
நமது சமையலுக்கு சுவை கூட்டும் பொருள்களில் முதன்மையாக இருப்பது பொடி வகைகளே. சாம்பார் பொடி, குழம்பு பொடி, ரசப்பொடி , இட்லி பொடி என பல்வேறு பொடி வகைகள் நம் சமையல் அறையில் தஞ்சம் புகுந்தால் மட்டுமே வஞ்சமின்றி வயிற்றுக்கு ருசியான உணவு வழங்கலாம். சமையலுக்கு ருசி சேர்க்கும் பொடி வகைகள் சிலவற்றை இங்கே அளவுகளுடன் காண்போம்.
சாம்பார் பொடி (முதல் வகை)
தேவை:
மிளகாய் வற்றல்- 200 கிராம் கொத்தமல்லி (தனியா) - 50 கிராம்
சீரகம் - 25 கிராம்
மிளகு - 10 கிராம்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறு நெல்லிக்காய் அளவு
உளுத்தம் பருப்பு - 10 கிராம் கடலைப்பருப்பு - 25 கிராம்
துவரம்பருப்பு - 10 கிராம்
புழுங்கல் அரிசி - 10 கிராம்
கருவேப்பிலை - 2 கொத்து
விரலி மஞ்சள் - 2
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
கொடுத்துள்ளவற்றில் மிளகாய் வற்றல், கருவேப்பிலை, உப்பு தவிர்த்து மற்றவற்றை அடிகனமான வெறும் கடாயில் தனித்தனியே மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். இறுதியில் சூடான வாணலியில் மிளகாய் வற்றல் கருவேப்பிலை உப்பு சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை அணைத்து சிறிது நேரம் விட்டு ஆறியதும் எடுத்து வறுத்து வைத்துள்ள மற்றவற்றில் கலந்து மிஷினில் அரைத்து சூடு ஆறியதும் காற்று புகாத டப்பாவில் எடுத்து வைக்கலாம்.
சாம்பார் பொடி (இரண்டாம் வகை)
தேவை:
மிளகாய் வற்றல் - 200 கிராம்
தனியா- 100 கிராம்
சீரகம் - 25 கிராம்
மிளகு - 25 கிராம்
பெருங்காயம்- கொட்டைப்பாக்கு அளவு கருவேப்பிலை- 2 கொத்து
செய்முறை:
கொடுத்துள்ளவற்றில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து மிஷினில் அரைத்து எடுத்து வைக்கவும். இதில் உப்பு சேர்ப்பதில்லை என்பதால் குழம்பில் தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
குழம்பு பொடி
தேவை:
மிளகாய் வற்றல் - 1/4 கிலோ
சீரகம் - 200 கிராம்
மிளகு - 50 கிராம்
கொத்தமல்லி - 200 கிராம்
செய்முறை:
இவை அனைத்தையும் நல்ல வெயிலில் காயவைத்து அரைத்துக் கொள்ளவும். இந்த குழம்பு பொடி புளிக்குழம்பு மற்றும் வதக்கி செய்யும் காய்கறிகளுக்கு உபயோகிக்கலாம்.
கறி மசால் பொடி
தேவை:
தனியா - 1 கப்
சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/4கப்
சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 11/2 கப்
மிளகு - 1/4 கப்
பட்டை - 4 துண்டுகள்
ஏலக்காய்- 6
கிராம்பு - 10
எள் - 1 டீஸ்பூன்
கசகசா- 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
மிளகாய் முதல் மற்ற அனைத்தையும் மிதமான தீயில் வைத்து கருகவிடாமல் பதமாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்த கறி மசால் பொடி அசைவம் மற்றும் உருளைக்கிழங்கு கறி போன்றவைகளுக்கு பட்டை, வங்கம் போடாமல் செய்ய ஏற்றது.
இட்லி பொடி
தேவை:
மிளகாய் வற்றல்- 50 கிராம்
உளுத்தம் பருப்பு - 2 கப்
கடலைப்பருப்பு - 1 கப்
பெருங்காயம் - கொட்டைப்பாக்கு அளவு பூண்டு- 1 கட்டி
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை- ஒரு கொத்து
செய்முறை:
கொடுத்துள்ள ஒவ்வொன்றையும் மிதமான தீயில் வைத்து தனித்தனியாக பொறுமையாக கை விடாமல் சிவக்க வறுத்து ஆறியதும் வற்றல் தவிர மற்ற எல்லாவற்றையும் நன்றாக அரைத்து உரித்த பூண்டு மற்றும் வற்றலையும் போட்டு பரபரப்பாக அரைத்துக் கொள்ளலாம். இது இட்லிப் பொடியில் ஒரு வகை. பூண்டு மணத்துடன் ருசிக்கும்.