

நைவேத்திய உணவுகள்:
கம்பு வெல்லப் பொங்கல்
தேவையான பொருட்கள்:
கம்பு – 1 கப்
பாசிப்பருப்பு – ¼ கப்
வெல்லம் – 1 கப்
தேங்காய் துருவல் – ½ கப்
நெய் – 2 ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – ½ ஸ்பூன்
முந்திரி – 2 ஸ்பூன்
உலர்ந்த திராட்சை – 1 ஸ்பூன்
செய்முறை:
கம்பை நன்றாகக் கழுவி, 4 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து, கம்புடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி மென்மையாக வேகவைக்கவும்.
வெல்லத்தைச் சிறிது தண்ணீர் சேர்த்து உருக்கி, வடிகட்டி மீண்டும் காய்ச்சவும். வெல்லப்பாகை வேகவைத்த கம்புக் கலவையில் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
பின்னர் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்துகொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து பொங்கலில் சேர்க்கவும். நெய் மணத்துடன் இனிமையான கம்பு வெல்லப் பொங்கல் தயார். நவராத்திரி நைவேத்தியமாகப் படைத்து பரிமாறலாம்.
வாழைப்பழ நெய் அப்பம்
தேவையான பொருட்கள்:
பழுத்த வாழைப்பழம் – 2
அரிசி மாவு – 1 கப்
வெல்லம் – ¾ கப்
தேங்காய் துருவல் – ½ கப்
ஏலக்காய்த்தூள் – ½ ஸ்பூன்
எள் – 1 ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும். வாழைப்பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் அரிசி மாவு, வெல்லக்கரைசல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், எள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அப்பம் மாவு பதத்தில் கலக்கவும். மாவை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பணியாரக் குழியில் சிறிது நெய் ஊற்றி, மாவை முக்கால் அளவு நிரப்பி மிதமான தீயில் வேகவைக்கவும். ஒருபுறம் பொன்னிறமாக வந்ததும் திருப்பிப் போட்டு, இருபுறமும் நெய்யில் நன்கு வேகவைத்து எடுக்கவும்.
எளிதில் செய்யக் கூடிய வாழைப்பழத்தின் இயற்கையான இனிப்பும், நெய்யின் மணமும் இணைந்த இந்த அப்பம் நைவேத்தியத் தட்டில் மணமும் சுவையும் நிறைக்கும்.
ரோஜா அவல் பாயசம்
தேவையான பொருட்கள்:
அவல் – 1 கப்
பால் – 3 கப்
பனங்கற்கண்டு – ¾ கப்
தேங்காய்ப்பால் – ½ கப்
பன்னீர் ரோஜா இதழ்கள் – 1/4 கப்
ஏலக்காய்த்தூள் – ½ ஸ்பூன்
முந்திரி – 2 ஸ்பூன்
நெய் – 1 ஸ்பூன்
செய்முறை:
அவலைக் கழுவி 5 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
அடுப்பில் மிதமான தீயில் பாத்திரத்தில் பாலைச் சேர்த்து கொதிக்கவிட்டு அவலைப் போட்டு மென்மையாக வேகவைக்கவும்.
பனங்கற்கண்டை மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைக்கவும். பொடித்தப்பனங்கற்கண்டைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொதிக்கவிடவும்.
நன்கு கரைந்ததும் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
நெய்யில் வறுத்த முந்திரி, ரோஜா இதழ்களைச் சேர்த்து அலங்கரிக்கவும்.
ரோஜா இதழ்களின் மணமும், அவலின் சத்தும் இணைந்த இந்தப் பாயசம், நவராத்திரி நைவேத்தியத்திற்கு ஏற்ற இனிமையான படையல்.
வெற்றிலை சாதம்
தேவையான பொருட்கள்:
உதிரியான சாதம் – 2 கப்
வெற்றிலை – 5 No
தேங்காய் துருவல் – ¼ கப்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – ½ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி விழுது – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன
பொடித்த வேர்க்கடலை 1 கப்
செய்முறை:
முதலில் சாதத்தை குக்கரில் குழையாமல் வைத்து எடுத்து தட்டில் ஆறவிடவும்.
வெற்றிலையின் காம்பை நீக்கி, தேங்காய், மிளகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சியுடன் சேர்த்து அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பொடித்த வேர்க்கடலையை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பிறகு அதே எண்ணெயில் அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். உப்பு சேர்த்து, உதிரியாக வைத்த சாதத்தைப் போட்டு நன்றாகக் கலந்து இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
பொரித்த வேர்க்கடவையை மேலே தூவி விட்டு படைக்கவும்.
நெல்லிக்காய் சாதம்
தேவையான பொருட்கள்:
உதிரியான சாதம் – 2 கப்
நெல்லிக்காய் – 5 No
பச்சை மிளகாய் – 2 no
இஞ்சி விழுது – 1 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
வேர்க்கடலை – 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – ¼ ஸ்பூன்
நல்எண்ணெய் – 1½ ஸ்பூன்
செய்முறை:
முதலில் சாதத்தை குக்கரில் குழையாமல் வைத்து எடுத்து தட்டில் ஆறவிடவும்.
நெல்லிக்காயின் விதைகளை நீக்கி துருவிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, நெல்லிக்காய், மஞ்சள்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். அடுப்பை அணைத்து, உதிரியாக வைத்த சாதத்துடன் கலந்து தேவையான உப்பு சேர்க்கவும்.
நவராத்திரி நைவேத்தியத்திற்கு ஏற்ற சத்தான நெல்லிக்காய் சாதம்; வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.