
நவராத்திரிக்கு பிரசாதம் தருவதற்காக மெனக்கெட்டு சில பாரம்பரிய சமையல் வகைகளை செய்வது வழக்கம். சத்து நிறைந்த இந்த பிரசாதங்கள்தான் இந்த மாதத்தில் நவராத்திரி விழாவின் சிறப்பு அம்சமாக இருப்பது வழக்கம். நவராத்திரிக்காக ஒரு சின்ன காம்போ ரெசிபிகள் (Navaratri special Recipes!) உங்களுக்காக…
பால் பச்சரிசி பொங்கல்
தேவையான பொருட்கள்:
புதிய பச்சரிசி - 1/4 கிலோ
பால் - 3/4 லிட்டர் அல்லது மூன்று கப் வெல்லம் - 1/4 கிலோ
முந்திரி திராட்சை - தலா 8
ஏலக்காய்- 4
நெய் -2 டேபிள் ஸ்பூன்
பச்சைக் கற்பூரம் – சிட்டிகை
செய்முறை:
பச்சரிசியை நன்றாக கழுவி ஊறவைத்து அதனுடன் கெட்டியான காய்ச்சிய பால் சேர்த்து தேவையான நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவைத்து இறக்கவும். வெல்லத்தை சிறிது நேரில் இட்டு கரைத்து முதல் பாகு வரும் அளவிற்கு கொதித்ததும் குக்கரில் வெந்த பச்சரிசி சாதத்துடன் இந்த வெல்லப்பாகை ஊற்றி அடுப்பை சிறிய தீயில் வைக்கவும். ஒரு கடாயில் முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து பச்சரிசி பொங்கலில் சேர்த்து அத்துடன் பொடித்த ஏலக்காய் தூள் தேவையான நெய் ஊற்றி கிளறி ஓரளவு இளகியதாக இருக்கும்போதே அடுப்பை அணைத்து மேலே மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி அணைக்கவும். அடுப்பிலேயே சிறிது நேரம் வைத்திருந்து சிட்டிகை பச்சை கற்பூரம் இறுதியாக கலந்து மூடிவைக்கவும். மணமணக்கும் பால் பொங்கல் ரெடி.
மசாலா வெள்ளை சுண்டல்
தேவை:
வெள்ளை சுண்டல் - 1/4 கிலோ ( பெரியது)
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய்- 2
இஞ்சி- சிறு துண்டு
எண்ணெய் - தேவைக்கு
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு ,கடலைப்பருப்பு, சோம்பு- தலா ஒரு டீஸ்பூன்
மல்லி- 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
வேர்க்கடலை- 1டீஸ்பூன்
பெருங்காயம்- சிட்டிகை
கருவேப்பிலை கொத்தமல்லி அலங்கரிக்க
செய்முறை;
வெள்ளை சுண்டலை இரவே நீரில் ஊறவைக்கலாம். இல்லையெனில் காலையில் சுடுநீரில் போட்டு 3 மணிநேரம் ஊறவைக்கவும். நன்றாக ஊறினால் வெள்ளை சுண்டல் எளிதாக பூ போல வெந்து மலர்ந்திருக்கும். குக்கரில் 5- 6 சவுண்டுகள் விட்டு சுண்டலை வேகவைத்து இறக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, சோம்பு ஆகியவற்றை வறுத்து தனியாக பொடித்து வைக்கவும். வேர்கடலையையும் நன்கு சிவக்க வறுத்து தோல் அகற்றி கொரகொரப்பாக நீரின்றி அரைத்து வைக்கவும்.
மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், மிளகாய், துருவிய இஞ்சி போட்டு வதக்கி வேகவைத்த வெள்ளை சுண்டலை போட்டு அதனுடன் அரைத்த மசாலா பொடிகள், சிறிது பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கிளறி மேலே கொத்தமல்லித்தழை போட்டு அலங்கரித்து வைக்கவும். இது அதிக நேரம் அடுப்பில் இருக்க வேண்டியதில்லை.
ரெடிமேட் புளி சாதம்
தேவை:
புளி- 100 கிராம்
நல்லெண்ணெய்- 4 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு- 2டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 2 டேபிள் ஸ்பூன் வேர்கடலை -2 டேபிள் ஸ்பூன்
தனியா -2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் காய்ந்த
பூண்டு- 10 பற்கள்
வற்றல் மிளகாய் -காரத்துக்கு ஏற்ப
கடுகு ,பெருங்காயம் - தலா 1/4 டீஸ்பூன் கருவேப்பிலை -ஒரு கொத்து
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து வெறும் வாணலியில் துளி எண்ணெய் விட்டு கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை ஆகியவற்றை வறுத்து எடுக்கவும். அதேபோல் தனியே வெந்தயம் பெருங்காயத்தையும் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். புளியை சூடான நீரில் கரைத்துக்கொள்ளவும் அல்லது அப்படியே மிக்ஸியில் நீரூற்றி அடித்து வடிகட்டவும்.
அரிசியை ஊறவைத்து தேவைக்கும் சற்று குறைவாக நீரூற்றி பொலபொலவென்று சாதமாக வடித்து எடுத்து தாம்பாளத்தில் கொட்டி மேலே நல்லெண்ணெய் ஊற்றி ஆறவைக்கவும். இப்போது ஒரு வாணலியில் தேவையான எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, நறுக்கிய மிளகாய், நசுக்கிய பூண்டு போட்டு தாளித்து ஒன்றிரண்டாக அரைத்து வைத்த கடலை பருப்பு உளுத்தம் பருப்பு மசாலாவை சேர்த்து நன்கு வதக்கி புளித்தண்ணீரை ஊற்றி மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவைத்து இறக்கும்போது வெந்தயம் பெருங்காயம் சேர்த்த பொடியை தூவி இறக்கவும். அட்டகாசமான புளிசாதம் ரெடி.