
பச்சை மிளகாயைப் பயன்படுத்தி மோர் மிளகாய் தயாரிக்கும்போது காரம் அதிகமாக இருக்கும். காரம் குறைவாக இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள் பஜ்ஜி தயாரிக்க உபயோகிக்கும் பெரிய சைஸ் மிளகாயில் மோர் மிளகாய் போடலாம்.
குழம்பு, சாம்பார், கூட்டு, கிச்சடி செய்யும்போது தக்காளிப்பழங்களை பொடியாக நறுக்கிப் போட்டால் சீக்கிரம் வெந்துவிடும், சுவையாகவும் இருக்கும்.
பாகற்காய் குழம்பு, அல்லது பிட்லை செய்யும்போது சில துண்டுகள் கேரட்டையும் சேர்த்துப்பாருங்கள். கசப்பு துளிக்கூட இருக்காது.
பேனாவில் மை நிரப்ப உபயோகிக்கும் இங்க்ஃபில்லர் ஒன்றிரண்டு வாங்கி சமையலறையில் வைத்துக் கொள்ளுங்கள். எஸ்ஸன்ஸ் வகைகள், சோயா சாஸ் போன்றவற்றை சரியான அளவுகளில் சமையலில் சேர்க்க பயன்படும்.
ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து பயன்படுத்தும் தயிர், சிலருக்கு சரிப்பட்டு வராது. அப்படிப்பட்டவர்களுக்கு சாப்பிடுவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னர் தயிரை உறை ஊற்றினால் புளிக்காமல் தயிர் தோய்ந்துவிடும்.
கறிவேப்பிலை இலைகளை ஈரம்போக உலர்த்தி, மிக்ஸியில் பொடி செய்து வைத்துக்கொண்டால் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
குலோப் ஜாமூனுக்கு மாவு பிசையும்போது தண்ணீருக்கு பதில் பால் சேர்த்துப் பிசைந்தால் உருண்டைகள் உதிர்ந்து போகாமல் இருக்கும்.
சமையலில் தேங்காய்ப்பால் பயன்படுத்துபவர்கள், முதல் நாளே தேங்காயை மட்டும் நன்கு மிக்ஸியில் அரைத்து, அப்படியே காற்றுப்புகாத டப்பாவில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். அடுத்த நாள் சமைக்கும்போது தேங்காய்ப்பால் எடுத்தால் ஃ ப்ரெஷ்ஷாக இருப்பதுடன் வேலையும் சீக்கிரம் முடியும்.
கட்டிப் பெருங்காயத்தை சாம்பாரில் சேர்ப்பதாக இருந்தால், பருப்பை வேகவைக்கும்போதே அதனுடன் சேர்த்துவிடுங்கள். இதனால் மணம் தூக்கலாக இருப்பதுடன் குறைந்த அளவு பெருங்காயமே போதுமானதாக இருக்கும்.
இட்லி தோசைக்காக மதியம்தான் மாவு அரைத்தீர்கள். ஆனால் இரவே இட்லி, தோசை தயாரிக்க வேண்டுமானால், குக்கரில் இருக்கும் சூடான நீரில் மாவு பாத்திரத்தை வைத்தால் சட்டென்று மாவு புளித்து இட்லி, தோசை வார்க்க தயாராகிவிடும்.
முறுகலான தோசை வேண்டுமா? ஒரு டம்ளர் உளுந்துக்கு, இரண்டு ஸ்பூன் துவரம்பருப்பும், ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பும் சேர்த்து ஊற வைத்து அரைத்தால் போதும். முறுகலான தோசை ரெடி.
தோசைக்கல்லின் ஓரம் எண்ணெய்க்கறை படிந்து இறுகிப் போய்விட்டதா? அடுப்பை ஏற்றி தோசைக்கல்லின் விளிம்புப் பகுதியை மட்டும் எரியும் தீயில் வட்டமாக சூடேற்றி, உடனே ஒரு மரக்கரண்டியால் சுரண்டினால், இறுகியுள்ள பிசுக்குப்பகுதி இளகி உதிர்ந்துவிடும்.