

வேப்பம் பூ (Neem Flower) மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு இயற்கை வரமாகும். இது கசப்புச் சுவை கொண்டிருந்தாலும், அஜீரணம், வயிற்றுப் புழுக்கள், ஏப்பம், பசியின்மை, பித்தக் கோளாறுகள் மற்றும் தோல் வியாதிகளை குணப்படுத்த உதவுகிறது. பித்தத்தால் ஏற்படும் தலைவலி, குமட்டல், வாய்க்கசப்பு மற்றும் கண் எரிச்சலைக் குணமாக்கும். குடலில் தங்கியுள்ள நச்சுக் கிருமிகள் மற்றும் பூச்சிகளை அழித்து வயிற்றைச் சுத்தமாக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும் வேப்பம் பூவை ரசம், துவையல் செய்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
வேப்பம்பூ ரசம், வேப்பம்பூ துவையல் செய்வது மிகவும் எளிதானது. இதன் சுவையும் மணமும் அருமையாக இருக்கிறது! எல்லாவற்றிற்கும் மேலாக, இது உடல் நலத்திற்கும் நல்லது. இன்று இந்த இரண்டு ரெசிபி களையும் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..
வேப்பம் பூ ரசம்
வேப்பம்பூ ரசம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ உணவில் ஏதாவது ஒரு கசப்புச் சுவையைச் சேர்த்து கொள்வது நல்லது.
தேவையான பொருட்கள்:
வேப்பம் பூ - 2 டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு- தேவையான அளவு
வெல்லம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்கள் - 3
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
புளியை சூடான நீரில் போட்டு அரை மணிநேரம் ஊறவைத்த பின்னர் நன்றாக சாறு பிழிந்து தனியாக வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் வேப்பம்பூவை போட்டு நல்ல மணம் வரும் வரையிலும், அது அடர் சிவப்பு நிறமாக மாறும் வரையிலும் மிதமான அல்லது குறைந்த தீயில் வறுத்து அதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
தீய்ந்து விடக்கூடாது. மிதமான தீயில், நல்ல நறுமணம் வரும் வரை கவனமாக வறுக்கவும்.
அதே வாணலியில் நெய்யை ஊற்றி சூடானதும், கடுகு, காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போட்டு தாளித்த பின்னர் அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
அதனுடன் தேவையான அளவு உப்பு, வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும்.
கடைசியாக புளி பச்சை வாசனை போடனவும் அடுப்பை அணைத்துவிட்டு, வறுத்த வேப்பம்பூவை நன்றாக கைகளால் நசுக்கி சேர்த்து நன்கு கலக்கவும். வேப்பம்பூவைச் சேர்த்த பிறகு கொதிக்க வைக்க வேண்டாம். இப்போது சூப்பரான வேப்பம்பூ ரசம் ரெடி.
வேப்பம்பூ துவையல் :
வேப்பம்பூ துவையல் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். கசப்புத் தன்மை இல்லாமல், சுவையாகவும், எளிமையாகவும் இதனை எப்படி செய்வது என்று கீழே காணலாம்.
தேவையான பொருட்கள்:
காய்ந்த வேப்பம்பூ - 3 ஸ்பூன் (புது வேப்பம் பூவையும் பயன்படுத்தலாம், கிடைக்காதவர்கள் காய்ந்த வேப்பம் பூவை பயன்படுத்தலாம்.)
உளுந்தம் பருப்பு - 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
இஞ்சி - விரல் துண்டு
பூண்டு - 4 பல்
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன் (விருப்பத்திற்கு ஏற்ப)
வெல்லம் - சிறிய துண்டு (கசப்புத் தன்மையை சமன் செய்ய)
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு மற்றும் கறிவேப்பிலை
செய்முறை:
இஞ்சி, பூண்டை தோல் நீக்கி வைக்கவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், உளுந்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்துச் சிவக்க வறுக்கவும்.
அடுத்து அதில் வேப்பம்பூவைச் சேர்த்து, பூவின் நிறம் மாறும் வரை மிதமான தீயில் வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். கருகிவிடக்கூடாது.
அடுத்து அதே கடாயில் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அனைத்தையும் ஆறவிடவும்.
வறுத்த பொருட்கள் நன்றாக ஆறியதும், மிக்சிஜாரில் போட்டு அதனுடன் தேங்காய், புளி, வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது.
இறுதியாக, ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து துவையலில் சேர்த்து பரிமாறவும். இப்போது சூப்பரான சுவையான வேப்பம்பூ துவையல் ரெடி.
இந்த வேப்பம்பூ துவையல் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.