
ஸ்டஃப்டு வாழை இலை ராகி கொழுக்கட்டை :
கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு கேழ்வரகில் சத்தான ரெசிபிகளை செய்து கொடுப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
பாதாம் - 10
பிஸ்தா - 10
முந்திரி - 10
ஏலக்காய் - 2 ( இடித்தது)
நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - அரை கப்
வாழை இலை - தேவையான அளவு
செய்முறை :
பாதாம், முந்திரி, பிஸ்தாவை துருவிக்கொள்ளவும்.
வாழை இலையை சதுரமான துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
ஒரு கடாயில் கருப்பட்டி அல்லது நாட்டுச்சர்க்கரையை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
அதனுடன் இடித்த ஏலக்காயையும் சேர்த்து கொள்ளவும். நாட்டு சர்க்கரை கரைந்ததும், அதில் தேங்காய் துருவல், துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தாவை சேர்த்து நன்றாக கலந்து பூர்ணத்திற்கு தயார் செய்யவும்.
கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சூடான தண்ணீர் சேர்த்து கரண்டியால் நன்றாக கலக்கவும். இடியாப்ப மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சூட்டிலேயே மாவு பாதியளவு வெந்து விடும். இப்போது மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
வெட்டிய ஒரு வாழை இலை எடுத்து அதில் மாவை உருண்டை ஒன்றை வைத்து கைகளால் மெலிதாக தட்டவும். பூரியை போல் தட்ட வேண்டும். இப்போது கொஞ்சம் தேங்காய் பூர்ணத்தை வைத்து இலையை பாதியாக மடிக்கவும். இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் செய்யவும்.
இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி அதில் செய்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சூப்பரான ஸ்டஃப்டு வாழை இலை ராகி கொழுக்கட்டை ரெடி.
ஜவ்வரிசி பாதாம் மில்க் :
தேவையான பொருட்கள் :
திக்கான பால் - அரை லிட்டர்
ஜவ்வரிசி - கால் கப்
பாதாம் - கால் கப்
நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு - சுவைக்கு
ஏலக்காய் - 2
குங்குமப்பூ - 4
பாதாம், முந்திரி, பிஸ்தா துருவியது - தேவைக்கேற்ப
செய்முறை :
கொதிக்கும் நீரில் ஜவ்வரிசியை போட்டு 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து கொள்ளவும். நன்றாக கண்ணாடி பதம் வந்ததும் குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போட்டு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியாக வைத்து கொள்ளவும்.
மிக்சி ஜாரில் பாதாம், நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு, ஏலக்காய் போட்டு பவுடர் போல் நன்றாக அரைத்து கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி நன்றாக கொதித்ததும் அதில் குங்குமப்பூ மற்றும் அரைத்து வைத்த பாதாம் பவுடரை தேவையான அளவு சேர்த்து நன்றாக கலக்கவும்.
குங்குமப்பூ போட்டு பால் மஞ்சள் நிறமாக மாறியதும் அடுப்பை அணைத்து விட்டு அதில் வேக வைத்த ஜவ்வரிசியை போட்டு நன்றாக கலக்கவும்.
கடைசியான அதன் மேல் பாதாம், முந்திரி, பிஸ்தா துருவலை சேர்த்து பரிமாறவும். இந்த ஜவ்வரிசி பாதாம் பாலை குளிர வைத்தோ, சூடாகவோ அருந்தலாம். சூப்பராக இருக்கும்.
இப்போது சூப்பரான ஜவ்வரிசி பாதாம் பால் ரெடி.
எப்போதும் பாதாம் பால் செய்யும் போது ஒரே மாதிரி செய்யலாம். இப்படி செய்து பாருங்க. பசங்க வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க. விருப்பப்பட்டால் நட்ஸ் மற்றும் பழங்களையும் சிறிது துண்டுகளாக நறுக்கி சேர்த்து பருகலாம். டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும்.