுதையும் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாகக் கிளறி விடுங்கள். இப்போது முக்கனிகளும் நெய்யோடு கலந்து ஒரு சுவையான கூட்டுப் பதத்திற்கு வந்துவிடும்.

அதேநேரத்தில் மற்றொரு அடுப்பில் வெல்லத்தைப் போட்டுச் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வையுங்கள். வெல்லம் முழுமையாகக் கரைந்ததும், அதை வடிகட்டி நேரடியாக நெய்யில் வதங்கும் பழக் கலவையில் ஊற்றிக் கொதிக்க விடவும். 

வெல்லமும் பழங்களும் ஒன்றிணைந்து கொதிக்கும்போது, எடுத்து வைத்துள்ள இரண்டாம் தேங்காய்ப்பாலை ஊற்றுங்கள். பாயாசம் நன்கு கொதித்து சற்று கெட்டியான பதத்திற்கு வரும். 

இப்போது அடுப்பை முற்றிலும் 'சிம்'மில் வைத்துவிட்டு, கெட்டியான முதல் தேங்காய்ப்பாலைச் சேர்க்க வேண்டும். முதல் பால் சேர்த்த பிறகு பாயாசம் கொதிக்கக் கூடாது; லேசாக நுரைத்துக் கொண்டு வரும்போதே ஏலக்காய்த் தூள் மற்றும் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்து அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நிலம் வாங்கும் போது ஜாக்கிரதை: ஒரு சிறிய முதலீடு வருமான வரி சிக்கலாக மாறியது எப்படி?
mukkani-payasam-recipe

இறுதியாக, ஒரு சிறிய தாளிப்புக் கரண்டியில் மீதமுள்ள நெய்யை ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையைப் பொன்னிறமாக வறுத்துப் பாயாசத்தில் கொட்டி அலங்கரிக்கவும். முக்கனிகளின் சுவையும், தேங்காய்ப்பாலின் மணமும், நெய்யின் சுண்டி இழுக்கும் வாசனையுமாக ஒரு பிரமாதமான 'முக்கனி பாயாசம்' தயார். 

சுடச்சுடப் பரிமாறுவதை விட, இதைச் சற்று ஆறவைத்துச் சாப்பிட்டால் இதன் சுவை பல மடங்கு அருமையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com