

சப்பாத்தி பூரிக்கு எல்லாம் இனி உருளைக்கிழங்கு மசாலா, காலிஃப்ளவர் குருமா தான் செய்ய வேண்டும் என்பதில்லை. பத்தே நிமிடத்தில் மணக்க மணக்க ருசியான வெங்காய மசாலா செய்து அசத்தலாம். இது சப்பாத்தி, பூரி, இடியாப்பம் போன்றவற்றிற்கு சூப்பரான சைடிஷ் ஆகும். இதை செய்வதும் எளிது. ருசியும் அபாரமாக இருக்கும். அனைவரின் பாராட்டையும் பெற்று விடலாம்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் 4
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
தனியாத் தூள் 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
கரம் மசாலா 1 ஸ்பூன்
தயிர் ஒரு கரண்டி
உப்பு தேவையானது
தாளிக்க: எண்ணெய் 3 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
அலங்கரிக்க: பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கஸுரி மேத்தி
செய்முறை:
2 வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு பெரிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கலர் மாறி வரும் வரை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு அரைத்த தக்காளி விழுதை சேர்த்து, இஞ்சி பூண்டு விழுதையும் போட்டு வதக்கவும்.
தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், தேவையான உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
ஒரு கரண்டி தயிரை விட்டு நன்கு கலந்து, வதக்கி வைத்துள்ள வெங்காயத் துண்டுகளை சேர்த்து அரை கப் தண்ணீரும் சேர்த்து கலந்து தட்டைப் போட்டு மூடி இரண்டு நிமிடங்கள் வைக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கஸுரி மெத்தி சேர்த்து இறக்கிவிட மிகவும் ருசியான சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் தயார்.
சுட சுட பரிமாற ஆஹா என்ன ருசி! என்று அனைவரின் பாராட்டையும் பெறலாம்.
குறிப்பு: தக்காளியை அரைப்பதற்கு பதில் தக்காளி பேஸ்ட்டையும் பயன்படுத்தலாம். பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் அதனை தவிர்த்து விடலாம். தயிருக்கு பதிலாக கடைசியாக எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் அளவில் கலந்தும் செய்யலாம்; ருசியாக இருக்கும்.