

Potato Nuggets: வானம் இருட்டிக்கொண்டு வந்து, ஜன்னல் ஓரத்தில் சாரல் மழை அடிக்கும்போது, கையில் ஒரு சூடான டீயும், கூடவே கடித்துக்கொள்ள மொறுமொறுவென ஏதாவது ஸ்நாக்ஸும் இருந்தால் எப்படி இருக்கும்? அசைவப் பிரியர்களுக்குச் சிக்கன் என்றால், சைவப் பிரியர்களுக்கு உருளைக்கிழங்கு தான் ராஜா.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கை வேண்டாம் என்று சொல்பவர்களே இல்லை. கடைகளில் கிடைக்கும் Frozen நக்கட்ஸை வாங்கிப் பொரிப்பதை விட, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, ஃப்ரெஷ்ஷாக, ஆரோக்கியமாக நாமே ஒரு சூப்பரான 'பொட்டேட்டோ சீஸ் நக்கட்ஸ்' செய்யலாம். அது எப்படி என்று சுலபமாகப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நன்கு வேகவைத்த உருளைக்கிழங்கு - 3
துருவிய சீஸ் - அரை கப்
சோள மாவு - 2 ஸ்பூன்
பிரெட் தூள் - அரை கப்
காரத்திற்கு - சில்லி ஃப்ளேக்ஸ்
தேவையான அளவு உப்பு மற்றும் பொரிக்க எண்ணெய்.
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கைக் குக்கரில் விட்டு, மைய வேகவைத்துத் தோலுரித்துக்கொள்ளுங்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் உருளைக்கிழங்கைப் போட்டு, கட்டி இல்லாமல் நன்றாக மசித்துவிடுங்கள்.
இப்போது அதனுடன் துருவி வைத்திருக்கும் சீஸ், சோள மாவு, பிரெட் தூள், காரத்திற்குச் சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் தேவையான உப்பு சேர்த்துச் சப்பாத்தி மாவு போலக் கெட்டியாகப் பிசையுங்கள். தண்ணீர் ஊற்றத் தேவையில்லை, உருளைக்கிழங்கில் உள்ள ஈரப்பதமே போதும்.
இங்கேதான் ஒரு சின்ன ட்ரிக் இருக்கு. பிசைந்து வைத்த இந்த மாவை, ஒரு தட்டு போட்டு மூடி, அப்படியே ஃப்ரிட்ஜில் ஒரு 30 நிமிடம் வைத்துவிடுங்கள். இப்படிச் செய்வதால், மாவு நன்றாக இறுகி, எண்ணெயில் போடும்போது பிரிந்து போகாமல் இருக்கும்.
அரை மணி நேரம் கழித்து மாவை வெளியே எடுத்து, ஒரு தட்டையான பலகையில் வைத்து நீளமாக உருட்டுங்கள். பிறகு கத்தியால் உங்களுக்குத் தேவையான அளவில், ஒரே மாதிரியான சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.
கடைசியாக, வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, நக்கட்ஸைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுங்கள். வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உள்ளே சீஸ் உருகி சாஃப்ட்டாகவும் இருக்கும்.
ஆரோக்கியம் மற்றும் சுவை!
உருளைக்கிழங்கு என்றாலே வாய்வு என்று ஒதுக்கிவிட வேண்டாம். இதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதயத்திற்கும், எலும்புக்கும் நல்லது. குழந்தைகளுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுக்கும் மாவுச்சத்து இதில் நிறைந்துள்ளது. அளவோடு சாப்பிட்டால் அமிர்தம்தான்.
மழை பெய்யும் இந்த அழகான மாலையில், டிவியில் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டே, இந்தச் சூடான உருளைக்கிழங்கு நக்கட்ஸை தக்காளி சாஸில் தொட்டுச் சாப்பிட்டுப் பாருங்கள். அந்தச் சுவை உங்களை வேறொரு உலகத்திற்கே கூட்டிச் செல்லும். குழந்தைகளும் மிச்சம் வைக்காமல் தட்டைக் காலி செய்வார்கள். இன்றே முயற்சி செய்து பாருங்கள்.