
எடையை குறைக்கும் அடை:
கோதுமை மாவு 1 கப்
சுரைக்காய் துருவல் 1/2 கப்
காரட் துருவல் 1/2 கப்
வெங்காயம் 1
பசலைக் கீரை 1/2 கப்
இஞ்சி துருவல் ஒரு ஸ்பூன்
உப்பு தேவையானது
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி சிறிது
மிளகுத்தூள் 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
சுரைக்காய், காரட், இஞ்சி ஆகியவற்றை துருவிக் கொள்ளவும். வெங்காயம், பசலை கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைப்போட்டு அத்துடன் சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். அதில் துருவிய சுரைக்காய், காரட், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய பசலைக் கீரை, வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு அடைமாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் சூடானதும் அடை மாவை விட்டு சிறிது தடிமனான அடைகளாக வார்த்து சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு குறைந்த தீயில் வைத்து வேகவிட்டு எடுக்கவும். இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் மிகவும் ருசியான மற்றும் சத்தான அடை தயார்.
அடையுடன் வெல்லம், கெட்டித் தயிர் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
கொள்ளு இனிப்பு உருண்டை:
கொள்ளு 1 கப்
பொடித்த வெல்லம் 3/4 கப்
ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் 1/4 கப்
நெய் சிறிதளவு
வாணலியில் சிறிதளவு நெய்விட்டு கொள்ளை லேசாக வறுத்தெடுக்கவும். பிறகு குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேக விட்டு எடுக்கவும். தேங்காய் துருவலை வாசம் வரும்வரை சிறிது நெய்விட்டு வறுத்தெடுக்கவும். பிரஷர் இறங்கியதும் நீரை வடித்து பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து அத்துடன் வறுத்த தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு கிளறி சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து வைக்க மிகவும் ருசியான மற்றும் சத்தான கொள்ளு இனிப்பு உருண்டை தயார்.
பிடிகருணை மசியல்:
பிடி கருணை கால் கிலோ
சின்ன வெங்காயம் 10
பூண்டு 4 பற்கள்
தக்காளி 2
புளி எலுமிச்சையளவு
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
சாம்பார் பொடி 2 ஸ்பூன்
வெல்லம் சிறிதளவு
தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய்
பிடிகருணையை மண்போக நன்கு அலம்பி, வேகவைத்து, தோல் உரித்து மசித்துகொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி போன்றவற்றைப் பொடியாக நறுக்கவும். புளியை நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கி நீர்க்க கரைத்த புளியை விட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் மசித்த கருணைக் கிழங்கை சேர்த்து சாம்பார் பொடி போட்டு புளி வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். மசியல் சற்று கெட்டியானதும் பிடித்த வெல்லம் சிறிது சேர்த்து சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்க மிகவும் ருசியான பிடிகருணை மசியல் தயார்.
சூடான சாதத்தில் சிறிது நெய்விட்டு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.