
சமையல் ரெசிபியிலேயும், யூ டியூபிலும் தேவையான பொருட்களில் உப்பிற்கு மட்டும், பெரும்பாலும் அளவு குறிப்பிடமாட்டார்கள். உப்பு உங்கள் ருசிக்கேற்ப அல்லது திட்டமாக என்றிருக்கும். ஆனால், அந்த உப்புதான் சமையலின் சுவையை முடிவு பண்ணும்.
உறவும், உப்பும் ஒண்ணுதான். அதிகமானால் இம்சை. குறைந்தால் தொல்லை. சில பதார்த்தங்களில், உப்பு கம்மியாகிவிட்டாலோ, கூடி விட்டாலோ சரி செய்யவே முடியாது. என் அம்மா, குழம்பு கொதிக்கும்போதே, வாசத்தை வைத்து உப்பு பத்தாது, ஒரு சொல்லு உப்பு (சிட்டிகை உப்பு) சேருன்னும்.
மூணு விரலளவு (நடுவிரல், மோதிரவிரல், சுண்டு விரல் மூன்றையும் இணைத்து எடுக்கணும்) போடுன்னும் உப்பின் அளவை சொல்லுவாள். தோசைமாவு போன்ற அதிகமான அளவுள்ள உணவுகளில் ஒரு கை உப்பு அள்ளிப்போடு என்பாள். சில சமயம் மறுநாள் பொங்கிய மாவின் நிறத்தை வைத்தே அதில் உப்பு இருக்கிறதா இல்லையா என்பதை கணித்துவிடுவாள். மாவில் உப்புப் போட்டு கரைக்கவில்லை என்றவுடன், மாவில் சிறு துளி எடுத்து நாக்கில் வைத்து, "அட, ஆமால்ல" ன்னு என்னை அசடு வழிய வைத்து விடுவாள் உப்பு ஸ்பெஷலிஸ்ட் அம்மா.
புதிதாக சமையல் கத்துக்கிறவங்களுக்கு சொதப்புறதே உப்பு விஷயம்தான். பாடப் பாட ராகம் என்பதுபோல சமைக்க சமைக்க தான் உப்புப் பக்குவம். முதலில் நீங்களாக கணித்து எடுக்கும் உப்பு சரியாக இருக்க வாய்ப்பு கம்மி. கையில் எடுத்தவுடன் அதில் பாதியை போட்டு, கரைந்த பின் துளி டேஸ்ட் பார்த்து தேவையானால் போடுவது எளிது. பதார்த்தம் கட்டியாகும் போது உப்பு சேர்க்க வேண்டுமானால் அதற்கு டேபிள் சால்ட்தான் பெஸ்ட்.
உப்பு இல்லாம சமையலே இல்லை. ஸ்வீட்ல கூட சிட்டிகை உப்பு சேர்த்தால் திகட்டாது என்பார்கள். டென்ஷன் சூழ்ந்த காலத்தில் இருக்கிறோம். உணவு தயாரிக்கும்போது உப்பு போடும் சமயம், மொபைல் அழைக்கும். வாசலில் காலிங் பெல்லை யாராவது அழுத்துவார்கள். ஹாலிலிருந்து குடும்ப உறுப்பினர்கள் கூப்பிடுவார்கள். அட்டெண்ட் பண்ணி கிச்சனுக்குள் வந்தால் உப்பு போட்டேனா, போடலியா ஆம் இல்லை என பட்டிமன்றம் ரேஞ்சுக்கு மனசு குழம்பும். இதை தவிர்க்க ஒரு ஐடியா… உப்பு போட்டு சமைக்க ஆரம்பிக்கு முன் உப்பில் இரண்டு ஸ்பூன் போட்டு வையுங்கள். உப்பு போட்ட பின் ஒரு ஸ்பூனை எடுத்துவிடுங்கள். உப்பு போட்டது உறுதியாகும்.
இது நான் சொல்லி பக்கத்து வீட்டு அம்மா கடைபிடிக்கிறார்கள். டென்ஷன் ப்ரீயாக இருப்பதாகவும் சொன்னார்கள். பால்ய வயசுல, போர்த் தண்ணியோ, கார்ப்பரேசன் வாட்டரோ கிடையாது. பல இடங்களில் உள்ள கிணற்று நீரைதான் எடுத்து வருவோம்.
அப்போ, எதிர் வீட்டு அழகம்மா ஆச்சி மருமகளிடம், "சௌபாக்கியம், (சிவபாக்கியத்தை அப்படிதான் அழைப்பார்கள்) புளியமரம் கிணத்து தண்ணீ எடுத்துட்டு வந்தேன். பார்த்து சூதானமா உப்பு போடுன்னு சொல்லுவாங்க. ஒருநாள் இன்னிக்கு ராசா கிணத்து தண்ணின்னு ஒவ்வொரு கிணத்துக்கும் பெயர் வச்சிருப்பாங்க. வளர்ந்த பிறகுதான் புரிந்தது, உப்பு சுவையுள்ள தண்ணீருக்கு குறைவாக உப்புப் போடணும்ங்கிற முன்னெச்செரிக்கைன்னு. அப்போ விசேஷங்களில் வெளியூரிலிருந்து வரும் தவசுப்பிள்ளை முதலில் தண்ணீர் குடித்து, அதன் பின்தான் சமையலுக்கான உப்பின் அளவையே கணிப்பார்.
உயிரின்றி உடலுக்கு மதிப்பில்லை. உப்பின்றி உணவுக்கு உயர்வில்லை. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே. உப்புள்ள பதார்த்தம் பல்லக்கிலே.
உறவைப்போல் அளவோடு உணவில் உப்பு சேர்த்து நலமாய் வாழ்வோம்.