கல்யாண வீட்டு ருசியில் பருப்பு உருண்டைக் குழம்பு செய்வது எப்படி?

கல்யாண வீட்டு பருப்பு உருண்டைக் குழம்பு செய்வது எப்படி?
பருப்பு உருண்டைக் குழம்பு - Paruppu Urundai Kuzhambu
பருப்பு உருண்டைக் குழம்பு - Paruppu Urundai Kuzhambu
கல்பனா ராஜகோபால்

கல்பனா ராஜகோபால், பள்ளிப் பருவம் முதலே தமிழ் வாசிப்பிலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது கவிதைக்கு டாக்டர் அப்துல் கலாமிடமிருந்து வாழ்த்துக் கடிதம் பெற்றுள்ளார். மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியான இவரது கவிதை பரிசு வென்றது. பணி ஓய்வுக்குப் பின் கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

கல்யாண வீட்டு சாப்பாட்டில் சாம்பார், ரசம், மோர் குழம்பு என எத்தனை வகைகள் இருந்தாலும், பருப்பு உருண்டைக் குழம்புக்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. மணக்க மணக்க அரைத்த மசாலாவில், மென்மையான பருப்பு உருண்டைகள் ஊறி வரும்போது அதன் சுவையே தனிதான்!

வீட்டில் செய்யும்போது சில நேரங்களில் உருண்டைகள் குழம்பில் போட்டதும் உதிர்ந்துவிடும். சில சமயம் மிகவும் இறுக்கமாகவும் மாறிவிடும். இனி அந்தக் கவலை வேண்டாம். கல்யாண வீட்டு ருசியில் பருப்பு உருண்டைக் குழம்பு செய்ய நான்கு முக்கியமான குறிப்புகளைத் தெரிந்துகொள்வோம்.

எங்கே பிரசித்தம் இந்தப் பருப்பு உருண்டைக் குழம்பு?

தமிழகத்தின் பாரம்பரியச் சமையலில் பருப்பு உருண்டைக் குழம்புக்கு முக்கியமான இடம் உண்டு. குறிப்பாகத் தென் தமிழகத்தின் பல வீடுகளில் இது விரும்பிச் சமைக்கப்படும் உணவு. நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் வீட்டு சமையலிலும், சில பகுதிகளின் கல்யாண விருந்துகளிலும் இந்தக் குழம்புக்கு வரவேற்பு உண்டு.

ஒவ்வொரு ஊரிலும் மசாலா சேர்க்கும் முறையிலும், குழம்பின் கெட்டித்தன்மையிலும் சிறிய மாற்றங்கள் இருக்கும். ஆனாலும் பருப்பு உருண்டையின் மென்மையும், புளி மற்றும் மசாலாவின் மணமும் இதன் தனிச்சிறப்பு!

தேவையான பொருட்கள்:

பருப்பு உருண்டை செய்ய:

துவரம் பருப்பு – 1 கப்

கடலைப் பருப்பு – ½ கப்

காய்ந்த மிளகாய் – 4

சோம்பு – ½ டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

குழம்பு செய்ய:

சின்ன வெங்காயம் – 15

தக்காளி – 2

புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்

வெந்தயம் – ¼ டீஸ்பூன்

பூண்டு – 6 பல்

கறிவேப்பிலை – சிறிதளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

பருப்பு உருண்டைக் குழம்பு - Paruppu Urundai Kuzhambu
பருப்பு உருண்டைக் குழம்பு - Paruppu Urundai Kuzhambu

செய்முறை:

முதலில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை முழுவதுமாக வடித்துவிட்டு, காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகப் பிசையவும். சிறிய உருண்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 10 முதல் 12 நிமிடங்கள் வேகவைக்கவும்.

ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளியையும் சேர்த்து மசியும் வரை வதக்கவும்.

பிறகு மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் மற்றும் தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பச்சை வாசனை நீங்கி குழம்பு ஓரளவு கெட்டியானதும் வேகவைத்த பருப்பு உருண்டைகளை மெதுவாகச் சேர்க்கவும்.

மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால் மணக்க மணக்க கல்யாண வீட்டு பருப்பு உருண்டைக் குழம்பு தயார்!

இதையும் படியுங்கள்:
இந்த ஒரு பொடி போதும்... கல்யாண வீட்டு வத்தல் குழம்பு வீட்டிலேயே தயார்!
பருப்பு உருண்டைக் குழம்பு - Paruppu Urundai Kuzhambu

உதிராமல், மென்மையாக வர 4 முக்கியக் குறிப்புகள்!

1. பருப்பை சரியான அளவு ஊறவைக்க வேண்டும்!

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஊறவைக்க வேண்டும். அதிக நேரம் ஊறவைத்தால் அரைக்கும்போது பிசுபிசுப்பாக மாறிவிடும். எனவே சரியான நேரத்தில் தண்ணீரை வடித்துவிடுவது அவசியம்.

2. மாவை மிகவும் நைசாக அரைக்கவேண்டாம்!

பருப்பு மாவை கொரகொரப்பாக அரைக்கவேண்டும். தண்ணீர் அதிகம் சேர்த்தால் உருண்டை பிடிக்க வராது. மாவு தளர்வாக இருந்தால் சிறிது கடலை மாவு சேர்த்துப் பிசைந்து உருண்டை பிடிக்கலாம்.

3. உருண்டைகளை முன்கூட்டியே வேகவைக்க வேண்டும்!

பச்சை உருண்டைகளை நேரடியாகக் கொதிக்கும் குழம்பில் போட்டால் சில நேரங்களில் உதிர்ந்துவிடும். எனவே இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்த பிறகு குழம்பில் சேர்ப்பது நல்லது. இதனால் உருண்டைகள் வடிவம் மாறாமல் இருக்கும்.

4. குழம்பில் சேர்த்ததும் அதிகமாகக் கிளறக்கூடாது!

வேகவைத்த உருண்டைகளை குழம்பில் சேர்த்த பிறகு கரண்டியால் அடிக்கடி கிளறக்கூடாது. மிதமான தீயில் கொதிக்கவிட்டால் உருண்டைகள் குழம்பின் சுவையை நன்றாக உறிஞ்சி மென்மையாக மாறும்.

ஒரு சின்ன ரகசியம்!

கல்யாண வீட்டு பருப்பு உருண்டைக் குழம்புக்கு நல்லெண்ணெய்தான் கூடுதல் மணம் கொடுக்கும். இறுதியாக சிறிதளவு நல்லெண்ணெய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் அதன் வாசனை வீட்டையே மணக்கச் செய்யும்.

சூடான சாதத்தில் இந்தப் பருப்பு உருண்டைக் குழம்பை ஊற்றி, தொட்டுக்கொள்ள ஒரு அப்பளம் இருந்தால் போதும்... கல்யாண வீட்டு சாப்பாட்டை வீட்டிலேயே ருசித்த திருப்தி கிடைத்துவிடும்!

இதையும் படியுங்கள்:
கல்யாண வீட்டுப் பருப்பு உசிலி… பாட்டி முறையில் கட்டி தட்டாமல் உதிர உதிரச் செய்வது எப்படி?
பருப்பு உருண்டைக் குழம்பு - Paruppu Urundai Kuzhambu