
பனங்கிழங்கு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன மற்றும் கொழுப்பு, கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது. பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது செரிமானம் மற்றும் நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையை குணபடுத்துகிறது.
பனங்கிழங்கில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள கால்சியம் வலுவான எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. பனங்கிழங்கில் மெக்னீசியம் அதிகளவு உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
பனங்கிழங்கில் அதிகளவு சத்துக்கள் உள்ளதால் கிராமப்புறங்களில் குறிப்பாக திருநெல்வேலி பகுதிகளில் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். தற்போது பனங்கிழங்கு சீசன் என்பதால் பனங்கிழங்கை வைத்து பல்வேறு ஆரோக்கியமான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று பனங்கிழங்கு புட்டு மற்றும் பனங்கிழங்கு பாயாசம் செய்முறையை பார்க்கலாம்.
1. பனங்கிழங்கு புட்டு
தேவையான பொருட்கள்:
பனங்கிழங்கு - 5
பூண்டு - 3 பல்
ப.மிளகாய் - காரத்திற்கேற்ப
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு
தாளிக்க:
கறிவேப்பிலை, எண்ணெய்- அரை டீஸ்பூன்
செய்முறை:
ப.மிளகாய், பூண்டு, சீரகத்தை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
பனங்கிழங்கு தோல் நீக்கி வேகவைத்து கொள்ளவும். கிழங்கு வெந்ததும் நாரை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய பனங்கிழங்கு துண்டுகளை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்கக்கூடாது. உதிரி உதிரியாக வரும்படி பொடித்துக்கொள்ளவும். (கிராமப்புறங்களில் பனங்கிழங்கை வேக வைத்து பின்னர் காய வைத்து செய்வார்கள்)
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அரைத்து வைத்த ப.மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போனவுடன் அதில் உதிரியாக பொடித்து வைத்த பனங்கிழங்கை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கிளற வேண்டும். உதிரி உதிரியாக வரும் போது இறக்கி பரிமாறவும்.
2. பனங்கிழங்கு பாயாசம்
தேவையான பொருட்கள்:
பனங்கிழங்கு - 5
கருப்பட்டி - 1 கப் (விருப்பத்திற்கேற்ப)
பச்சரிசி - 4 தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
முந்திரி, திராட்சை - விருப்பத்திற்கேற்ப
சுக்குத்தூள் - ஒரு பின்ச்
நெய் - தேவையான அளவு
செய்முறை:
பனங்கிழங்கை தோல், நார் நீக்கி துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக வைத்து கொள்ளவும்.
கருப்பட்டியில் அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கிளறவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைத்து கொள்ளவும்.
பச்சரிசியை 1 மணிநேரம் ஊறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
தேங்காயை துருவி பால் எடுத்து வைத்து கொள்ளவும். (திக்கான பால், 2-ம் பால்)
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து வைத்து கொள்ளவும்.
இப்போது அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2-ம் தேங்காய் பால், வடிகட்டிய பனங்கிழங்கு கரைசல், அரைத்த அரிசியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். அடிக்கடி கிளறி விடவும். இல்லையெனில் அடிபிடித்து விடும்.
அரிசி நன்றாக வெந்தவுடன் அதில் கருப்பட்டி பாகு, திக்கான தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
கடைசியாக சுக்குத்தூள், வறுத்த முந்திரி, திராட்டை, 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து இறக்கவும்.
இப்போது சூப்பரான பனங்கிழங்கு பாயாசம் ரெடி.