
காம்பு கத்தரி, மூக்குத்தி அவரை எனப்படும் ஒரு வகை கொடி காய்கறியில், பச்சை மூக்குத்தி, சிவப்பு மூக்குத்தி எனமொத்தம் இரண்டு வகை உள்ளது. இது கிராமப் புறங்களில் தானாகவே முளைக்கும் காய்கறியாகும். நமது பாரம்பரிய காய்கறிகளில் ஒன்றான இந்த மூக்குத்தி அவரையை காலப்போக்கில் மக்கள் பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டதால், இதைப்பற்றி பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை.
ஆனால், தற்போது அதன் மகத்துவத்தை மீண்டும் உணர்ந்த மக்கள் தங்கள் உணவில் சேர்த்து வருகின்றனர். மூக்குத்தி அவரையில் ஏகப்பட்ட மருத்துவகுணங்கள் உள்ளது. குறிப்பாக நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அற்புத சக்தி இதற்கு உண்டு. இந்த பதிவில் மூக்குத்தி அவரையை பயன்படுத்தி பொரியல் எப்படி செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மூக்குத்தி அவரை - 1 கப்.
சின்ன வெங்காயம் - 15.
பச்சை மிளகாய் - 2.
சீரகத்தூள் - ½ டீஸ்பூன்.
தேங்காய் - துருவியது சிறிதளவு.
எண்ணெய் - தேவையான அளவு.
உப்பு - சிறிதளவு.
கடுகு - ½ டீஸ்பூன்.
உளுந்து - ½ டீஸ்பூன்.
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்.
கருவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை:
முதலில் மூக்குத்தி அவரைக்காயை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொள்ளவும். பின்னர் அதை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் சிறிய கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து, கடுகு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதங்கியதும், அதில் பொடியாக நறுக்கிய மூக்குத்தி அவரைக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். அதன் பிறகு மஞ்சள் தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
இறுதியில் மூக்குத்தி அவரை நன்றாக வெந்ததும், அதில் துருவி வைத்துள்ள தேங்காயை தூவி மெதுவாக கிளறி அடுப்பை அணைத்தால் மூக்குத்தி அவரை பொரியல் ரெடி.