
நம் உடலுக்கு அவசியம் தேவைப்படும் சத்துக்களில் ஒன்று ப்ரோட்டீன். ப்ரோட்டீன் நம் தலைமுடி, எலும்புகள், நகங்கள் போன்றவற்றை உருவாக்க, பசியைக் கட்டுப்படுத்த, மெட்டபாலிசம் அதிகரிக்க என பல வகையான செயல்களுக்கு உதவி வருகிறது. ப்ரோட்டீன் சத்து அதிகமுள்ள மதிய உணவு ரெசிபி இரண்டை இங்கு பார்ப்போம்.
கொண்டைக் கடலை புலவ் (Chickpea Pulav) ரெசிபி.
தேவையான பொருட்கள்:
1.பாசுமதி ரைஸ் 1 கப்
2.நறுக்கிய பெரிய வெங்காயம் 1
3.நறுக்கிய இஞ்சி துண்டு 2 டீஸ்பூன்
4.நறுக்கிய கேரட் ½ கப்
5.நறுக்கிய பீன்ஸ் ¼ கப்
6.நறுக்கிய உருளைக் கிழங்கு 1
7.நறுக்கிய பச்சை மிளகாய் 2
8.ஆலிவ் ஆயில் 2 டேபிள் ஸ்பூன்
9.லவங்கம் 3
10.பட்டை சிறு துண்டு 2
11.கருப்பு பெப்பர் கார்ன் 10
12.ஏலக்காய் 2
13.ஸ்டார் அனீஸ் 1
14.பிரிஞ்சி இலை 2
15.சீரகம் ½ டீஸ்பூன்
16.வேக வைத்த கொண்டைக் கடலை ¾ கப்
17.தண்ணீர் 2½ கப்
18.உப்பு தேவையான அளவு
19.கொத்த மல்லி இலைகள் ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:
பாசுமதி ரைஸ்ஸை பத்து நிமிடம் நீரில் ஊறவைத்து வடித்தெடுத்துக் கொள்ளவும். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெயை ஊற்றவும். எண்ணெயில் லவங்கம், பட்டை, பெப்பர் கார்ன், ஏலக்காய், ஸ்டார் அனீஸ், பிரிஞ்சி இலை ஆகியவற்றைப் போடவும். அவை சிவந்ததும் சீரகம் சேர்க்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி
சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதனுடன் கேரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு சேர்த்து நன்கு கலந்து விடவும். அதனுடன் வேகவைத்த கொண்டைக் கடலை, பாசுமதி ரைஸ், உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும். கலவை நன்கு கொதித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, பாத்திரத்தை ஒரு தட்டுப்போட்டு மூடிவிடவும்.
தண்ணீர் முழுவதும் வற்றியதும் அடுப்பை அணைத்து விடவும். பத்து நிமிடம் கழித்து, மூடியை திறந்து ஒரு ஃபோர்க்கினால் புலவ்வை மெதுவா கிளறி விட்டு, பின் மல்லி இலைகள் தூவி அலங்கரிக்கவும். ஆனியன் ரைத்தாவுடன் பரிமாறவும்.
மூங் டால் ரொட்டி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.பாசிப் பருப்பு ½ கப்
2.இஞ்சி 20 கிராம் துண்டு
3.பச்சை மிளகாய் 2
4.நறுக்கிய பெரிய வெங்காயம் 1
5.கோதுமை மாவு 1 கப்
6.சீரக தூள் ½ டீஸ்பூன்
7.பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை
8.கசூரி மேத்தி 1 டேபிள் ஸ்பூன்
9.உப்பு தேவையான அளவு
10.எண்ணெய் தேவையான அளவு
11.கொத்த மல்லி இலைகள் ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:
பாசிப் பருப்பை 40 நிமிடம் ஊறவைத்துப் பின் தண்ணீரை வடித்துவிட்டு, அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் சீரக தூள், பெருங்காயத்தூள், உப்பு, கோதுமை மாவு, கசூரி மேத்தி, மல்லி இலைகள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
ஐந்து நிமிடம் கழித்து, பிசைந்த மாவை உருண்டைகளாக செய்து,ரோலிங் பின் வைத்து மெதுவாக சப்பாத்திபோல் உருட்டிக் கொள்ளவும். பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஸ்பூனால் எண்ணெய் தடவி, உருட்டி வைத்த மூங் டால் ரொட்டிகளை ஒவ்வொன்றாக, இரண்டு பக்கமும் சிவந்து வரும்படி சுட்டு எடுக்கவும்.