மைக்ரோ கிரீன்ஸ்: சிறிய செடி, பெரிய ஆரோக்கியம்!

Microgreens healthy foods
Microgreens
Updated on

ன்றைய காலத்தில் மக்கள் ஆரோக்கியமான உணவுகளைத் தேடி அதிக கவனம் செலுத்துகின்றனர். அந்த வகையில் தற்போது அதிகமாகப் பேசப்படும் ஒரு ட்ரெண்டிங்கான உணவு வகைதான் மைக்ரோ கிரீன்ஸ் (Microgreens). பெயருக்கேற்றாற்போல், இவை அளவில் மிகச் சிறியவை; ஆனால், சத்துக்கள் நிறைந்த கீரை வகையாகும்.

மைக்ரோ கிரீன்ஸ் என்றால் என்ன?

மைக்ரோ கிரீன்ஸ் என்பது காய்கறி அல்லது கீரை விதைகள் முளைத்து, சில நாட்களிலேயே அறுவடை செய்யப்படும் இளம் தாவரங்கள் ஆகும். பொதுவாக விதை போட்ட 7 முதல் 10 நாட்களுக்குள் சிறிய இலைகள் வெளிவரும். அந்த நிலையிலேயே அவற்றை அறுவடை செய்து உணவாகப் பயன்படுத்துகிறார்கள். இதை முழு கீரையாக வளர விடாமல், அதன் ஆரம்ப வளர்ச்சி நிலையிலேயே பயன்படுத்துவது இதன் சிறப்பம்சமாகும்.

முள்ளங்கி, புரோக்கோலி, முட்டைக்கோஸ், பாசிப்பயறு, கொத்தமல்லி, வெந்தயம் மற்றும் கடுகு போன்ற விதைகளைப் பயன்படுத்தி இவை வளர்க்கப்படுகின்றன.

ஊட்டச்சத்து நன்மைகள்

இந்தச் சிறிய மைக்ரோ கிரீன்ஸ் கீரைகளில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் ஒளிந்துள்ளன:

  • வைட்டமின்கள்: வைட்டமின் A, C, E மற்றும் K ஆகியவை இதில் மிக அதிகம்.

  • தாதுக்கள்: இரும்புச் சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ்.

  • ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் இதில் நிறைந்துள்ளன.

  • உடல் எடை குறைப்பு: இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. குறைந்த கலோரிகள் கொண்டிருப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

உணவில் சேர்க்கும் முறை

மைக்ரோ கிரீன்ஸை உணவில் பயன்படுத்துவது மிகவும் எளிது. பெரும்பாலும் இவற்றைச் சமைக்காமல் நேரடியாகச் சாப்பிடலாம்:

  • சாலட், சாண்ட்விச் மற்றும் சூப் போன்றவற்றில் சேர்க்கலாம்.

  • சாதாரண உணவின் மேல் தூவி அலங்கரித்துச் சாப்பிடலாம். இது உணவின் சுவையை அதிகரிப்பதோடு, உடலுக்கும் அபரிமிதமான சத்துக்களைத் தருகிறது.

ஒரு லாபகரமான சுயதொழில்

இன்று ஆரோக்கிய உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மைக்ரோ கிரீன்ஸை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றன. குறைந்த முதலீட்டில் தொடங்க முடியும் என்பதால், இது பலருக்கு ஒரு புதிய தொழிலாகவும் மாறி வருகிறது. ஆரோக்கியத்தையும் வருமானத்தையும் ஒரே நேரத்தில் தரக்கூடிய சிறந்த வாய்ப்பு இது.

வீட்டிலேயே வளர்ப்பது எப்படி?

மைக்ரோ கிரீன்ஸை வளர்க்க அதிக இடம் தேவையில்லை. வீட்டின் ஒரு சிறிய மூலையிலேயே இதை வளர்க்கலாம்.

  • தேவையானவை: சிறிய ட்ரேக்கள், கோகோபீட் (தேங்காய் நார் கழிவு) அல்லது மண், தரமான விதைகள் மற்றும் சிறிதளவு தண்ணீர்.

  • முறை: விதைகளைத் தட்டில் பரப்பி லேசாகத் தண்ணீர் தெளித்து, போதிய சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால் போதும். சுமார் 10 நாட்களில் ஆரோக்கியமான மைக்ரோ கிரீன்ஸ் அறுவடைக்குத் தயாராகிவிடும்.

குழந்தைகளுக்கு இயற்கையைப் பற்றியும், தாவரங்களின் வளர்ச்சி பற்றியும் கற்றுக்கொடுக்க இது ஒரு சிறந்த வழியாகும்.

இதையும் படியுங்கள்:
ஃபுல் மீல்ஸ் Vs. அன்லிமிடெட் மீல்ஸ்: எது நல்லது? டயட்டீசியன்ஸ் பரிந்துரைப்பது என்ன?
Microgreens healthy foods

"மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது" என்பது போல, மைக்ரோ கிரீன்ஸ் அளவில் சிறியதாக இருந்தாலும், அவை தரும் ஆரோக்கியம் மிகப் பெரியது. வருங்காலத்தின் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தில் மைக்ரோ கிரீன்ஸ் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com