
சோள ரவை வைட்டமின்கள், நல்ல கொழுப்பு மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும். சோளத்தில் இரும்பு மற்றும் வைட்டமின் பி, ஏ உட்பட அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன. இவை இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகின்றன. நார்ச்சத்து நிறைந்த சேளா ரவை செரிமானத்திற்கு உதவுகிறது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் சோளத்தை அடிக்கடி உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ரவை, அரிசி, கோதுமையில் கிச்சடியை செய்து இருப்பீங்க. ஆனால் இன்று சோள ரவை வைத்து எளிய முறையில் கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சோள ரவை - 1 கப்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1, சிறியது
பட்டாணி - விருப்பத்திற்கேற்ப
கேரட் - 1 சிறியது
பீன்ஸ் - 2
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3, (காரம் தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளலாம்)
கொத்தமல்லி - சிறிதளவு
முந்திரி -
நெய் - 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு,
பெருங்காயத்தூள் - சிறிதளவு
செய்முறை:
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பட்டாணி வேக வைத்து கொள்ளவும்.
* ப.மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
* சோள ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
* கடாயில் 2 டீஸ்பூன் நெய் விட்டு சூடானதும் அதில் முந்திரியை போட்டு வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
* அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் வதங்கி கண்ணாடி பதம் வந்ததும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் தக்காளி, ப.மிளகாய், சேர்த்து வதக்கவும்.
* அதில் மஞ்சள் தூள் சேர்த்த பின்னர் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ( 1 கப் சோள ரவைக்கு 2 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்)
* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடம் அதில் வறுத்து வைத்துள்ள சோள ரவை, வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும். அடிக்கடி கிளறி விடவும். இல்லையெனில் அடிபிடித்து விடும்.
* கடைசியாக தண்ணீர் வற்றி ரவை வெந்ததும், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, வறுத்த முந்திரி, மீதமுள்ள நெய் சேர்த்து ஒரு கிளறு கிளறி 5 நிமிடம் மூடி வைத்த பின்னர் பரிமாறவும்.
* இப்போது சத்தான சுவையான சோள ரவை கிச்சடி ரெடி.
* இதை தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். டிரை பண்ணி பாருங்க..