
முருங்கைக்கீரையானது, குறிப்பாக பெண்களின் ஆரோக்கியத்திற்கு, பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிப்பது முதல் மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் அளிப்பது வரை முருங்கைக்கீரை பெண்களுக்கு பல்வேறு சக்தி வாய்ந்த பலன்களை தருகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்தசோகை, புரதச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு முருங்கை கீரையை உட்கொள்வது நல்லது. முருங்கை கீரையில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. மேலும் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது மற்றும் இரத்த சோகையை தடுக்கிறது. பெண்களுக்கு பொதுவான பிரச்சனையான மாதவிடாய் வலியின் போது முருங்கைக் கீரையை தேநீராகவோ அல்லது பொடியாகவும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைப்பது உறுதி.
40 வயதை கடந்த பெண்கள் கண்டிப்பாக வாரம் ஒருமுறை முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து கொள்வது அவர்களின் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. PCOS பிரச்சனை உள்ள பெண்களின் ஆண்டரோஜன் ஹார்மோன் அளவை குறைக்க முருங்கை கீரை உதவுகிறது. முருங்கை கீரையில் நிறைந்துள்ள இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் 40 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு வரும் சோர்வை எதிர்த்து போராட உதவுகிறது. மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம். இது முருங்கைக்கீரையில் அதிகளவு உள்ளது என்பதை பெண்கள் மறந்துவிடக்கூடாது.
முருங்கைக்கீரையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம். முருங்கைக்கீரையில் சூப், குழம்பு, பொரியல் செய்து சாப்பிட்டவர்கள் இந்த முறை முருங்கை கீரையில் தொக்கு செய்து சாப்பிட்டு பாருங்க. அப்புறம் அடிக்கடி செஞ்சி சாப்பிடுவீங்க. இந்த தொக்கு செய்வது மிகவும் சுபலம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள் :
முருங்கை கீரை - 2 கப்
புளி - விருப்பத்திற்கேற்ப
தனியா - 1 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 7
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு
தாளிக்க :
கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை :
முருங்கை கீரையை காம்பு இல்லாமல் நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தனியா, வெந்தயம், கடுகு, சீரகத்தை போட்டு, வாசனை வரும் வரை வறுத்து, ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை போட்டு வறுத்த பின்னர் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைக்கீரையை போட்டு வதக்க வேண்டும். அதனுடன் புளியையும் சேர்த்து வதக்கவும். கீரை சிறிது நேரம் வதக்கினால் போதுமானது. வதக்கிய கீரையை ஆறவைத்து மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
மீண்டும் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த முருங்கை கீரை விழுதை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, வறுத்து பொடித்த மசாலாவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வரும் போது இறக்கவும். இப்போது சூப்பரான முருங்கைகீரை தொக்கு ரெடி. இதை சூடான சாதத்தில் போட்டு சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்.... ஆஹா, அம்புட்டு ருசிதான் போங்க! ஆரோக்கியமானதும்தாங்க!